இந்த மடலை வாசிக்கும் வேளை நீங்கள் மிகுந்த தேகாரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தித்தவனாக தொடர்கின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினரே!
நான் உங்களைப்போல் இந்த கல்முனை மண்ணில்
பிறந்து காலம் காலமாக நீங்கள் சார்ந்த கட்சிக்கும், விசேடமாக நீங்கள்
போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் உங்களது வெற்றிக்காக பிரச்சாரம் செய்து
வாக்களித்த ஒருவன் என்ற முறையிலும், மிகுந்த உரிமையுடன் இந்த மடலை
எழுதுகின்றேன்.
தென்கிழக்கின்
தலைநகர் என்று இலங்கையிலும் ஏன் சர்வதேசத்திலும் பேசப்படும் நமது
கல்முனையின் நீண்ட கால வரலாற்றையும், அது அபிவிருத்தி கண்டுவந்த
வேகத்தையும் சுதந்திரத்துக்கு பின் எம்.எஸ்.காரியப்பர் முதல் இடைப்பட்ட
எம்.சீ.அஹமட், ஏ.ஆர்.மன்சூர் மற்றும் எம்.எச்.எம்.அஸ்ரப் , பேரியல்
அஸ்ரப்,எம்.எம்.முஸ்தபா போன்றோரின் காலப்பகுதியில் கல்முனை கண்ட
அபிவிருத்தியும், இப்போது உங்களது ஆட்சிக்காலப்பகுதியில் மாநகர முதல்வராக
இருந்த போதும் தற்போது பாரளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நிலையிலும், மேல்
பெயரிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரவரது காலப்பகுதியில்
மேற்கொண்ட அபிவிருத்திகளை விட நீங்கள் குறைவான அபிவிருத்தித் திட்டங்களையே
செய்துள்ளதாக உங்களுக்கு வாக்களித்த மகாஜனங்கள் முனுமுனுப்பது அநேகர்
காதுகளுக்கு கேட்கின்றது.
ஒரு காலத்தில் நீங்கள் அரசின் எதிர்
ஆசனத்தில் இருந்தீர்கள் அந்த சந்தர்ப்பங்களில் மக்கள், அபிவிருத்தி
தொடர்பில் உங்களிடம் பெரிதாக எதிர்பார்க்க வில்லை. ஆனால் தற்போது அரசின்
பங்காளியாக இருக்கின்றீர்கள் அதையும் விட இந்த கல்முனை தொகுதியின்
அபிவிருத்தி குழு தலைவராகவும் இருக்கின்றீர்கள், இன்றுவரை பாரிய
அபிவிருத்தித் திட்டங்கள் எதையும் ஆரம்பித்து நிறைவேற்றியதாக காணவில்லை என
கல்முனை மக்கள் மிகவும் ஆதங்கப்படுகிறார்கள்.
யார் விரும்பினாலும் சரி
விரும்பாவிட்டாலும் சரி தற்போது கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துபாவர்
நீங்களே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்முனையின் அமானிதம் உங்களால்
பேனப்பட்டுள்ளதா என உங்களது உள்ளத்தை நோக்கி நீங்களே கேள்வி
கேட்டுப்பாருங்கள். காலத்துக்கு காலம் நீங்களும் எதாவது செய்ய வேண்டும் என
சில திட்டங்களை கொண்டு வருகின்றீர்கள் ஆனால் முடிந்ததாக காணவில்லை.
கிழக்கு மாகாண சபையை அமைக்கும் போது கல்முனைக்கு கரையோர மாவட்டத்தை பெற்று
விட்டோம் என மார்தனீட்டிர்கள் எங்கே நமது கல்முனை கரையோர மாவட்டம்?
இன்னும் எத்தனையோ கேள்விகள் …………..
கடந்த சில தினங்களாக புதிய செய்தி ஒன்று
அடிபடுகின்றது அதுதான் உங்களது முயற்சியால் 51 வேலைத்திட்டங்களுடன் பாரிய
வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மிக மகிழ்வான செய்தி உங்களது
முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
கல்முனை தொகுதி, பாரிய தேவைப்பாடுகளுடன்
காத்துக்கிடக்கின்றது. கடந்த சுனாமி நமது பகுதியை பாரிய பின்னடைவுக்குள்
தள்ளியுள்ளது கல்முனைக்கு எத்தனையோ தேவைகள். அவற்றில் இரண்டு தேவைகள்
தொடர்பில் இங்கு நாங்கள் வாக்களித்த எங்களது பாராளுமன்ற உறுப்பினருக்கு
கோரிக்கை முன் வைக்கின்றேன்.
- கடந்த சுனாமியின் பின்னர் சாய்ந்தமருதை ஊடறுத்துச்செல்லும் தோணாவை அபிவிருத்தி செய்வது தொடர்பில் நீங்கள் முதல்வராக இருந்த சந்தர்ப்பத்தில் ‘ஜெயிக்கா’ நிறுவனத்தின் திட்டத்தின் கீழ் வரையப்பட்ட தோணா அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துங்கள்.
தோணா தற்போது கல்முனையின் நரகமாக உள்ளது.
இதனை விட்டு விட்டு செய்யப்படும் எந்த அபிவிருத்தியும் நிறைவான
அபிவிருத்தியாக இருக்காது என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
- சுனாமியின் போது கல்முனை முஸ்லீம் பிரிவில் 1730 பேரும் கல்முனை தமிழ் பிரிவில் 1364 பேரும் சாய்ந்தமருதில் 770 பேருமாக மொத்தம் 3904 பேர் நமது கல்முனை பிரதேசத்தில் உயிரிளன்தனர். சுமார் 5000 பேர் காயமடைந்தனர். பலகோடிக்கணக்கான ரூபாய்கள் பொறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. நமது நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனைத்தொகுதி தவிர்ந்த எல்லா பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு அரசினால் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் அபிவிருத்திக்குழு தலைவராக இருக்கும் கல்முனை பிரதேசத்தில் தகரக்குடில்களில் மக்கள் இன்னும் வாழ்கிறார்கள். இவர்களுக்கான இருப்பிட வசத்திகள் செய்து கொடுப்பது தொடர்பில் உங்களது 51 வேலைத்திட்டத்தில் உள்ளடக்கி இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நமது பிரதேசத்தின் சன நெரிசலையும்
இடத்தட்டுப்பாட்டையும் நீங்கள் அறிவீர்கள். மிகக்குறுகிய நமது கல்முனை
பிராந்தியத்தின் நிலமானது சுனாமியின் பின்னர் கடலில் இருந்து 65 மீட்டர்
பிரதேசம் மக்கள் குடியிருக்க முடியாத பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதனை
கரையோர பாதுகாப்பு திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. இதனால் நமது
நிலப்பிரதேசம் இன்னும் குறுகியுள்ளது. இப்படியான சுழலில் எதிர்காலத்தில்
ஏற்படப்போகும் இடத்தட்டுப்பாடுக்கு நீங்கள் சரியான தீர்வு ஒன்றைக்
காணவேண்டிய சுழலில் உள்ளீர்கள்.
எங்களுக்கு மேற்கே இருக்கும் வயல்
பிரதேசத்தில் ஒரு பகுதியை மக்கள் குடியிருக்கக்கூடிய பிரதேசமாக மாற்ற
வேண்டியது காலத்தின் தேவையாகும்.
சாய்ந்தமருதை பொறுத்தவரை சுனாமி
வீட்டுத்திட்டத்துக்காக கரைவாகு வட்டையின் 50ஏக்கர் நிலம் அரசால்
பெறப்பட்டு அதில் அவர்களுக்கான வீட்டுத்திட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்க்கு மேலதிகமாக சுனாமியால்
பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் சுமார் 1300 குடும்பத்தினர் சாய்ந்தமருது
சுனாமி வீட்டுத்திட்டத்துக்கு அருகில் சாய்ந்தமருது விவசாய
திணைக்களத்த்தினால் பயிர் செய்கைக்கு பொருத்தமில்லாதது
(பள்ளம்,சதுப்பு,உப்பு சார்ந்த மண்) என நிராகரித்த நிலத்தில் 166 ஏக்கரை
நிலத்தை 5 பேச் துண்டங்களாக கொள்வனவு செய்துள்ளனர். இதனை நிரப்பி மக்கள்
குடியிருப்புகளை அமைப்பதில் சுற்று நிருபம் ஒன்று தடையாக இருக்கின்றது
செய்கைக்கு பொருத்தமில்லாத இந்த 166 ஏக்கரையும் கொள்வனவு செய்துள்ள 1300
குடும்பத்தினருக்கும் நிரப்பி குடியிருப்புகளை அமைக்க அனுமதி வழங்கும்
பட்சத்தில் இந்த பிரதேசத்தின் நிலத்தட்டுப்பாடு ஓரளவு நீங்குவதுடன்
சுகாதாரமிக்க சிறந்த நிலை ஒன்றும் ஏற்படும்.
பணிவுடன்
அபூ ஆதில்

Post a Comment