
நாட்டின் சாதாரண சட்டம் தங்களுக்கு செல்லுபடி அற்றது என்ற நினைப்பில் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தாரும் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரின் முன்னுதாரணத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,
´அமைச்சர்கள், அவர்களது பிள்ளைகள், மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மனித கொலை, ஆசிரியர்களை துன்புறுத்தல், பாலியல் வல்லுறவு, சிறுவர் துஸ்பிரயோகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்களுக்கு தண்டனை இல்லை.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆசிரியையை மண்டியிட வைத்தமை, அக்குரஸ்ஸ, கஹவத்த பகுதிகளில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு, கொலை என்பவை இதற்கு உதாரணம்.
மேர்வின் சில்வாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீசுக செயலாளர் மைத்திரிபால சிறிசேன கூறியபோதும் அண்மையில் அவருக்கு சிறந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் உள்ள குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை இல்லை. மாவனெல்ல பிரதேச சபைத் தலைவருக்கு மாத்திரமே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் அவர் ராஜபக்ஷ ஆட்சியை விமர்சித்தமையாகும். ராஜபக்ஷ குடும்பத்தின் அநீதிகள் குறித்து கதைக்க தனியொரு செயற்திட்டம் தேவை. நாமல் ராஜபக்ஷ சட்டக்கல்லூரியில் முதல் வருட பரீட்சையை குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து எழுதியதுடன் இரண்டாம், மூன்றாம் வருட பரீட்சைகள் எழுதும்போது இரு சட்டத்தரணிகள் அவர் வசம் உதவிக்கு இருந்தனர்.
இது குறித்து சக மாணவர் துஷார ஜயந்த 2012.12.03 அன்று முறைப்பாடு செய்தார். ஆனால் அதை கல்லூரி பதிவாளர் கணக்கெடுக்கவில்லை. இன்று அவர் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் அண்மையில் கல்வித் திணைக்கள செயலாளர், வாழைத்தோட்டம் பொலிஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவையும் கணக்கிலெடுக்கப்படவில்லை.
கடந்த 2011 மார்ச் 3ம் திகதி துஷார கடத்தப்பட்டார். அதற்கு கொஹுவல பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு என தெரியவந்தது. கடத்தப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் துஷார இன்று அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற றகர் போட்டியில் யோசித்த ராஜபக்ஷ போட்டி நடுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சாதாரண சட்டத்தின் கீ்ழ் இவை நடப்பது எப்படி? றகர் சம்மேளனத்தால் அதன் சட்டத்திட்டங்களுக்கு அமைய போட்டித்தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் ராஜபக்ஷ புத்திரர்களுக்கு அவ்வாறு செய்யவில்லை. போட்டித்தடை விதிக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறியபோதும் ராஜபக்ஷ குடும்பத்தின் நடிப்புக் குறித்து நான் அங்கு அறிவேன்.´
இவ்வாறு மங்கள சமரவீர தெரிவித்தார்.
(அத தெரண - தமிழ்)
Post a Comment