தேசிய ஐக்கிய முன்னணி:Media Unit
இம்மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கல்முனை நகரில் பொது பல சேனா பொதுக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான
ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக
தேசிய ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
பொது பல சேனா
என்பது இந்த நாட்டில் மதவாதத்தையும் இனவாதத்தையும், அடிப்படைவாதத்தையும்
தூண்டி மக்களின் அமைதி, சகவாழ்வு என்பனவற்றுக்கு சாவு மணி அடிக்கும்
வகையில் நாட்டின் சட்டம் ஒழுங்கு, ஜனநாயக விழுமியங்கள் என்பனவற்றுக்கு
எதிராக செயற்படும் ஒரு குழப்பவாத அமைப்பு என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.
முஸ்லிம் தமிழ் மக்கள் செறிவாகவும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் தற்போது
வாழ்ந்து கொண்டிருக்கும் கல்முனை நகரில் இந்த குழப்பவாதிகளுக்கு என்ன வேலை?
ஏன்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி அதன்
அதிகார வரம்பெல்லைக்கு உட்பட்ட பகுதியில் யாரும் பொதுக் கூட்டங்களை நடத்த
முடியாது. இந்நிலையில் கல்முனை மாநகர சபை இந்த விடயத்தில் எடுக்கவுள்ள
முடிவு என்ன என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொது பல சேனாவின்
பிரவேசத்தோடு கல்முனை நகரின் சக வாழ்வு கேள்விக்குறியாகிவிடுமா என்று
இந்தப் பிரதேசத்தின் சமாதான விரும்பிகள் எம்மோடு தொடர்பு கொண்டு அச்சம்
தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்டில் கருத்துச்
சுதந்திரமும்,கூட்டஙகளை நடத்தும் சுதந்திரமும் தமக்கு மட்டுமே அரசியல்
யாப்பின் மூலம் அளிக்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் என்று எண்ணிக்
கொண்டிருக்கும் பொது பல சேனா இது போன்ற கூட்டங்களை இதற்கு முன் நடத்திய
இடங்களில்.அவை நடத்தப்பட்ட பின் அந்த இடங்களில் வாழும் முஸ்லிம் மக்கள்
எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்கள்.அவர்களின் உடைமைகளுக்கு விளைவிக்கப்பட்ட
சேதங்கள் என்பனவற்றை சம்பந்தப்பட்டவர்கள் சற்று ஆராய்ந்து பார்க்க
வேண்டும்.
கல்முனையிலும் இது போன்ற அமைதிக்குப்
பங்கம் விளைவிக்கும் பிரச்சினைகள் தலைதூக்காமல் சம்பந்தப்பட்டவர்கள்
நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்க வேண்டும், அதையும் மீறி ஏதாவது
அசம்பாவிதங்கள் நடந்தால் இந்தக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியவர்களே
அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அஸாத் சாலி
தெரிவித்துள்ளார்

Post a Comment