வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல
சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே
முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்
சாலி தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து
நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, பொதுபல சேனா, ராவணா பலய மற்றும்
ராவய ஆகியன நாட்டுப் பற்று எனக் கூறி வடக்குத் தேர்தலுக்கு எதிராக பல
கதைகளைக் கூறுகின்றன. இனவாதத்தை தூண்டி விடுகின்றனர். உண்மையில்
அவர்களுக்கு நாட்டுப்பற்றுக் கிடையாது அவர்கள் ஜனாதிபதியின் திட்டங்களையே
முன்னெடுக்கின்றனர்.
மாகாண சபைக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகத்
தெரியவில்லை. மாகாண சபையில் கிடைக்கின்ற வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் உதய
கம்மன்பில போன்றோர் மாகாண சபை முறைமையை ஒழிக்கப் பாடுபடுவது
கேலிக்கூத்தாகவுள்ளது.
இதேவேளை, இங்கு உள்ள ஏனைய மாகாண சபைகளில் இவ்வளவு காலமும் முதலமைச்சர் பதவி
வகிக்க முடியும் என்றால் ஏன் வடக்கில் மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ள
நிலையில் மாகாண சபை முறைமை சரியில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment