கல்முனை மாநகர சபை மேயர் ஜனாப் சிராஸ்
மீராசாஹிப் அவர்கள் அண்மையில் மனம் திறந்த செவ்வி
ஒன்றை வழங்கியிருந்தார். அந்த செவ்வியின் வரிவடிவத்தின் இரண்டாம் பாகம்
(Part 2) வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.
உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
என்மீது
குற்றம் சுமத்தப்பட்டு அந்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில்
மாத்திரமே எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர
முடியும். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை எனவே நம்பிக்கை இல்லா
பிரேரணை பற்றி நான் கவலைப்படவில்லை.
எனக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகளை
சுமத்தி கிழக்கு மாகான முதலமைச்சரிடம் எனக்கு எதிராக மனு ஒன்று
கையளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க கணக்காய்வு
குழு ஒன்று அண்மையில் எமது மாநகர சபைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை
மேற்கொண்டது.
அவர்களால் இந்த குற்றச்சாட்டுகளுக்கான
ஆதாரங்கள் எவற்றையும் திரட்ட முடியவில்லை. சில சிறிய தவறுகள் இருந்ததாக
கூறப்பட்டது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் நீங்கள் எவ்வாறு மேயராக
செயற்படுகிறீர்கள் என ஆச்சரியத்துடன் என்னை வினவினர்.
கணக்காய்வு குழுவின் வருகை எனக்கு முதலில்
அறிவிக்கப்படுவது மரபாகும். எனினும் இங்கு அந்த மரபு மீறப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் சோதனை செய்தும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள்
எதுவும் பெறப்படவில்லை.
இறைவன் தேவையான செல்வங்கள் அனைத்தையும்
எனக்கு வழங்கியுள்ளான். எனவே இந்த மாநகர சபையை பயன்படுத்தி சம்பாதிக்க
வேண்டிய தேவை எனக்கு எதுவுமில்லை. அதேவேளை இந்த மாநகர சபையில் ஊழல் செய்து
சம்பாதிக்க நான் எவரையும் அனுமதிக்கவும் மாட்டேன்.
எனது நிர்வாகத்திறன், ஆளுமை மற்றும்
சேவைகள் அனைத்தும் மக்கள் அறிந்த விடயங்களாகும். எனது வளர்ச்சியை, மக்கள்
செல்வாக்கை விரும்பாத சிலர் எனது வளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து விட
முயல்வதன் வெளிப்பாடே இந்த குற்றச்சாட்டுகளாகும்.
இறைவன் எதை நாடுகிறானோ அது நிச்சயம் நடந்தே
தீரும். பதவிகள் வழங்கப்படுவதும் பிடுங்கப்படுவதும் இறைவனின்
ஏற்பாட்டிலேயே ஆகும். இறைவன் எனக்கு பதவியை தர நாடினான். என்னிடமிருந்து
அதை பறிக்க வேண்டும் என எண்ணினால் அதை யாராலும் தடுக்க முடியாது.
முதலமைச்சரின் இந்த கணக்காய்வு அல்லது விசாரணைக்கான உத்தரவு நீங்கள் குறிப்பிடும் உள்ளூர் அரசியல் அழுத்தம் காரணமாக இடப்பட்டதா?
ஆம். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர்
ஜெமீல் அவர்களின் கடிதத்தளைப்பிலேயே இந்த குற்றச்சாட்டுகள்
முதலமைச்சருக்கு சமர்பிக்கப்பட்டிருந்தன. அத்துடன் மருதமுனை பிரதேசத்தை
சேர்ந்த ஆளும் தரப்பு மாநகர சபை உறுப்பினர் சகோதரர் உமர் அலி அவர்களால்
வழங்கப்பட்ட சத்தியக்கடதாசி ஒன்றும் இந்த கடிதத்துடன்
இணைக்கப்பட்டிருந்தது.
இந்த
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த
அரசியல்வாதியான முபாரக் மௌலவி அவர்கள் நீங்கள் பதவி விலக வேண்டும் என்ற
கருத்தை முன்வைத்தார் அல்லவா?
அவர் 107 ஊழியர்களின் நியமனம்
தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடிப்படையாக கொண்டே அந்த கருத்தை
முன்வைத்திருந்தார். அவருக்கு பிரச்சினைகளின் தலை எது வால் எது என்று
புரிவதில்லை. நான் இவ்வாறு சொல்வதற்காக என்னை மன்னியுங்கள் நான் யாரையும்
குறைவாக மதிப்பிடுபவன் அல்ல.
மக்களுக்கு ஒரு அறிக்கையை கொடுக்கும்போது
உண்மையை சொல்லுங்கள். மேயர் குற்றம் செய்தால் அதை ஆதாரத்துடன்
நிரூபியுங்கள். அதனையே நான் விரும்புகிறேன்.
முபாரக்
மௌலவி அவர்களுக்கு யாரையாவது விமர்சித்து பிரபல்யம் அடைய வேண்டும் என்ற
தேவை உள்ளது. மேயரை வம்புக்கு இழுத்தால்தான் அவருடைய அறிக்கைகளை மக்கள்
பார்ப்பதாக அவர் கூறியதாகவும் என்னால் அறிய முடிந்தது.
மதிப்புக்குரிய மஜீத் அவர்கள் ஒரு மௌலவி
எனவே தயவு செய்து தவறான அறிக்கைகைகளை வெளியிட வேண்டாம் என
கேட்டுக்கொள்கிறேன். உண்மையான விடயம் என்றால் பயமில்லாது விடயங்களை வெளியே
கொண்டு வாருங்கள் நான் அதற்கு ஆதரவளிப்பேன்.
மாநகர
சபையின் சக உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் இடையேயான
உறவுகள் ஆரோக்கியமான நிலையில் இல்லாதிருந்த போதும் உங்களுக்கும் முஸ்லிம்
காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கும் இடையான உறவுகள் எவ்வாறு உள்ளது?
முஸ்லிம் காங்கிரஸ் என் மீது பாரிய
நம்பிக்கை வைத்துள்ளது. நான் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் மேயர். கடந்த
காலங்களிலும் மேயர்கள் வந்தார்கள் போனார்கள். மூன்று மேயர்களை இந்த கல்முனை
மாநகரம் சந்திதிதுள்ளது. அதற்காக நான் யாரையும் குறைவாக கூறவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தெரிவான நான்காவது மேயர் என்ற வகையில் ஆளுமையை
காண்பித்துள்ளேன். சேவைகளை இவ்வாறுதான் முன்னெடுக்க வேண்டும் என்று
காண்பித்துள்ளேன். மக்களின் மனங்களை இவ்வாறுதான் கவர வேண்டும் என்பதை செயல்
மூலம் காட்டியுள்ளேன். முஸ்லிம் காங்கிரஸ் மூலம் எனக்கு வழங்கப்பட்ட அந்த
மேயர் பதவியை நான் சரியான முறையில் பயன்படுத்தி உள்ளேன்.
நீங்கள் தினசரி பத்திரிகைகளை புரட்டும்
பொழுது கல்முனை மாநகர சபை பற்றிய செய்திகள் தினமும் வருவதை
அவதானித்திருப்பீர்கள். இங்கு ஆட்சி நடத்துவது சிராஸ் மீராசாஹிப் என்ற
தனிநபர் அல்ல. முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்கள் அமைப்பே ஆட்சி
நடத்துகின்றது.
அண்மையில் தலைவர் ஒரு கூட்டத்தில் “கல்முனை
மேயரிடம் பணபலம் உள்ளது என சிலர் கூறுகிறார்கள் அந்த பணபலம் பற்றி எனக்கு
தெரியாது. அவர் நன்கு படித்தவர் என கூறுகின்றனர். எமது கட்சியில் நிறைய
படித்த பலர் உள்ளனர். ஆனால் இவை எல்லாவற்றையும் விட அவரிடம் சிறந்த
ஆளுமையும் நிர்வாகத்திறமையும் உள்ளது” என்று கூறினார்.
கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் நான்
விசுவாசமானவன். கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவனாக மக்கள் ஆணையை
நிறைவேற்றுவதில் கட்சி தலைமையுடன் ஒரு ஒழுக்கமான உறவை கொண்டுள்ளேன்.
கட்சி தலைமையிடம் ஏனையவர்களை பற்றி
கோள்சொல்லி என்னை உயர்த்திக்கொள்ள நான் என்றுமே முயன்றதில்லை. நான்
அவ்வாறான கலாச்சாரத்தில் இருந்து வளர்ந்தவன் அல்ல.
தலைவருக்கும் எனக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு உள்ளது. என் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளவராக தலைவர் இருக்கிறார்.
தற்போதைய
அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இரண்டு வருடங்கள் கழிந்த பின்
தொடர்ந்தும் மேயர் பதவியில் நீங்கள் நீடிக்க வாய்ப்புகள் உள்ளதா?
எனக்கு வாக்களித்த 16,467 மக்கள்
உள்ளார்கள். கட்சித்தலைமை எனக்கு என்ன சொல்கிறதோ அதற்கு நான்
கட்டுப்படுவேன். ஆனால், எனக்கு வாக்களித்த மக்கள் நான் இரண்டு
வருடங்களுக்க்கு இந்த பதவியில் இருக்க வேண்டும் என வாகளிக்கவில்லை.
மக்களின் ஆணைக்கு ஏற்பவே கட்சி என்னை இந்த மேயர் பதவியில் அமர்த்தியுள்ளது.
நான் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன் எனினும் கட்சி எந்த தவறான
முடிவும் எடுக்காது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
97% ஆன சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம்
காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். எனவே இந்த கல்முனை மாநகர சபையில்
முஸ்லிம் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியதில் சாய்ந்தமருது மக்களின் பங்கு
கணிசமானது. இலங்கையில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இந்த கல்முனை
பிரதேசமே உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தலைமை சாய்ந்தமருது
மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டாது என்ற நம்பிக்கை
எனக்கு உண்டு.
எனினும்
இரண்டு வருடங்களின் பின் நீங்கள் இந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என
கட்சி உங்களை நிர்ப்பந்த்தித்தால் உங்களின் முடிவு என்னவாக இருக்கும்?
நான் அதற்கு தயார். நீங்கள் பதவி
விலகத்தான் வேண்டும் என தலைவர் கூறினால் நான் எந்த கேள்வியும் கேட்க
மாட்டேன். நான் அந்த முடிவுக்கு கட்டுப்படுவேன்.
இந்த விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் இந்தப்பதவியில் இருந்து மக்கள் சேவையை தொடர வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?
ஒரு மேயரின் பொருத்தப்பாட்டை அளவிட
உண்மையில் இரண்டு வருடங்கள் என்பது போதாது. அவருக்கு முழுமையான கால எல்லை
வழங்கப்பபடும் வேளையிலேயே அவரின் திறமை மற்றும் ஆளுமை பற்றி ஒரு முடிவுக்கு
வர முடியும்.
ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில்
நான் ஒரு “பீச் பார்க்” திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறேன். இதன் ஐம்பது
வீதமான பணிகள் பூர்த்தியான நிலையில் அந்த திட்டத்தை தோல்வியடையச் செய்ய
வேண்டும் என்ற நோக்கில் எமது கௌரவ மாகாணசபை உறுப்பினர் சட்ட ரீதியான
முட்டுக்கட்டைகளை இட்டு தடுத்து வைத்துள்ளார். இந்த திட்டம்
நிறைவேற்றப்பட்டால் எனக்கு நற்பெயர் ஏற்படும் என்பதாலேயே அவர் இதை
செய்கிறார். எனினும் அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நான்
உறுதியாகவே இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் எனது உயிர் இருக்கும் பட்சத்தில்
இறைவனின் உதவியுடன் நான் அதை முடித்தே தீருவேன்.
இது போன்று முடிக்கப்படாத பல வேலைகளை பூர்த்தி செய்ய எனக்கு கால அவகாசம் தேர்வைப்படுகிறது இதற்கு இரண்டு ஆண்டுகள் போதாது.
ஆகவே தனிப்பட்ட ரீதியாக் நீங்கள் இந்த பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவே விரும்புகிறீர்கள்?
கட்சி விரும்பும் பட்சத்தில், மக்கள்
ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்த மேயர் என்ற பொறுப்பை முழுமையாக பூர்த்தி
செய்யவே நான் விரும்புகிறேன்.
இவ்வாறான வாய்ப்பு எனக்கு வழங்கப்படும் பட்சத்தில் இந்த பிரதேசத்தில் நன் ஒரு பொருத்தமான மேயர் என்பதை என்னால் நிறுவ முடியும்.
கல்முனை மாநகர சபை பரப்பில் தமிழ் முஸ்லிம் இன உறவுகளை மேம்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள்?
பிட்டும் தேங்காய்ப்பூவும் போன்று இருந்த
தமிழ் முஸ்லிம் உறவுகள் முப்பது வருட காலத்தில் சிதைந்து
சின்னாபின்னப்பட்டு விரிசலான நிலையில் காணப்பட்டது. யுத்தம் முடிவுற்ற பின்
வளர்ந்து வரும் இன உறவுகள் எமது கல்முனை மாநகர சபை பகுதியில் இரு
சமூகங்களும் சுமுகமான முறையில் வாழ்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
என்னைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு
நியாயமாக வழங்கப்பட வேண்டிய அணைந்து பங்குகளும் வழங்கப்பட வேண்டும்
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
வெள்ளம் ஏற்பட்ட கால கட்டத்தில் நான்
முஸ்லிம் பகுதிகளை விட தமிழ் பிரதேசங்களிலேயே அதிகம் நின்று வேலை செய்தேன்.
வெள்ளம் ஏற்பட்ட காலத்தில் தாழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மிகவும்
சிரமங்களை எதிர்நோக்கினார்கள்.
நான் மேயராக இருக்கும் வரை தமிழ்மக்களுக்கு உரிய அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களில் எந்த வித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது.
பொது பல
சேனா அமைப்பு கல்முனை பிரதேசத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாகவும்
அலுவலகம் ஒன்றன் திறக்க முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை
பற்றி சிறிது கூற முடியுமா?
பொது பல சேனா அமைப்புக்கு நாங்கள் கூட்டம்
நடத்தவோ அலுவலகம் திறக்கவோ நாங்கள் எந்தவித அனுமதியையும் கொடுக்கவில்லை
அவ்வாறு கொடுக்கவும் மாட்டோம்.
இந்த பொது பல சேனா என்ற அமைப்பை பற்றி
நாங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை. உள்ளூராட்சி அமைப்புகளை பொறுத்த வரை
இந்த இனவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் என எமது கல்முனை மாநகர சபையில்
மாத்திரமே பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதில் மிகவும் வருந்தத்தக்க விடயம் சில
தமிழ் சகோதரர்கள் இந்த பொது பல சேனாவை கல்முனைக்குள் கொண்டுவர முயற்சிகளை
மேற்கொள்கிறார்கள். இந்த சிறிய தமிழ்க்குழு பொது பல சேனாவின் தலைமையகம்
சென்று நீங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் அலுவலகம் திறக்க வேண்டும்
அதற்கு நாங்கள் இடம் தருகிறோம் என்று கூறியுள்ளனர். அதை தொடர்ந்து பொது பல
சேனா பிரதிநிதிகள் கல்முனை வந்து இடத்தை பார்வையிட்டும் சென்றுள்ளனர்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கல்முனை
மாநகர சபை பிரதேசத்தில், தமிழ் முஸ்லிம் மக்கள் சுமுகமாக வாழும்
சந்தர்ப்பத்தில் இவர்கள் பொது பல சேனாவை இங்கு கொண்டுவர முயற்சிப்பது
எங்களுக்கு பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
இதுவரை பொது பல சேனாவின் இவ்வாறான
முயற்சிகளுக்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. நான் மேயராக தொடரும் வரை நான்
இவைகளை அனுமதிக்க மாட்டேன்.
அண்மையில் பொது பல சேனா கூட்டம் ஒன்றை
கல்முனையில் நடத்த ஏற்பாடுகள் செய்ததாக கூறப்பட்டது. நாங்கள் மிகவும்
கவனமாக இதை முறியடிக்க வழிவகைகளை ஆராய்ந்து நீதி மன்றம் மூலமாக இதை தடுத்து
நிறுத்த தயாரான வேளையில் இந்த கூட்டம் கைவிடப்பட்டதாக எங்களுக்கு அறியக்
கிடைத்தது. இந்த கூட்டம் நடந்திருந்தால் பாரிய பின்விளைவுககளை அது
ஏற்படுத்தி இருக்கும்.
குறித்த தமிழ்க்குழு பொது பல சேனாவை
கல்முனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் திடமாக இருக்கின்றனர். அண்மையில்
“எஞ்சிக்கிடக்கும் சொத்துக்களை நாம் பொது பல சேனாவின் உதவியுடன் பாதுகாக்க
வேண்டும்” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் ஒன்று எனது பார்வைக்கு
வந்தது. இந்தக் குழுவினரே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நல்லுறவை
சீர்குலைக்க வேண்டும் என்றும் முயற்சிக்கின்றனர்.
வளர்ந்து
வரும் இளம் அரசியல்வாதி என்ற வகையில் உங்கள் அடுத்த இலக்கு என்னவாக
இருக்கும்? பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா?
இறைவன் எதை நாடுகிறானோ மக்களின் விருப்பம் என்னவாக இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும்.
உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்னவாக இருக்கும்?
மக்கள் நான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என விரும்பினால் நான் அதைப்பற்றி நிச்சயம் யோசிப்பேன்.
மேயராக
மக்கள் பணியை நிறைவேற்றுவதில் உள்கட்சி உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும்
சவால்கள் பற்றி கூறினீர்கள். இது தவிர ஏனைய சவால்கள் உண்டா?
நிறைய சவால்கள் உள்ளன. இவர்களின் நோக்கம்
எல்லாம் இந்த சவால்கள் மூலம் என்னை சலிப்படைய வைத்து நானாக இந்த பதவியை
விட்டு ஓட வேண்டும் என்பதுதான். ஆனால் என்னால் அவ்வாறு ஓட முடியாது.
உண்மையில் நான் இந்த சூழ்நிலைக்கு
பழக்கப்படாதவன். பிரதேசவாதம் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது.
ஒருவருக்கு வெட்டுவது என்பது என்னால் முடியாத காரியம். இந்த அரசியலில்
வந்ததன் மூலமே இவற்றை பற்றி நான் அறிந்து கொண்டேன்.
இந்த அரசியல்வாதிகள் நேரடியாக அல்லாமல்
சிலரை முன்னிலைப்படுத்தி தமது சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவி கொண்டு நான் இந்த சதித்திட்டங்களை
முறியடிப்பேன்.
கல்முனை மாநகர எல்லையில் முஸ்லிம்கள்
பெரும்பான்மையாகவும் தமிழர்கள் சிறுபான்மையாகவும் சிறிய எண்ணிக்கையான
சிங்கள மக்களையும் கொண்ட பிரதேசம் ஆகும். கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தி
பத்தாயிரம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். 76 கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட
பாரிய பிரதேசம் ஆகும். எட்டு ஊர்கள் இந்த மாநகர சபைக்குள் அடங்குகின்றன.
இன, மத, மொழி மற்றும் ஊர் பாகுபாடுகள்
இன்றி அனைவரையும் அரவணைத்து சேவை செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு
இருக்கின்றது. சேவைகளில் சமநிலைத்தன்மை பேணவேண்டிய அவசியம் இருக்கின்றது.
இது ஒரு சவாலான விடயமாகும். எனினும் இதை என்னால் மன நிறைவுடன் செய்ய
முடிந்தது.
எம்மால் வெளியிடப்பட்ட கைநூலில் எமது
வருமானம், செலவீனங்கள் மற்றும் சேவைகள் பற்றிய விபரங்கள் மக்களுக்கு
கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எமது நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையினை நாம்
கையாள்கிறோம்.
எனக்கு தரப்பட்ட இந்த காலப்பகுதிக்குள்
மக்களை நான் திருப்தி படுத்தியுள்ளேன். மேயராக என்னுடைய கடமைகளை
மனச்சாட்சிக்கு விரோதமில்லாமில் நான் நிறைவேற்றியுள்ளேன். தனி நபர்களை
திருப்தி படுத்த வேண்டிய எந்த தேவையும் எனக்கில்லை. இந்த பதவியை நான்
விட்டு செல்ல வேண்டி இருக்குமானால் நான் இந்த மனத்திருப்தியுடன் செல்ல
வேண்டும் எனவே ஆசைப்படுகிறேன்.
எனது பணிகளை நிறைவேற்ற மக்கள் எனக்கு இதுவரை பூரண ஒத்துழைப்பு தந்துள்ளார்கள் இணயும் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கல்முனை பகுதியில் காணப்படும் முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டு குத்து வெட்டுகள் கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தாதா?
இது நல்லதொரு கேள்வி, இன்று சாய்ந்தமருது
மக்கள் கடும் வெஞ்சத்தோடு காணப்படுகின்றார்கள், நான் பதவிக்கு வருவதற்கு
முன் சாய்ந்தமருதுக்கு என்று ஒரு பிரதேசசபை அமைக்கப்பட வேண்டும் என்று அவா
இருந்தது.
சாய்ந்தமருதுக்கு ஒரு மேயர்
கிடைத்துவிட்டது என்றவுடன் அவர்களது பிரதேசபை அவா ஓரளவு தணிந்துவிட்டது.
சாய்ந்தமருதில் 97% மக்கள் முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்கும் மக்களாகும்,
இவ்வாறான ஊர் முழுதான ஆதரவு வேறு எந்த ஊரிலும் காணப்படவில்லை.
ஏன் சாய்ந்தமருதை சேர்ந்த இந்த மேயரை தனது
பணியில் சிறப்பாக செயற்பட முடியாமல் முட்டுக்கட்டை போடுகின்றார்கள் என்று
இன்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கின்றார்கள். இது மக்கள் மத்தியில் கடும்
விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசனம் கட்சியின் வாக்கு வங்கியில் வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
அத்துடன் இரண்டு வருட மேயர் பதவி சுழற்ச்சி
பற்றி எவ்வாறான முடிவு எடுக்கப்படும் என்று எனக்கு தெரியாது, இருந்தாலும்
கட்சியின் தலைவர் மற்றும் மேலிடம் மக்களை பாதிக்காத, கட்சியை பாதிக்காத
முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
உங்களுக்கும் கல்முனையை மையப்படுத்திய அரசியல்வாதிகளுக்குமான உறவுகள் எவ்வாறு உள்ளது?
எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்
அவர்களுக்குமான உறவு நல்லமுறையிலேயே உள்ளது. ஒரு சில கருத்து முரண்பாடுகள்
காணப்பட்டாலும் நாம் அவற்றை பேசித் தீர்த்துக்கொள்வோம்.
ஆனால், மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்
அவர்கள் ஒரு அசிங்கமான அரசியல் (Dirty Politics) செய்து வருகின்றார். இவர்
என்னை அரசியலுக்கு கொண்டுவந்து பகடைக்காயாக பாவித்து விட்டு பிறகு
வெட்டிவிட்டார். எனக்கு மக்கள் ஆதரவு பெரிகியவுடன் இவரால் தாங்க
முடியவில்லை. மேயர் பதவி இந்த சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்பதில் இவர்
உறுதியாக இருந்தார். எனது உயிர் இருக்கும் வரை மேயராக சிராஸ் வரக்கூடாது என்று கூறியவர் இந்த ஜெமீல். எவ்வளவு தூரம் அவரது எண்ணம் உள்ளது என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
இவர் வித்தியாசமான அராஜக அரசியலினை செய்துவருகின்றார். இவர் எனது அபிவிருத்தியில் நேரடியாக முட்டுக்கட்டை இடுகின்றார்.
என் மீது காழ்புணர்வு கொண்ட சிலர் என்னை அரசியலில் இருந்து நீக்க கொலை செய்வதற்கு திட்டமிட்டு 5 இலட்சம் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பணம் கொடுக்கப்பட்ட நபர் என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டார். சேர்
உங்களை சில பேர் கொலைசெய்வதற்கு திட்டமிடுகின்றார்கள், எனது மனம் அதற்கு
இடம் கொடுக்கவில்லை, என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவர் என்னிடம்
மன்றாடினார்.
அரசாக அரசியல் செய்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த அராஜக அரசியல் சில காலங்களுக்கு
மாத்திரமே செய்யலாம். தயவு செய்து யார் அபிவிருத்தி செய்ய வந்தாலும்
அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும், தடுக்கக்கூடாது.
தயவு செய்து கீழ்த்தரமான அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment