பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி தொடர்பில் அவரது
குடும்பத்தினரின் கோரிக்கையை சபையில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க அஸாத் சாலியை பார்வையிடுவதற்கும் அவரை சந்திப்பதற்கும்
அனுமதியளிக்குமாறு இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
எனினும் இவ்விவகாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்து
தீர்மானிக்கப்படும் என்று சபையில் தெரிவிக்கப்பட்டபோதிலும் இன்றைய தினம்
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரசன்னமாகியிராத காரணத்தால் அவரது கவனத்திற்கு
கொண்டுவரப்படவிருப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் இன்று வியாழக்கிழமை அமர்வின் போது ஒழுங்குப் பிரச்சினை
ஒன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அஸாத் சாலியின்
குடும்பத்தினர் தன்னிடம் முன்வைத்த கோரிக்கையை பாராளுமன்றத்தின்
கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதன்போது மேலும் கூறிய ரணில் விக்கிரமசிங்க,
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலியின் உடல்நிலை
மோசமடைந்து வருவதாகவும் ஆகவே அவரை நேரில் சென்று பார்வையிட்டு
சந்திக்குமாரும் அவரது குடும்பத்தினர் என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே, அவரை சந்திப்பதற்கு இந்த சபையில் அரசாங்கத்தின் அனுமதியைக் கோருகிறேன்.
நான் உட்பட இன்னும் எம்.பி.க்களும் அஸாத் சாலியை சந்திப்பதற்கான அனுமதியை எதிர்பார்க்கிறேன் என்றார்.
தினேஷ்
இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ்
குணவர்தன, சபாநாயகர் இன்னும் சிறிது நேரத்தில் சபையில் பிரசன்னமாக
விருப்பதாகவும் ஆகவே, அவருடன் பேசி தீர்மானிக்க முடியும் என்றும் கூறினார்.
பிரதி சபாநாயகர்
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறுகையில்,
இவ்விடயம் தொடர்பாக நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது ஆராய்ந்து தீர்மானித்துக்கொள்ள முடியும் என்றார்.
இதன் பின்னர் 2.30 க்கு இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. பிரதி சபாநாயகர் தலைமையிலேயே
கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது அஸாத் சாலி தொடர்பான எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை
பரிசீலிக்கப்பட்டபோது மேற்படி கோரிக்கையினை சபாநாயகரின் கவனத்திற்கு
கொண்டுவருவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
Post a Comment