Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மஹிந்த ராஜபக்ஸ செய்த துரோகங்கள் - அம்பலப்படுத்துகிறார் முன்னாள் ஜனாதிபதி

Monday, May 60 comments

மகிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எத்தகைய குழப்பவாதியாக இருந்தார், தனக்கு எப்படி, எத்தகைய துரோகங்களைச் செய்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விரிவான செவ்வியில் விளக்கியுள்ளார். 

அந்தச் செவ்வியின் முக்கியமான பகுதிகளின் தொகுப்பின் முதல் பகுதி இது- 
 
கேள்வி - சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர், 1993இல் பாரிய ஆதரவு அலையுடன் உச்சிக்கு சென்றீர்கள். 16 ஆண்டுகளாக அரசியல் வனாந்தரத்தில் சிக்கியிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக்குக் கொண்டு சென்றீர்கள். அந்த நாட்களை நினைவு கூர முடியுமா? 
 
சந்திரிகா - விஜய படுகொலை செய்யப்பட்ட பின்னர், நான் ஒரு முக்கியமான நபரானேன். என்ன நடந்தாலும் எனது பணியை முன்னெடுப்பது என்ற மனநிலைக்கு நான் ஏற்கனவே வந்திருந்தேன். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. எனது தாயாரும் சகோதரியும், நலன் விரும்பிகளும் இரு பிள்ளைகளுடன் என்னை வெளிநாடு செல்லும்படி கூறினர். அதற்கு அழுத்தம் கொடுத்தனர். 
மீண்டும் அரசியலில் நுழைவதில்லை என்ற முடிவுடன் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினேன். அப்போது மகாஜன கட்சி எனக்குத் துரோகம் செய்து என்னை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க மகிந்த ராஜபக்ச திட்டமிட்டார். அவர்கள் ஊழல் சேற்றில் புரள்வது எனக்குப் பிடிக்கவில்லை. 
அப்போது எனது தாயாரின் அனுமதியுடன் இளம் செயற்பாட்டாளர்களான மங்கள சமரவீர, எஸ்.பி.திசநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே போன்றவர்களைக் கொண்ட குழு என்னை மீண்டும் கட்சியில் இணைவதற்கு உற்சாகப்படுத்தியது. 
அப்போது இன்னொரு குழு எனது மீள் அரசியல் நுழைவைத் தடுப்பதற்கு முயன்றது. அவர்களுள் அனுரவும் இருந்தார். தனது பிணத்தின் மீது கூட என்னைக் கட்சியில் மீள இணைவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று மகிந்த ராஜபக்ச கூறித் திரிந்தார். சிலரது எதிர்ப்புகள் இருந்தபோதிலும் கட்சியில் மீள இணைய சம்மதித்தேன். 
ஆனால் அவர்கள் எனக்கு உறுப்புரிமை பெறுவதற்கு அனுமதிக்கவில்லை. கட்சியின் அரசியல் குழுவைக் கூட்டி எனக்கு உறுப்புரிமை பெற்றுக் கொடுத்தார் எனது தாயார்.  எனது தாயாரின் இந்த முன்மொழிவை அனுர, மகிந்த தவிர்ந்த ஏனைய பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். 
அடுத்து எனது தாயார் அத்தனகலவில் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி என்னை செயலராக அறிவித்தார். என்னை அரசியலுக்குள் நுழைய விடாமல் தடுக்க முனைந்தவர்கள் எனது தாயாரின் நகர்வுகளை முடக்கப் பார்த்தனர். 
அந்த நேரத்தில் மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தாயார் என்னைப் போட்டியிடச் சொன்ன போது நான் அதை நிராகரித்தேன். அவர் லக்ஸ்மன் ஜெயக்கொடியை அனுப்பி என்னை சம்மதிக்க வைக்க முயன்றார். 
அதையடுத்து மங்கள, எஸ்.பி, நிமால் போன்றவர்கள், வலுவாக உள்ள ஐ.தே.க.வைத் தோற்கடிக்க என்னை களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி சம்மதிக்க வைத்தனர். அதன்படி போட்டியிட்டு, குறைந்தது 3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். 
 
கேள்வி - முதல் முறையாக மகிந்தவைச் சந்தித்ததை நினைவு கூர முடியுமா? 
 
சந்திரிகா - அனுரவின் நண்பராகவே அவரை எனக்குத் தெரியும். அவர் முதல் முறையாக தனது 20 வயதுகளில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். குறிப்பாக பெண்கள் முன்பாக அவர் மிகவும் வெட்கப்படுபவர். 
 
இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அனுரவுடன் நண்பர்களாக இருந்தனர். பசில், சமல் எல்லோரும் அனுரவின் வீட்டில் தங்கியிருந்தனர். சமல் அனுரவின் மெய்க்காவலராக இருந்தார். அதற்கு மேல் அவர் எதற்கும் தகுதியானவராக இல்லை. பசில் அனுரவின் செயலரானார். 
 
கேள்வி - மகிந்தவுடன் உங்களுக்கு பிரச்சினை இருந்தது. இருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன் என்று விளக்க முடியுமா? 
 
சந்திரிகா - உண்மையில் என்ன நடந்தது என்று குறிப்பிட்ட சம்பவத்தைக் கூறுகிறேன். ஒரு நாள் மகிந்த ராஜபக்ச என்னைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுள்ளதாக, எனது பணியத்தில் இருந்து தகவல் கிடைத்தது. 
 
அப்போது நான் மிகவும் இறுக்கமான பணியில் இருந்த நேரம். அதிபர் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் எனது கடமைகளை செய்யத் தொடங்கியிருந்தேன். எனினும் அவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தேன். 
வரவேற்பு அறைக்குள் நான் நுழைந்தபோது, அவர் தனது ஆசனத்தில் இருந்த எழுந்து என்னை வாழ்த்தினார், மிகவும் குனிந்து வணங்கினார்.  நான் எதிர்ப்புத் தெரிவித்த போது, தனக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக அவர் எனது தாயாரிடமோ, என்னிடமோ நல்ல பெயரெடுத்திருக்கவில்லை. 
கட்சியில் பிரச்சினைகளை உருவாக்கியது நீங்கள் தான் என்று அவரிடம் கூறினேன். ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் காயங்களில் இருந்து விடுவித்து கட்சியை முன்னைய நிலைக்கு கொண்டு வருவது எனது கடமை என்று அவரிடம் கூறினேன்.
 
எனது தாயார் அவருக்கு எவ்வளவோ செய்திருந்தும், தனது மாவட்டத்தில் என்னைத் தோற்கடிப்பதற்கு எப்படிப் பணியாற்றினார் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினேன். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ராஜபக்ச (மகிந்தவின் தந்தை) குறிப்பிட்ட பதவியில் இருந்திருக்கலாம், ஆனால் அவர் ஆரம்பத்தில் கட்சியில் இருக்கவில்லை, பின்னரே இணைந்தார் என்பதையும் அவருக்கு நினைவுபடுத்தினேன். 
 
கேள்வி - அவர் வெளிநாட்டில் இருந்தபோது அமைச்சரவை மாற்றத்தின் மூலம் அவரது அதிகாரங்களைக் குறைத்தீர்களே? 
 
பதில் - அது அவருக்கு அளிக்கப்பட்ட பதவிஉயர்வு என்பதே எனது கருத்து. தொழில் அமைச்சர் பதவியை விடவும் முக்கியமான அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது.  நான் அமைச்சரவையை மாற்றியமைத்த போது அவர் ஜெனிவாவில் இருந்தார். தென்மாகாணத்துக்கு இன்னும் அதிகமாக செய்யக்கூடிய நல்ல அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று நான் அவருக்கு தகவல் கொடுத்தேன்.
(மிகுதி விரைவில்)

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by