Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இந்த அரசாங்கத்தில் நாங்கள் முழு விருப்பத்தில் போய் இணையவில்லை -அமைச்சர் ஹக்கீம்

Saturday, May 250 comments

இந்த அரசாங்கத்தில் நாங்கள் முழு விருப்பத்தில் போய் இணையவில்லை என்பது பகிரங்கமாகக்கூறிய விடயமாகும்.கட்சியும் மக்களும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்றால் அரசாங்கத்தோடு இருந்தாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஜனாதிபதியும் ஓரளவுக்காவது பலமான இயக்கம் தன்னோடு இருக்க வேண்டும் என்ற உணர்வோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் படாதபாடுபடுகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை எற்பாட்டில் மர்ஹூம் மீரா சாகிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழா 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்குதல் மாநகர உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு, வாசிப்பு வார போட்டியில் பரிசளிப்பு என்பன தொடர்பான வைபவங்கள் நேற்று சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த நூலகத்திற்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டு 'மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை' எனும் பெயரில் அந் நூலகம் திறக்கப்படுவதை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இருப்பினும் ஏலவே திட்டமிட்டபடி நேற்று மாலை குறித்த நேரத்தில் இந் நூலகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாகிப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இரவு நேரம் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது

என்னைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்துடன் இணைந்த காலத்திலிருந்து கட்சியை பாதுகாக்க வேண்டும். மு.கா. முழுமையாக அழிக்கப்படுவதற்கு நாங்களாக வழிசமைத்து கொடுத்து விடக்கூடாது என்பதில் பக்குவமாகவும் மிகக்கவனமாகவும் இருந்து வருகின்றேன்.

அண்மையில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை ஒன்றை நடாத்துவதற்கு அன்னாரின் மகன் சட்டத்தரணி சந்திரகாசன் யாழ்ப்பாணத்திற்கு என்னை அழைத்திருந்தார்.
அங்கு நான் பேசியதை பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அதிலும் எனது கருத்து ஒன்றைப் பெரிதாகப் போட்டிருந்தார்கள். நாங்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றோம் என்று அங்கு நான் சொல்லியிருந்தேன். அது பெரும்பாலும் சரியான விடயம்தான்.

இதற்காக அரசாங்கம் எங்களைத்தவறாக கருதி விடக்கூடாது. இந்த அரசாங்கத்தில் நாங்கள் முழு விருப்பத்தில் போய் இணையவில்லை என்பது பகிரங்கமாகக்கூறிய விடயமாகும்.

கட்சியும் மக்களும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்றால் அரசாங்கத்தோடு இருந்தாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஜனாதிபதியும் ஓரளவுக்காவது பலமான இயக்கம் தன்னோடு இருக்க வேண்டும் என்ற உணர்வோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் படாதபாடுபடுகின்றோம்.

ஆனால் தவறு செய்கின்ற போது அதனைச் சுட்டிக்காட்டுகின்ற பணியை நாங்கள் செய்யாமல் விடவில்லை. ஹலால் பிரச்சினை வந்த சமயத்தில் முஸ்லிம் தலைவர் முகம் கொடுக்கவில்லை. அவர் கொஞ்சம் பின்வாங்கிக்கொண்டே இருந்தார் என்ற ஒரு பெரிய விமர்சனம் இருந்தது. அது அப்படியல்ல.
இந்த ஹலால் விவகாரம் வந்த நாளிலிருந்து அரசாங்கம் உடனடியாக அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்தது. இந்த உப குழு முடிவு ஒன்றை எடுப்பதற்கு முன் குழுவிலுள்ள எவரும் இதுபற்றி பேசக்கூடாது என்ற ஒரு தீர்மானத்தையும் எடுத்தது.

இதனால் நாங்களாகவே எங்களது வாய்களுக்கு பூட்டு போட்டுக்கொண்டோம். ஆனால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அதனை மீறி நினைத்த நேரமெல்லாம் அடிக்கடி செய்தியாளர் மாநாடுகளை நடாத்திக் கொண்டு வாக்குச் சேகரிப்பதற்காக வசதிகளைத் தேடிக்கொண்டார்.

தற்பொழுது அவர் வடக்கில் தேர்தல் நடாத்தக்கூடாது அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தனி நபர் பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்போகின்றோம் என பிடிவாதமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

இப்படி செயற்படுவதன் மூலம் சிங்கள மக்களுக்கு மத்தியில் உள்ள தீவிரவாதப் போக்குள்ளவர்களின் வாக்குகளை கவர்ந்து கொள்ளலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதான் எங்கள் பார்வையில் ஜனாதிபதிக்கு ஒரு தடுமாற்றம் உள்ளது.

நான் இது பற்றி ஜனாதிபதிக்கு தெளிவாகக்கூறியுள்ளேன். தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் பொதுபலசேனா ஹெல உறுமய போன்றவர்கள் உங்களிடம் உள்ள வாக்குகளைப் பிரித்துக் கொண்டு போய் விடுவார்கள் என அச்சப்படுவதாக இருந்தால் அந்த வாக்குகளுக்கு உரிமை கொண்டாடக்கூடியவர்கள் உங்களைத்தவிர வேறு யாராலும் முடியாது.

இதனால் தீவிரவாதப் போக்குள்ளவர்களின் வாக்குகளைப் பற்றி ஜனாதிபதி கவலைப்படக்கூடாது. உறுதியாக சில முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

இன்று நாட்டில் ஒரு குழப்பத்தைக்கொண்டு வந்து தங்களின் ஆட்சிக்கு வேட்டு வைப்பதற்கு இடமளிக்கக்கூடாது. இதனை உணர வேண்டும் என ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன்.

இந்த அரசுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கின்றன என்றதொரு பார்வை இருந்து கொண்டிருக்கின்றது. இன்று மியன்மாரிலும் இலங்கையிலும் நடப்பதை பார்த்தால் முஸ்லிம்களின் நண்பர்களாக காட்டிக் கொள்ளும் மேற்குலக நண்பர்கள் எல்லாம் உண்மையான நண்பர்கள் அல்ல என்பதை அறியலாம்.

அவர்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பலஸ்தீனத்திலும் செய்யும் அநியாயங்கள் இதற்கு மத்தியில் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு அநியாயம் நடத்தியது என முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதனைக்கண்டு மயங்கிப் போகும் ஒரு இயக்கமாக நாங்கள் மாற முடியாது.

இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஜெனிவா தீர்மானத்திற்குள்ளும் தற்போது நுழைந்துள்ளோம் என்று காட்ட வருபவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால் எமது பாதுகாப்புச் செயலாளருக்கு ஜனாதிபதியின் மற்ற சகோதரர்களுக்கு இது விளங்காமல் இருக்கலாம். அநியாயமாக அபாண்டமாக எல்லா செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் தலையில் போடுகின்றார்கள். ஆனால் நேர்மையாக ஜனாதிபதியுடன் சண்டை பிடிக்க என்னால் முடியும். இதனை நான் நேரடியாகக் கண்டு கொண்டு வருகிறேன்.

முஸ்லிம் காங்கிரஸை எப்படியாவது அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சிலர் முண்யடித்துக்கொண்டு பொய்களைப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

சங்கீதக் கதிரை விளையாட்டு மாதிரி அடிக்கடி முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிக்குள் போவதும் வெளியில் வருவதும் இவ்வாறு ஒரு சிலர் எனக்கு கதிரை இல்லாவிட்டால் நான் வெளியே வந்து விடுவேன் என நினைத்து செயற்படுகிறார்கள். இப்படித்தான் கொஞ்சப்பேர் முஸ்லிம் காங்கிரஸை வைத்து ஆட்டிப்படைக்கலாம்.

இதனால் ஆட்சியைக் கவிழ்க்கலாம். ஆனால் சதிக்கும் பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்க விரும்பவில்லை. எப்போதும் சதி செய்தவர்களாக நாங்கள் இருக்கவில்லை. இதனை அரசாங்கத்திற்கு மிகத்தெளிவாக நாங்கள் கூற வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேசும் ஒரு இயக்கமாக நாங்கள் பாதிக்கப்படுகின்ற போது அச்சமின்றி நேர்மையாக சுட்டிக்காட்டுவதற்கு தயங்காத ஒரு இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் என்றும் இருக்கும் என்பதை இந்த அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகின்றோம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் கட்சி ஆனால் எங்களை அரசாங்கம் ஒரு அலட்சியப் போக்கில் நடாத்துகின்றது என்பது போன்ற ஆதங்கங்கள் எங்களிடம் இருக்கின்றது.

சரியான சந்தர்ப்பம் வரும்போது உண்மையான நண்பர்கள் யார் என்பதை புரிந்து அறிந்து கொள்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு அந்த சந்தர்ப்பம் வரும். ஆனால் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை.

ஜனாதிபதியின் சகோதரர்கள் என்னைத் தவறாக புரிந்து கொண்டதாகவோ இல்லைஅவர்கள் முஸ்லிம் காங்கிரஸை மடக்குவதற்கு எங்களால் முடியும் என ஜனாதிபதியிடம் காட்ட முயலலாம். இது சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் அறியாதது போல கண்களை மூடிக்கொண்டு களத்தில் இருக்கவில்லை.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திற்குள் தொடர்ச்சியாக எதிரியாக வைத்துக்கொண்டு தன்னை அரசியலை வளர்ப்பதற்கு உள்ளுக்குள் சில ஆட்களும் வெளியில் சில ஆட்களும் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றார்கள். இது சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மிக அவதானமாக இருக்கின்றார்கள் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by