கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி விசாரணையின் போது மயங்கி விழுந்ததாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிடுள்ளது.
குற்றப்புலனாய்வு பொலிசாரினால் அவர்களது தலைமையகத்தின் நான்காவது மாடியில் வைத்து விசாரணை செய்யும் போதே ஆசாத் சாலி மயங்கியுள்ளார். அவர் உடனடியாக நேற்று மாலை 5 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்பொழுது கொழும்பு தேசிய மருத்துவமனையில் வார்டு 55 யில் கனரக போலீஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக அந்த இணையத்தளம் வெளியிடுள்ள செய்தியில்,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசாத் சாலியை தொண்ணூறு (90) நாட்கள் தடுப்புக் காவலில் வைத்திருக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலிக்கு ஏற்கனவே நீரழிவு நோய் இருக்கின்ற நிலையில் தடுப்புக் காவலின் போது உணவு உண்ணவோ நீர் பருகவோ மறுத்துள்ளார்.
நியாயமற்ற முறையில் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாகவே இந்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
போலீசார் கொடுத்த உணவு மற்றும் தண்ணீரை அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் அவரது குடும்பத்தார் கொண்டுவந்து கொடுத்த உணவையும் நிராகரித்ததோடு, தான் உணவு மற்றும் தண்ணீரை நிராகரிப்பது கொள்கை சார்ந்த விடயம் (matter of principle) எனத் தெரிவித்துள்ளார்.
ஆசாத் சாலி 30 மணித்தியாலத்திற்கு மேல் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் காணப்பட்டார். இதனால் இவரது உடல் மிகவும் மோசமான நிலைமையை அடைந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் விசாரணையின் போது இவர் மயங்கி விழுந்ததாக அறியமுடிகின்றது.
ஆசாத் சாலியின் நிலை குறித்து கவலைப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனை கேள்விப்பட்ட அவரது மனைவி மகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு விரைந்துள்ளனர். ஆனால் அசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி, மகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலியை பார்க்க அனுமதிக்காத நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
எனினும் இன்று சனிக்கிழமை காலை ஆசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் அனுமதிக்கப் படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆசாத் சாலியை கைது செய்யும் பொது கூட அவரது உடல்நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. கடந்த வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் உடல் பரிசோதனைக்காக அவர் நான்காவது மாடியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். இதனைக் கேள்விப்பட்டு வியாழக்கிழமை அவரது குடுபத்தினர் மருத்துவமனைக்கு வந்த போது, அவரை மீண்டு போலீசார் அழைத்துச் சென்றுவிட்டதாக அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
ஆசாத் சாலியை கைது செய்ததற்கு எதிராக தற்பொழுது பலத்த கண்டனம் எழுந்துள்ளது, பல அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்கள். அத்துடன் கொட்டும் மழையில் கொழும்பில் ஒரு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையும் அறிக்கை வெளியிடுள்ளது.
Post a Comment