இறை இல்லத்தை பாதுகாக்க இளைஞர்கள் அணிதிரள்வு
2013 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை
(சூரியன் மறைந்த பின்னர் மேற்கொள்ளப்படும்) மஃரிப் தொழுகை நடைபெற்றுக்
கொண்டிருந்தபோது இலங்கையின் தலைநகர் கொழும்பில் முஸ்லிம்களின் பள்ளிவாயல்
ஒன்றின்மீது ஆயுதம் தாங்கிய பௌத்த கடும்போக்காளர்களால் நன்கு
திட்டமிடப்பட்ட கீழ்த்தரமான தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது.
முஸ்லிம் மக்கள் ஈதுல் பித்ர் என்ற
நோன்புப் பெருநாளைக் கொண்டாடிய மறுநாள் குறித்த பள்ளிவாயல் மீதும் அருகில்
அமைந்திருந்த முஸ்லீம்களின் வீடுகள் மீதம் பொலீஸாரின் ஆதரவுடன் இத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆத்திரமூட்டும் இந்தத் தாக்குதல் காரணமாக
பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்கள் இறை இல்லத்தை பாதுகாப்பதற்காக
கோபமடைந்த நிலையில் அணிதிரண்டதன் காரணமாக இனமதசார்பு பாஸிஸக் கும்பல்
பொலீஸாரின் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது.
ஆங்கிலத்தில் கிராண்பாஸ் என்றும் தமிழில்
பாலத்துறை என்றும் சிங்களத்தில் தொட்டலங்க என்றும் அழைக்கப்படும் கொழும்பு
14 இல் வதிபவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆரம்பநிலை விபரங்கள் பின்வருமாறு.
கிராண்பாஸில் சுவர்ண சைத்திய வீதியின் 166ஆம் இலக்கத்தில் இயங்கிய பள்ளிவாயல் தொடர்பில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பதட்டங்கள் காரணமாக அதே வீதியின் 158ஆம் இலக்கத்தில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடிக் கட்டடத்திற்கு ஜுலை மாதம் 4ஆந் திகதி நகர்த்தப்பட்டது. பெளத்த கடும்போக்காளர்கள் அதனை எதிர்த்ததோடு அந்தப் பிரதேசத்திலிருந்தே பள்ளிவாயல் முற்றாக அகற்றப்பட வேண்டுமெனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெளத்தர்களின் போராட்டம் காரணமாக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஏலவே புதிய இடத்தில் பள்ளிவாயல் இயங்குவதற்கு வழங்கியிருந்த அனுமதியினை வாபஸ் பெற்றது.
கிராண்பாஸில் சுவர்ண சைத்திய வீதியின் 166ஆம் இலக்கத்தில் இயங்கிய பள்ளிவாயல் தொடர்பில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பதட்டங்கள் காரணமாக அதே வீதியின் 158ஆம் இலக்கத்தில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடிக் கட்டடத்திற்கு ஜுலை மாதம் 4ஆந் திகதி நகர்த்தப்பட்டது. பெளத்த கடும்போக்காளர்கள் அதனை எதிர்த்ததோடு அந்தப் பிரதேசத்திலிருந்தே பள்ளிவாயல் முற்றாக அகற்றப்பட வேண்டுமெனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெளத்தர்களின் போராட்டம் காரணமாக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஏலவே புதிய இடத்தில் பள்ளிவாயல் இயங்குவதற்கு வழங்கியிருந்த அனுமதியினை வாபஸ் பெற்றது.
2013 ஜுலை மாதம் 10ஆந் திகதியன்று குறித்த
பிரதேசத்திலிருந்து பள்ளிவாயலை அகற்றுவதற்கு ஒரு மாத காலம் காலக்கெடு
விதிக்கப்பட்டது. ரமழான் நோன்பு காலம் ஆரம்பமாகவிருந்ததால் முந்தைய
பள்ளிவாயலில் தொழுகைகளை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதனிடையே, முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத்
தலைவர்கள் குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும்
பிரமர் டி.எம்.ஜயரத்ன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்துடன்
கலந்துரையாடினர். இந்த முயற்சியின் காரணமாக பிரமரின் கீழுள்ள சமய விவகார
அமைச்சு ஏலவே வழங்கிருந்த தடையினை நீக்கியது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 10ஆந்
திகதிய காலக்கெடுவில் பள்ளிவாயலை அகற்றத் தேவையில்லை எனவும் பின்னர்
தெரிவிக்கப்பட்டது.
காலக்கெடு
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரவை அமைச்சரான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் குறித்த பிரச்சினை பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசியதோடு ஆகஸ்ட் மாதம் 10ஆந் திகதிய காலக்கெடுவில் வேறிடத்திற்கு மாற்றாமல் பள்ளிவாயலை இயங்கச் செய்வதற்கு அவரது அனுமதியினைப் பெற்றுக்கொண்டனர். தமிழ்மொழி ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகின. இப்பிரச்சினை சுமூகமா தீர்க்கப்பட்டதாக குறிப்பாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டிருந்தார். பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்படடிருந்தார்.
பைசர் முஸ்தபாவினால் புத்தசாசன மற்றும்
சமய விவகார அமைச்சிடமிருந்து பள்ளிவாயல் இயங்குவதற்கான அதிகாரபூர்வ
அங்கீகாரத்தினை பெற முடிந்தது. குறித்த உத்தியோகபூர்வ கடிதத்தின்
பிரதியொன்றை கொழும்பு பிரதிப் பொலீஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு
அனுப்பியதோடு பள்ளிவாயலுக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும்
கோரியிருந்தார். அது அனுமதிக்கப்பட்டது.
சமய விவகார அமைச்சு பள்ளிவாயலை இடமாற்றம்
செய்வதற்கான காலக்கெடுவினை முறையாக இரத்துச் செய்துள்ளதாகவும் சுவர்ண
சைத்திய வீதியில் புதிய இடத்தில் பள்ளிவாயல் இயங்குவதற்கு அங்கீகாரம்
வழங்கியிருப்பதாகவும் தமிழ்மொழி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. புதிய
இடத்தில் அமைந்துள்ள பள்ளிவாயலில் குறித்த பள்ளிவாயலை அகற்றுவதற்கான
காலக்கெடுவான 2013 ஆகஸ்ட் மாதம் 10ஆந் திகதி சனிக்கிழமை தொழுகைகள்
ஆரம்பமாகுமென பள்ளிவாயல் அதிகாரிகள் அறிவித்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானே பள்ளிவாயல்
இயங்குவதற்கான அங்கீகாரத்தினை வழங்கினார் என்ற செய்தி நிறைவேற்று
அதிகாரமுள்ள ஜனாதிபதி சாதகமான தீர்மானமொன்றிற்கு வந்திருப்பதன் காரணமாக
தமது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதென்று முஸ்லிம்கள் மத்தியில்
மீகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சினையும் ஏற்படுத்தியது. பெருநாள்
கொண்டாட்டங்கள் முடிவுற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் மக்கள் மகிழ்சியான
தருணத்தில் இருக்கும்போது எதிர்பாராத இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கிராண்பாஸின் வெளிப் பிரதேசங்களிலிருந்து
காடையர்களும் குண்டர்களும் அருகில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் கட்டம்
கட்டமாகக் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இரகசியமாக இருவர் மற்றும்
மூவராக குறித்த பிரதேசத்தினூடாக பள்ளிவாயலுக்கு பின்புறமாக
அனுப்பப்பட்டனர். இப் பிரதேசம் பிரதானமாக சிங்கள பௌத்த குடும்பங்களை
பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமாகும். இதன் காரணமாக தாக்குதல்காரர்கள்
முஸ்லிம்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு தனது இலக்கை நோக்கி பாதுகாப்பான
சென்றடையக் கூடியதாக இருந்தது.
மஃரிப்
60 தொடக்கம் 75 வரையான கும்பலாக
தாக்குதல்காரர்கள் பள்ளிவாயலுக்கு வெளியே குவிந்தனர். சூரியன் மறைந்த
பின்னர் மேற்கொள்ளப்படும் மஃரிப் தொழுகை ஆரம்பமாவதற்கு வெறுமனே 5
நிமிடங்களுக்கு முன்னதாக குறித்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இத்
தாக்குதலை ஆரம்பிப்பதற்கான சமிக்கையாக பன்சலையில் மணி ஒலிக்கச்
செய்யப்பட்டது. குறித்த கும்பல் பொல்லுகள், இரும்புப் பட்டங்கள், கற்கள்
மற்றும் போத்தல்கள் போன்றவற்றை தம்வசம் வைத்திருந்தனர். கட்டடத்தின் மீது
எறிதலுடன் தமது தாக்குதலை ஆரம்பித்தனர். மூன்று மாடிக் கட்டடத்தில்
அமைந்திருந்த அத்தனை கண்ணாடி ஜன்னல்களும் முற்றுமுழுதாக சுக்குநூறாகின.
உதவிப் பொலீஸ் பரிசோதகர் தலைமையிலான 12
பொலீஸ் அதிகாரிகள் பள்ளிவாயல் வளாகத்தினுள் பாதுகாப்புக் கடமையில்
ஈடுபட்டிருந்தனா. ஆனால் தாக்குதல் நடாத்தப்படவுள்ளமை தொடர்பில் ஏலவே
தெளிவாக அறிந்திருந்த அவர்கள் அதனைத் தடுக்க எவ்வித முயற்சியும்
மேற்கொள்ளவில்லை. அந்தப் பாதுகாப்புப் பிரிவினர் மகிழ்ச்சியுடன் ‘வேலையை
கொடுங்கள்’ என்ற (சிங்கள மொழியிலான ‘வெட தெண்ட’ எனும்) வார்த்தையைக் கூறி
அந்தக் கும்பலை உற்சாகப் படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. நடைபெற்று
வந்த பெருநாள் கொண்டாட்டம் காரணமாக மாலை நேர தொழுகையான மஃரிப் தொழுகைக்கு
பிரசன்னமாகி இருந்தோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. மிக முக்கியமாக
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்களே அச் சந்தர்ப்பத்தில்
(சுமார் பி.ப. 6.30 மணியளவில்) பள்ளிவாயலில் இருந்தனர்.
இதனிடையே பௌத்த விகாரையில் தொடராக மணி
ஒலித்துக் கொண்டிருந்தது. அர்ப்பணிப்பு மிக்க ‘சிங்கள பௌத்தர்கள்’ என தம்மை
அழைத்துக் கொள்ளும் மற்றுமொரு காடையர்கள் கூட்டம் அந்த வளாகத்ததினுள் ஏலவே
தயார் நிலையில் இருந்தது. 50 தொடக்கம் 60 பேரடங்கிய இந்தக் குழு இது
சிங்கள பௌத்த நாடு முஸ்லிம்களும் பள்ளிவாயல்களும் இங்கிருந்து அகற்றப்பட
வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு பள்ளிவாயலை நோக்கிச் சென்றனர். இந்தக்
கும்பலை காவியுடையணிந்த இளம் பிக்குகள் தலைமை தாங்கிச் சென்றனர். இது
தெளிவாக நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலின் இரண்டாம் கட்டமாகும்
தொடராக மணி ஒலித்துக் கொண்டிருந்ததன்
காரணமாக சிங்கள பௌத்த அயல்வாசிகள் விகாரையில் ஒன்றுகூடினர். அந்த
விகாரையின் பௌத்த பிக்குகளினால் அவர்களுக்கு பிரசங்கம் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிவாயலை நிர்மூலமாக்கும் பணி தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அங்கு
திரண்டிருந்தோருக்கு கூறப்பட்டது. கோபத்திலிருந்த இக்குழுவினார் சிறு
குழுக்களாக பள்ளிவாயலை நோக்கி ஊர்வலமாகவும் சென்றனர். கிராண்பாஸிலுள்ள
‘அயோத்தி’ என்ற குறிப்பீட்டுடன்தான் தாக்குதலை மேற்கொண்டனர். இது நன்கு
இணைப்புச் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் மூன்றாம் கட்டமாகும்
பள்ளிவாயலை நிர்மூலமாக்குவதற்கு மிக
அதிகமானோரை எதிர்பார்த்து முன்னணியிலிருந்த தாக்குதல்காரர்கள் வாயில்
கதவினை களற்றிவிட்டு சாக்கடை கழிவுகளை உள்ளே எறிந்தனர் மூர்க்கமாக ஒன்று
சேரும் கூட்டத்தினருடன் பள்ளிவாயலினுள் அடர்ந்தேறுவதற்கே அங்கே
திட்டமிடப்பட்டிருந்தது. ஓடி வரும் கும்பல் ஒன்றுகூடி தாக்குதலை
மேற்கொள்வதற்கு வசதி செய்வதற்காகத்தான் வாயில் கதவும் களற்றப்பட்டது.
நான்காவது கட்டம் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி பள்ளிவாயலை முற்றாக
எரிப்பதாகும். நல்லவேளையாக அது நடைபெறவில்லை.
மோதல்கள்
கூட்டம் அதிகரித்ததனால் குறித்த கும்பல் புதிய வழிமுறைகளை தாமாகக் கருதிக்கொண்டு மேலும் அடங்காத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். ஒரு குழுவினர் முந்தைய பள்ளிவாயல் வளாகத்தை நோக்கி நகரத் தொடங்கினர். ஏனையோர் அயலில் வசித்துவரும் முஸ்லிம்களின் வீடுகளை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சிலர் பள்ளிவாயல் கட்டடத்தினுள் நுளைவதற்கு எத்தனித்தனர் எனினும் அந்த வளாகத்தினுள் இருந்த முஸ்லிம்களின் எதிர்ப்பினை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. ஏதிர்ப்பினைக் காட்டியோருள் முஸ்லிம் போதகர் ஒருவரும் இருந்தார். தாம் தொழுகையில் ஈடுபடும் இடத்தினை அழிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை அவர்கள் தைரியமாக எதிர்த்து நின்றனர் அதேவேளை தமக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்பி இருந்த சட்ட ஒழுங்கின் காவலர்களான காக்கி சீருடை அணிந்தோர் இந்தக் காட்டுமிராண்டித்தனம் நடந்தேறியபோது அதனை அங்கீகரிப்பதுபோல் பார்வையாளர்களாக இருந்தனர்.
கிராண்பாஸ் அல்லது கொழும்பு 14 என்பது
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர் மற்றும் பறங்கியர் ஆகியோர்
ஒற்றுமையாக வாழும் பல்லினப் பிரதேசமாகும். அண்மைக் காலத்தில் முஸ்லிம்களின்
சனத்தொகை இப்பிரதேசத்தில் துரிதமாக அதிகரித்துள்ளது. மொலாவத்தைப்
பள்ளிவாயல் முதலில் 1966ஆம் ஆண்டு மரத்தினால் கட்டப்பட்டபோது 20 முஸ்லிம்
குடும்பங்கள் மாத்திரமே இப் பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது 430 முஸ்லிம் குடும்பங்கள் இப்பள்ளிவாயலில் தம்மைப் பதிவுசெய்து
கொண்டுள்ளன. இந்தக் குடும்பங்களில் 800இற்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள்
உள்ளனர்.
பள்ளிவாயல் மீதான தாக்குதல் தொடர்பான
தகவல் பரவியதும் அப்பிரதேச மக்கள் ஆத்திரமடைந்ததோடு பள்ளிவாயலை நோக்கி
விரைந்துவரத் தொடங்கினர். இவ்வாறு விரைந்துவரத் தொடங்கியவர்களுள் ஸ்ரீலங்கா
தௌஹீத் ஜமாஅத் என அறியப்பட்ட இஸ்லாமிய அமைப்பின் அங்கத்தவர்களும்
இருந்தனர். இவர்களுடன் பொறுப்புமிக்க மற்றும் மதிப்பிற்குரிய இஸ்லாமிய
பெரியார்களும் இணைந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் குண்டர்களை
கலைக்குமாறும் பள்ளிவாயலைப் பாதுகாக்குமாறும் ஒருமித்த குரலில் பொலீஸாரை
வேண்டி நின்றனர்.
இதுவரை அசைவற்றிருந்த பொலீஸார் திடீரென
செயற்படத் தொடங்கினர். கிராண்பாஸ் பொலீஸ் நிலையத்திலிருந்து மேலதிக உதவிகள்
சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தன. எனினும் பள்ளிவாயலை நிர்மூலமாக்குவதை
இலக்காகக் கொண்டிருந்த சிங்கள பௌத்த கும்பலை கலைப்பதற்கு பொலீஸார் எவ்வித
முயற்சியும் எடுக்கவில்லை இதற்குப் பதிலாக தமது பள்ளிவாயலினைப்
பாதுகாப்பதற்காக கோபமடைந்த நிலையில் குழுமி இருந்த முஸ்லிம்களையே கலைக்க
பாதுகாப்புத் தரப்பினர் முயன்றனர். எவ்வாறெனினும் சிரித்த முகத்துடன்
வீட்டுக்குச் செல்லுங்கள் என குறித்த தாக்குதல் கும்பலிடம் சில
பொலீஸ்காரர்கள் கூறியது கேட்டது. இதிலிருந்து பொலீஸார் சம்பவம் தொடர்பில்
எவ்வித அக்கறையும் இல்லாமல் இருந்தமை தெளிவாகிறது.
கோட்டாபாய
இதனிடையே முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு
நிலைமை தொடர்பில் தகவலளிக்கப்பட்டது. ஏதிர்பார்க்கப்பட்டது போலவே பலர்
பாதுகாப்புக்குப் பொறுப்பான மிக அதிகாரம்வாய்ந்த பாதுகாப்பு மற்றும் நகர
அபிவிருத்தி செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷவினை தொடர்பு கொண்டனர். அவர்
தனக்கு பெயர்கிடைக்கும் வகையில் கோட்டாபாய ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கை
எடுத்து கலகத்தடுப்புப் அதிரடிப்படை உள்ளிட்ட மேலதிக பொலீஸார் அனுப்பி
வைக்கப்பட்டனர். விஷேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். வெலிவேரிய
பிரச்சினை காரணமாக இராணுவத்தினர் அழைக்கப்படவில்லை எனினும் அவசியம்
ஏற்பட்டால் ஈடுபடுத்தப்படும் வகையில் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதிகமதிகமாக பொலீஸாரின் வருகையினைத்
தொடாந்து முஸ்லிம் தலைவர்கள் தொடர்ச்சியாக தாக்குதல் கும்பல்களைக்
கலைக்குமாறும் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறும் கோரினர் எனினும்
முஸ்லிம்கள் முதலில் இப் பிரதேசத்தைவிட்டுச் செல்ல வேண்டுமென உயர் பொலீஸ்
அதிகாரிகள் வலியுத்தினர். முஸ்லிம் தலைவர்கள் குறிப்பாக தௌஹீத் ஜமாஅத்
அதிகாரிகள் பள்ளிவாயலை நிர்மூலமாக்குவதற்கு எத்தனிக்கும் கும்பல்
கலைக்கப்படும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது பள்ளிவாயலின்
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பிரதேசத்திலிருந்து அகன்று செல்ல
முடியாதென திட்டவட்மாக மறுத்துவிட்னர். இது வாக்குவாதம் எற்படும்
நிலையினைத் தோற்றுவித்தது.
பின்னர் பற்றுறுதிமிக்க முஸ்லிம்
இளைஞர்கள் அதிகமதிகமாக சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து
நிலைமை வேறுபுறமாகத் திரும்பியது அல்லாஹ்வின் இல்லம் என அவர்கள் அழைக்கும்
பள்ளிவாயலை பாதுகாப்பதற்காக வன்முறையின் மூலம் எதிர்பினை வெளிப்படுத்த பல
முஸ்லிம் இளைஞர்கள் தயாரானார்கள். முஸ்லிம்கள் அதிகரிக்க அதிகரிக்க நிலைமை
மாறத் தொடங்கியது. ஆத்திரமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்த
கும்பல்களை நோக்கிச் சென்றனர். சண்டைகள் தொடங்கும் தறுவாயில் சூழ்நிலை
இருந்தது.
ஆட்களின் எண்ணிக்கையில் பலமாகவும் தடிகள்
மற்றும் இரும்புப் பட்டங்களை எந்தியும் இருந்த போதிலும் அவர்கள் கோழைகள்
என்பது விரைவிலேயே அம்பலமானது. கண்ணாடிகளுக்கு எறிந்து சேதத்தை ஏற்படுத்திய
கும்பல் மீது முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகரித்தது. ஆத்திரமடைந்த முஸ்லிம்
இளைஞர்கள் குண்டர்களை ஓட ஓட விரட்டினர்.
சண்டையிடும் இயல்பூக்கத்தன்மை
வேட்டையாடுபவனே இரையாகின்ற நிலையினைப்போல்
சூழ்நிலை மாற்றமடைந்ததால் பொலீஸார் குழப்பமடைந்தனர். அவர்கள் சிங்கள பௌத்த
கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கினர். சண்டையிடும் இயல்பூக்கத்தன்மையில்
இருந்த முஸ்லிம் இளைஞர்களைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பக்கச்சார்பாக செயற்படும் பொலீஸாருடன் மோதுவதற்கும் அவ்விளைஞர்கள் ஆயத்தமாக
இருந்தனர். மோதல்கள் இடம்பெற்றன. எனினும் எதிர்தாக்குதலில்
ஈடுபடுவதிலிருந்து இளைஞர்களைத் தடுத்து அவர்களை பிரதேசத்திலிருந்து
வெளியேற்றி நிலைமை பாரதூரமாக மாறிவிடாதவாறு முஸ்லிம் பெரியார்களும் சமயத்
தலைவர்களும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
ஸ்தலத்திற்கு வருகைதந்த பொலீஸ் அதிகாரிகள்
தமது மேலதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தனர். பின்னர் குறித்த கும்பலைச்
சேர்ந்தோரிடம் வீடுகளுக்கு செல்லுமாறு கோர ஆரம்பித்தனர். எதிர்த்துப்
போரிடுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த உறுதிமிக்க
முஸ்லிம் இளைஞர்கள் தமது பள்ளிவாயலைப் பாதுகாக்க கடுமையான உறுதிப்பாட்டுடன்
இருந்தனர். குறித்த கும்பல் தாமாக கலைய ஆரம்பித்தது. அவர்களுள் ஒருவரைக்
கூட கைது செய்யாது அவர்களுக்கு பொலீஸார் பாதுகாப்பு வழங்கினர்.
பெரும்பாலானோர் பௌத்த தேரரர்களுடன் பௌத்த விகாரைக்குச் சென்றனர். இதில்
முக்கியமானதொரு விடயம் என்னவென்றால் வெளியிடங்களிலிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்ட குண்டர்கள் மழிக்கப்பட்ட தலையுடன் காணப்பட்டனர். இவர்களுள் சில
குண்டர்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிமுகமானவர்கள் போல் இருந்தனர்
சிங்கள பௌத்த கும்பல் கலைந்து
சென்றுகொண்டிருந்தபோது பொலீஸ் உயரதிகாரிகள் முஸ்லிம்களின் பக்கம்
திரும்பினர். கலந்துரையாடலைத் தொடர்ந்து பொலீஸார் மூன்று உறுதிமொழிகளை
முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்கினர். முதலாவது இதற்கு பின்னர்
தாக்குதல்களிலிலிருந்து பள்ளிவாயல் பாதுக்கப்படும். இரண்டாவது ஆகஸ்ட் மாதம்
11ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பள்ளிவாயலில் தொழுகைகளை நடாத்த
முடியும். மூன்றாவது தாக்குதலுக்கு காரணமானோர் 24 மணித்தியாலங்களுக்குள்
கைது செய்யப்படுவர். பொலீஸ் அதிகாரிகளினால் இவ்வுறுதிமொழிகள்
வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிவாயலில் இருந்த முஸ்லிம் தலைவர்களும்
இளைஞர்களும் அங்கிருந்து அகன்று செல்ல ஆரம்பித்தனர்.
தௌஹீத் ஜமாஅத் அதிகாரிகளும் ஏனைய முஸ்லிம்
பெரியார்களும் சம்பவ இடத்திலிருந்து வெளியேறும்போது சிங்கள மொழியில்
கொஸ்கஸ் ஹந்திய என்றும் தமிழில் பலாமரத்தடி சந்தி என்றும் அறியப்பட்ட
கிராண்பாஸ் சந்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்
திரண்டிருந்தனர். பள்ளிவாயல் தாக்கப்படுகின்றது என்ற செய்தியைக்
கேள்வியுற்று பள்ளிவாயலை நோக்கி வந்த அனைத்து வயதுத் தரங்களையும் கொண்ட
ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்களே அவர்களாவர். எனினும் பொலீஸார் தடைகளைப்
போட்டு அவர்களை முன்னேற விடாது தடுத்திருந்தனர். அங்கிருந்த முஸ்லீம்கள்
பதட்டத்துடனும் கோபமுற்ற மனநிலையிலும் காணப்பட்டனர் முஸ்லிம் தலைவர்கள்
அங்கு என்ன நடந்தது என்பது பற்றி விளக்கியதோடு அங்கிருந்த முஸ்லிம்
குடும்பங்களை கலைந்து செல்லவும் வைத்தனர்.
சந்தேகம்
ஆத்திரமடைந்துள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் பொலீஸாரினால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி தொடர்பில் சந்தேகம் கொண்டுள்ளனர். முஸ்லிம் நிறுவனங்கள் பௌத்த கடும்போக்காளர்களால் தாக்கப்படும் போது கவலை தரக்கூடியதான பொலீசாரின் நடவடிக்கைகளை நோக்கும்போது இந்த சந்தேகம் புரிந்துகொள்ளத்தக்கதாகும். கிராண்பாஸ் பள்ளிவாயலைத் தாக்கிய கும்பலுக்கு பொலீசார் இரகசியமாக ஒத்துழைப்பு வழங்கியதன் காரணமாக மீண்டும் நள்ளிரவில் திடீரென பள்ளிவாயல் தாக்கப்படலாம் என முஸ்லிம் இளைஞர்கள் அஞ்சுகின்றனர். இச் சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஆர்.எஸ்.டி.தயானந்தவின் நடத்தை அமைந்துள்ளது. கிராண்பாஸில் பள்ளிவாயல் இயங்குவதற்கு அனுமதிக்க மாட்டேன் என முஸ்லிம் தலைவர்களை தயானந்த அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் நூற்றுக்கணக்கான
முஸ்லிம் இளைஞர்கள் கிராண்பாஸ் அவ்வல் ஸாவியா வீதியில் ஒன்றுகூடி
விழித்திருந்தனர். பள்ளிவாயல் மீது மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால்
வழிப்பாய் இருந்து உடனடியாக பதிலடி கொடுப்பதற்கு தயாராய் இருப்பதே
இவர்களது திட்டமாகும். எனினும் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விஷேட
அதிரடிப் படையினர் ஆத்திரமடைந்துள்ள முஸ்லிம் இளைஞர்களுடன் சினேகபூர்வமான
பேச்சுக்களை ஆரம்பித்து பள்ளிவாயலுக்கு எதிராக மீள உருவாகும் தாக்குதல்களை
தடுப்பதாக உறுதியளித்துள்ளனர். முஸ்லிம் பெரியார்களும் இளைஞர்களிடம் அவ்வல்
ஸாவியா வீதியில் காவலிருக்காது வீடுகளுக்கு செல்லுமாறு
கேட்டுக்கொண்டுள்ளனர். முஸ்லிம் இளைஞர்களும் அடிபணிந்து விஷேட அதிரடிப்
படையினர் மீது தாம் நம்பிக்கை வைத்து அவ்வாறு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
மோதல்களில் பலர் காயமடைந்த போதிலும்
இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் உட்பட எட்டுப்பேர் மாத்திரமே
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 7
மணிவரை ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது கிராண்பாஸில்
அமைதி நிலவினாலும் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்ற நிலையிலேயே
காணப்படுகிறது.
DBS Jeyaraj can be reached at ~ dbsjeyaraj@yahoo.com


Post a Comment