ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு.
25 ஜுலை 2013
ஜனாதிபதி அவர்கட்கு,
தம்புள்ளை பிரதேசத்தில் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் பற்றி ஏற்கனவே பல தடவை நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். ஆனால் இன்னமும் இந்த பிரச்சினை ஓய்ந்த பாடாகத் தெரியவில்லை.
பல தலைமுறைகளாக தம்புள்ளை நகரை மையமாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் உங்கள் அரசுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ நான் அறியேன். அந்த விடயத்தில் உங்கள் இளைய சகோதரர் தலைமையிலான நகர அபிவிருத்தி அமைச்சு எந்த இணக்கத்துக்கும், விட்டுக் கொடுப்புக்கும் வராமல் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியெற்றுவதிலேயே முனைப்பாகச் செயற்படுகின்றது.
ஏற்கனவே தம்புள்ளை நகரில் வாழும் முஸ்லிம்களுக்கு வீடுகளுக்கும் அவர்களின் வர்த்தக நிலையங்களுக்கும் மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அமைச்சு எழுத்து மூலம் மக்களுக்கு உறுதி அளித்துள்ளது. (இந்தக் காணிகள் மனிதக் குடியிருப்புக்கு பொருத்தமற்றவை என்பது ஒரு புறம் இருக்கட்டும்) தற்போதைய இடங்களை காலி செய்வதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சில கடிதங்களை உங்கள் பார்வைக்காக இத்தோடு இணைத்துள்ளேன்.
நிலைமை இப்படி இருக்க நேற்று (24.07.13) அந்தப் பகுதிக்குச் சென்ற நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் சிலர் தம்புள்ளை நகரிலிருந்து முஸ்லிம்கள் நாளைய தினத்துக்குள் (26.07.13) தங்களது இருப்பிடங்களை காலி செய்து கொண்டு வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.அது மட்டுமன்றி ஏற்கனவே வாக்களித்தது போல் மாற்றுக் காணிகள் எதுவும் வழங்கப்படாது என்றும் கூறியுள்ளதாக அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
உங்களுக்கு நன்கு தெரியும் இது புனித நோன்பு காலம். இன்னும் இரண்டு வாரத்தில் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை எதிர் நோக்கியுள்ளனர்.இவ்வாறான ஒரு சூழலில் அவர்களை தங்களது வாழ்விடங்களிலிருந்து ஒட்டு மொத்தமாகத் துறத்த நினைப்பதில் என்ன நியாயம் உள்ளது? அந்த மக்கள் எஞ்சியிருக்கும் நோன்பை எப்படிக் கடத்துவார்கள்? பெருநாளை எப்படி எதிர் கொள்வார்கள்? முஸ்லிம்கள் விடயத்தில் ஏன் நீங்களும் LTTE யை போன்றே நடந்து கொள்ளுகின்றீர்கள்?
தயவு செய்து இந்த விடயத்தில் உங்கள் மேலான கவனத்தைச் செலுத்தி நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்கள் தமது மேலான சமயக் கடமைகளை நிம்மதியாக நிறைவேற்ற வழிகிடைக்கவும் ஆவண செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சரியான நேர்வழியைக் காட்ட வேண்டும் என இந்தப் புனித மாதத்தில் பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு
அஸாத் சாலி
தலைவர்
தேசிய ஐக்கிய முன்னணி
Post a Comment