Home முஸ்லிம் சமூகத்தின் மீதான கீழ்த்தரமான பிரசாரங்களும் தாக்குதல்களும் எல்லைமீறி செல்வதால் ஒன்றியத்தை கூட்டுங்கள்: பௌஸிக்கு ஹசன் அலி கடிதம்
முஸ்லிம் சமூகத்தின் மீதான கீழ்த்தரமான பிரசாரங்களும் தாக்குதல்களும் எல்லைமீறி செல்வதால் ஒன்றியத்தை கூட்டுங்கள்: பௌஸிக்கு ஹசன் அலி கடிதம்
முஸ்லிம் சமூகத்தின் மத, கலாசார விழுமியங்கள் மீது
தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் நாகரிகமற்ற
கீழ்த்தரமான பிரசாரங்களும் தாக்குதல்களும் எல்லைமீறி
செல்கின்றன. இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்
பிரதிநிதிகளாகிய நாம் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு
ஒன்றுகூடி கலந்தாலோசிக்க வேண்டும். இதனால் தங்களது தலைமையில்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் உடனடியாக கூட்டப்பட
வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியிடம் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் அமைச்சர் பௌஸிக்கு நேற்று கடிதமொன்றினையும் அனுப்பிவைத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
அண்மைக்காலமாக
நமது முஸ்லிம் சமூகத்தின் மத, கலாசார விழுமியங்கள் மீது
தொடந்தேர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் நாகரிகமற்ற
கீழ்த்தரமான பிரசாரங்களும் தாக்குதல்களும் எல்லைமீறி
கட்டுக்கடங்காத ஒரு நிலைமையினை அடைந்துவிட்டதாக பலர்
அச்சமுற்றுள்ளனர்.
நமது சமூகத்தினர் இதுவரை பொறுமையுடன் பேணிப்
பாதுகாத்து வரும் கட்டுக்கோப்பினை தகர்த்தெறியும் உள்நோக்குடன்
நமது உணர்வலைகளைத் தூண்டும்வகையில் பல சம்பவங்கள் அவ்வப்போது
திட்டமிட்டவாறு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
எப்படியாவது
நமது சமூகத்தை இன்னுமொரு இனக்கலவரத்துக்குள் வலிந்து
மாட்டிவிடவேண்டும் என ஒருசாரார் பகீரதப்பிரயத்தனம் எடுத்து
வரும் அதேவேளை மறுசாரார் எதுவும் நடக்காதது போல் கடைக்கண்
பார்வையுடன் பாசாங்கு செய்துவரும் நிலைமையினை தொடரவிடுவதானது
ஆபத்தான ஒரு சூழலுக்குள் நமது சமூகத்தை இட்டுச்செல்லும் என பலரும்
எச்சரிக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்
வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளாகிய நாம் நமது கட்சி வேறுபாடுகளை
ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுகூடி கலந்தாலோசித்து இந்நாட்டில்
வாழும் சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை
வலுக்கட்டாயமாக பாதுகாக்கவேண்டியுள்ளது.
எனவே, தங்களது
தலைமையில் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்
உடனடியாக கூட்டப்படவேண்டும் என தங்களை பணிவன்புடன்
வேண்டிக்கொள்கின்றேன்.
மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல்
தாக்கப்பட்டு தற்போது மூடப்பட்டுள்ள நிலைமையில் பள்ளிவாசல்
நிர்வாகமானது மீண்டும் அதனை திறப்பதானால் ஜனாதிபதியவர்களின்
உத்தரவை நாடிநிற்கின்றது.
நியாயமான அவர்களின்
கோரிக்கையினை ஜனாதிபதியவர்களின் கவனத்திற்குக்
கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு அரசியல் பிரதிநிதிகளான நமது
தலைகளில் தற்போது சுமத்தப்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஜனாதிபதியவர்களிடமிருந்து
சாதகமான உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் நம்மீது சேற்றை வாரி
வீசிவருபவர்களின் எதிர்ப்பலைகளும் ஓரளவு தணிந்து விடக்கூடிய
வாய்ப்புக்கள் உண்டு. எனவே நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினை
உடனடியாகக் கூட்டுமாறு மீண்டும் ஒருமுறை வேண்டி விடைபெறு கின்றேன்
Post a Comment