மஹியங்ககனை பள்ளிவாசல் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் அப்பள்ளிவாசல்
மீண்டும் திறக்கப்பட்டு அதில் இறை வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெற இப்புனித
ரமழான் மாதத்தில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்திக்குமாறு மஹியங்கனை
பள்ளிவாசல் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தள்ளது.
இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் சீனி மொஹம்மது ஹாஜியார் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்ததாவது,
மஹியங்கனை பள்ளிவாசலை மீண்டும் திறக்கச் செய்வதற்கான முயற்சிகளை எமது
பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பில் உயர் மட்டங்கள்,
முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையுடனும்
பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறோம். இவற்றுக்கு மேலாக எமது பிரார்த்தனைகள்
அவசியமாகிறது.
எனவே இலங்கை முஸ்லிம் சகோதர, சகோதரரிகளிடம் இந்த புனித ரமழான் மாதத்தில்
மஹியங்கனை பள்ளிவாசல் திறக்கப்பட வேண்டுமென அல்லாஹ்விடம் உருக்கமான
முறையில் பிரார்த்தனை செய்யுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை திறப்பதற்கு ஆத்திரமூட்டும் பேச்சுக்களோ,
ஆத்திரமான அறிக்கைகளோ, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகளோ ஒருபோதும் உதவாது.
பிரார்த்தனையும், நிதானமும், பொறுமையும் நிச்சயமாக உதவும். பிரதேச மற்றும்
பிரதேசத்திற்கு அருகில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்தும் நாம்
சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் கிராமங்களை சுற்றி பெரும்தொகையில்
சிங்கள சகோதரர்கள் வாழுவதையும் நாம் கவனத்திற்கொண்டே எமது செயற்பாடுகளை
அமைத்துக்கொள்ள வேண்டும். எனவே நிலைமைகளை உணர்ந்து அல்லாஹ்விடம்
பிரார்த்திக்கும்படி இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம்
எனவும் அவர் மேலும் கூறினார்.
Post a Comment