வேறு அமைச்சர்களின் பிள்ளைகளும் பலவிதமான குழப்படிகளில் ஈடுபடும்போது,
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனை மட்டும் குறை கூறமுடியாது என
ஐக்கிய தேசியக் கட்சி இன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தில் உள்ள சில முக்கியஸ்தர்களின் பிள்ளைகள் மக்களை அடிக்கும்
அளவுக்கு செல்கின்றனர் என ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான
ஹரின் பெர்னாண்டோ கூறினார்.
அமைச்சர் ரம்புக்வெல்லவின் மகன் தவறுதலாக விமானத்தின் கதவைத் திறக்க
முயன்றபோது அதிலிருந்த வெளிநாட்டு பயணிகள் 'ஆசிய மடையன்கள், ஆசிய
மடையன்கள்' என சத்தமிட்டதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகன்கள் உட்பட பல அமைச்சர்களின் பிள்ளைகள் மாகாண
சபை தேர்தலில் போட்டியிடவுள்ளனர். தேர்தல்கள் அறிவிக்கப்பட முன்னரே
இவர்களின் பத்திரிகை விளம்பரங்கள் வந்துவிட்டன என அவர் கூறினார்.
சில வருடங்களின் முன்னர் எனது நெருங்கிய உறவினர்கள் ஐ.தே.க.வின் தீவிர
அரசியலில் பங்குபற்றியதால் எனக்கு வேட்பாளர் நியமனம் மறுக்கப்பட்டது என
அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு பசளை வழங்கப்படாமை, அரச நிறுவனங்களின் பெரும் அளவிலான
நட்டங்கள் போன்ற பல பிரச்சினைகளையும் மூடி மறைக்க அரசாங்கம் 13ஆம்
திருத்தத்தை பயன்படுத்துகின்றது என அவர் கூறினார்.
Post a Comment