சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில்
இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள்
அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்ரேலிய அணியை
வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி தற்போது கார்டிப் மைதானத்தில்
இன்று இந்தியாவுடன் மோதுகிறது.
இது குறித்து ஜெயவர்த்தன கூறுகையில்,
அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு மிகவும் ஆவலாக
உள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்றுப் போனது குறித்து
எவ்வித கவலையும் எமக்கு இல்லை.
இது முக்கியமான அரையிறுதி ஆட்டமாகும். இதில் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே எங்கள் கவனத்தை செலுத்தவுள்ளோம்.
இந்திய அணி மிகச் சிறப்பான அணியாகும்
தற்போது அபாரமாக விளையாடி வருகிறது. அவர்களின் துடுப்பாட்ட வரிசை மிக
வலுவானதாக உள்ளதால் அதை கவனத்தில் வைத்தே விளையாடுவோம்.
ஒரு நாள் போட்டிகளில் 11,000 ஓட்டங்கள்
எடுத்தது குறித்து திருப்தி அடைகிறேன். ஆனால் அதனை பெரிதாக நினைக்காமல்,
மீண்டும் அணியை எவ்வாறு வலுவுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதில்தான் நாங்கள்
கவனம் செலுத்துவோம்.
அரையிறுதி சுற்றோ, இறுதிச்சுற்றோ எல்லா
ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஒத்துழைத்து
விளையாடினால் இலங்கை அணிக்கு வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறினார்.

Post a Comment