-ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின்
அதிஉச்ச பீட உறுப்பினர், கல்வி மனித உரிமைகளுக்கான பணிப்பாளரும் முன்னாள்
‘சிரான்’ சமாதான செயலக பணிப்பாளர் பழீல்-
ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் ஒரு இனவாதக் கட்சி
அல்ல. இனவாதம் அல்லது இனத்துவேசம் என்பது தனது இனம் மட்டும் வாழவேண்டும்,
வளர்ந்தோங்க வேண்டும் ஏனைய இனங்கள் அழிந்துபோகவேண்டும் அல்லது வாழவிடாது
அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை வைராக்கியத்தோடு பேசுவது
செயற்படுவதுமான நச்சுத்தன்மை கொண்டதாகும்.
தனது இனத்தை உயர்த்துவதற்காக மற்றைய
இனங்களை அழிக்கவேண்டும் என்ற கொடூரத்தன்மை கொண்டது தான் இனவாதமாகும்.
இவ்வாறான கொள்கையிலோ செயற்பாட்டிலோ சி.ல.மு. காங்கிரஸ் இன்று மட்டுமல்ல
என்றுமே இந்த நாட்டில் பேசவும் இல்லை இயங்கவும் இல்லை.
இந்த
யதார்த்தத்தை பகுத்தறியும் சக்தி இல்லாமல் மறைந்த தலைவர் அஷ்ரப் கட்சியை
வளர்ப்பதற்காக ஆரம்பத்தில் இனவாதம் பேசினார். அதே போன்று சமகாலத் தலைவர்
ரவூப் ஹக்கீம் தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பின் போது இனவாதம் பேசித்தான்
தேர்தலை வென்றார் என்று அமைச்சர் அதாவுல்லா கூவித்திரிவது அவரின்
விளக்கமற்ற தன்மையா?….. அல்லது சிறுபான்மை சமுதாயங்களை மீண்டும் ஒருமுறை
மோசடிசெய்து காட்டிக்கொடுப்பதற்கு அவர் ஆடும் கபட நாடகமா? என்பது புரியாத
புதிராக உள்ளது.
இவ்வாறு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் அதிஉச்ச பீட
உறுப்பினரும் அதன் கல்வி மனிதஉரிமைகளுக்கான பணிப்பாளரும் முன்னாள்
‘சிரான்’ சமாதான செயலக பணிப்பாளருமான ஜனாப். பழீல் பொத்துவிலில் வைத்து
மு.கா பற்றி அமைச்சர் அதாவுல்லா தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பாக
வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் ஜே.வி.பி, தேசிய சுதந்திர
முன்னணி, ஜாதிக ஹெல உருமய, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள்
இனவாதத்தை அள்ளி வீசி பேசியும் செயற்பட்டும் வருவதனை இந்நாட்டு மக்கள்
நன்கு அறிவார்கள். பள்ளிவாசல் உடைப்புக்கள், ஹலால் பிரச்சினை, 13வது
திருத்த சட்டம் போன்றவற்றில் இத்தீவிரவாதிகளின் மேலாதிக்கம் ஓங்கியுள்ளது.
இது ஒரு பௌத்த நாடு எமது சட்ட சம்பிரதாய வழக்குகளுக்கு ஏற்பதான்
இந்நாட்டிலுள்ள எல்லா இனங்களும் வாழவேண்டும் அதற்கு முடியாதவர்கள் வெளியேறி
சவுதிஅரேபியா, பங்களாதேஷ் போன்ற அரபு நாடுகளுக்கு சென்று குடியேறவேண்டும்
என சமீபகாலங்களில் அப்பட்டமாக அவர்கள் அடித்து கூறிவருகின்றனர். அமைச்சர்
அதாவுல்லாவும் இன்று வெளிப்படையாகவே இந்த அணிகளின் அடிப்படை கருத்துக்களோடு
முழுமையாக இணைந்துவிட்டாரா? என்று நம்புமளவிற்கு அவர் சமீபகாலங்களில்
மேடைகளில் பிதற்றிவருகின்றார்.
ஆனால் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் என்பது வெறுமனே
ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு ‘சமுதாயக் காப்புக்கான’ ஒரு இயக்கமாகும்.
ஏனைய பேரினவாதக் கட்சிகள் போன்று வெறுமனே சடவாத அபிவிருத்திகளை மட்டும்
மையப்படுத்தி நாமும் இயங்குவதாக இருந்தால் இன்று அபிவிருத்தியிலும் தொழில்
வழங்குவதிலும் நாம் எங்கேயோ போயிருக்கலாம். அதாவுல்லாவும் மாகாண அமைச்சர்
உதுமா லெவ்வையும் செய்வதைப் போன்று குளங்களை நிரப்பி நாமும் அபிவிருத்தி
அரசியல் செய்திருக்கலாம். ஆனால் இந்த பௌதீக அபிவிருத்திகளை விடவும் எமது
மானம், மரியாதை, அடையாளம், ஐக்கியம், சமூக சமய விழுமியங்கள், உரிமைகள்
என்பன எமக்கு முக்கியமானவையாகும். இது தான் எமக்கும் ஏனைய கட்சிகளுக்கும்
குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலுமுள்ள அடிப்படை வேறுபாடாகும். ஆனால்
தன்மானத்தோடும் உரிமைகளோடும் கூடிய அபிவிருத்தி என்பதே
ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் இலக்காகும். இதனையே எமது கட்சியினூடாகவும் எமது
பேரம் பேசும் அரசியல் சக்தியினை கூட்டுவதன் மூலமாகவும் செய்துகொள்ளலாம்
என்பது மறைந்த தலைவர் அஷ்ரப் காட்டிச்சென்ற வழிமுறையாகும். இதன் உதாரண
சின்னங்களாகத்தான் தென்கிழக்கு பல்கலைக்கழகமும், ஒலுவில் துறைமுகமும்
இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. இந்த அடிப்படைகளில் இருந்து நாம் இன்னும்
மாறவில்லை. இனியும் மாறமாட்டோம். எமது உரிமைகள் தன்மானம், சமூக சமய
உரிமைகளுக்கு முன்னால் எலும்புத்துண்டுகளான பட்டம் பதவிகள் எல்லாம்
துச்சமென மதிக்கும் அந்த தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் தான் ஸ்ரீ.ல.மு.
காங்கிரஸ் போராளிகள். தேர்தல் காலங்களில் தலைவர் அஷ்ரபின் படம், கட்சிப்
பாடல்கள், மேடைப் பேச்சுக்களை எல்லாம் போஸ்டர்களிலும் ஒலிபெருக்கிகளிலும்
ஒலிக்கச் செய்து வேஷம்போட்டு முஸ்லிம் சமுதாயத்தை மோசடி செய்து ஒரு நாளும்
ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ்; பிழைப்பு நடத்தாது.
‘அதாவுல்லா எப்பொழுதுமே அஷ்ரப்பின்
பாசறையில் வளர்ந்தவன் நான் என்று’ தம்மை பிதற்றிக்கொள்வதை எம்மால்
விளங்கமுடியாமல் உள்ளது. தலைவர் அஷ்ரப் என்றுமே அதாவுல்லாவின் மோசடி
அரசியலுக்கு இந்த சமுதாயத்தை இட்டுச்செல்லவி;ல்லை. சமுதாயத்தை ஒன்றினைத்து
ஐக்கியப்படுத்தி அதன் பலத்தினால், அரசியல் பேரம் பேசலினால் அரசியல்
தலைவிதிகளை மாற்றி ஏன் இந்நாட்டின் முழுவதுமான அரசியல் தலைவிதியினையே
முற்றாக மாற்றுவதற்கு ஆணித்தரமான முறையில் 2000 ஆம் ஆண்டில் புதியதொரு
அரசியல் கலாச்சாரத்தைக் கொண்ட யாப்பு முறைமையினை துணிச்சலோடு
நாடாளுமன்றத்தில் முன்வைத்துவிட்டுத்தான் அவர் மறைந்தார். ஸ்ரீ.ல.மு.
காங்கிரஸிற்கு மேலதிகமாக அவர் ‘தேசிய ஐக்கியமுன்னணியை’ (நு.ஆ) உருவாக்கியது
ஒரு துரதிருஷ்டியான இலக்கோடேயாகும். அது ஒரு பாரிய தேசிய பணி என்பதனால்
அதன் பரிமாணத்தை எடுத்துச் செல்ல ஏனைய கட்சிகள் இனங்களை எல்லாம்
உள்வாங்குவதற்காகத்தான் அவர் ‘நு.ஆ’ கட்சியினை ஆரம்பித்தார். ஆனால்
அதாவுல்லா நினைப்பது போல் முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக்கொடுப்பதற்காகவல்ல.
அந்த புதிய அரசியல் கலாச்சாரத்தின் மூலம் இனப்பிரச்சினையற்ற, சுபீட்சமும்
ஐக்கியமும் சௌபாக்கியமும் நிறைந்த ஓர் உன்னத இலங்கையை உருவாக்கலாம் என்ற
அவரின் தூரதிருஷ்டியான கனவின் ஆரம்பமே அதுவாகும். இதை விளங்க முடியாத
அதாவுல்லா அஷ்ரப்பின் பாசறை பற்றி பேசி சமுதாய மோசடி செய்ய நினைப்பது வேதனை
அளிக்கின்றது.
சமகாலத்
தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கு மோசடி அரசியல்
செய்யும் அதாவுல்லாவுக்கு எந்த அருகதையும் கிடையாது. சோதனைகள் வேதனைகளுக்கு
மத்தியிலும் கட்சியினதும் ஸ்தாபகத் தலைவரினதும் அடிப்படைகளில் நின்றும்
மாறாமல் இந்த சமுதாயக் காப்பான ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் என்னும் ‘அமானித
அங்கவஸ்திரத்தினை’ இன்று வரையும் காத்துவரும் பொறுமையும், மனிதாபிமானமும்
கொண்ட ஒரு பக்குவமான தலைவராகவே நாங்கள் இன்றும் அவரை பார்க்கின்றோம்.
சிலவேளை சந்தர்ப்பவாதங்களில் அவர் மாட்டிக்கொண்டு கட்சியெனும் அமானிதத்தை
பாதுகாப்பதற்காக நிர்ப்பந்தங்களின் பேரில் சில கசப்பான தீர்மானங்களை எடுத்த
சூழ்நிலைகளை நாம் அறிவோம். ஆனால் அதனால் இன்று நாங்களே பதம்
பார்க்கப்படும் அபாக்கிய நிலைமைக்கு ஆளாகியுள்ளோம். குறிப்பாக 18வது
திருத்தம், கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு, ‘திவிநெகும’ சட்டமூலம்
போன்றவற்றிற்கு நாம் அளித்த ஆதரவுகளை பயன்படுத்தி எமது கண்களை நாமே
குத்திகொள்ளவேண்டிய சூழ்நிலைகள் விரைந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆயினும் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை, ஹலால் பிரச்சினை போன்றவற்றில்
இந்நாட்டு முஸ்லிம்களும் சி.ல.மு. காங்கிரஸூம் அதன் தலைவரும் பொறுமையோடு
கைக்கொண்ட பக்குவமான அணுகுமுறை இன்று பலராலும் சிலாகித்து பேசப்படுகின்றது.
முஸ்லிம் சமுதாயத்தின் அடித்தளத்தில் நின்று ‘பைஅத்’ இன் அடிப்படையில்
வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஒரு இயக்கம் அச் சமுதாயத்தின் உரிமைகளும்,
மானம்மரியாதைகளும் பறிபோகின்ற போது ஆமாப் போடுவது சமுதாய துரோகத்தனம்
மட்டுமல்ல இறைவனின் கோபத்திற்குள்ளாகும் செயலுமாகும். இதனை எமது கட்சியோ
தலைவரோ என்றுமே செய்யப்போவதில்லை.
இது தனது முழு அரசியல் வாழ்வையுமே
குதிரையோட்டமாக மாற்றி சமுதாயத்தை காட்டிக்கொடுத்துவரும் அதாவுல்லா
போன்றோருக்கு கைவந்த கலையாக மாறி இருக்கின்றது. எனவே தான் 3 தசாப்தங்களாக
கொழுந்துவிட்டெரிந்த வடகிழக்கு பிரச்சினைக்கு, அதன் மக்களுக்கு சிறு
மூச்சுவிடுவதற்கான இடைவெளியாக உருவாக்கப்பட்ட ஏற்பாடு தான் 1978 ஆம் ஆண்டு
இந்தியாவினால் வகுத்தளிக்கப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தமாகும்.
இதில் கைவைப்பதையோ அல்லது ஒழித்துக்கட்டுவதையோ எவ்வகையிலும்
அனுமதிக்கப்போவதில்லை என எமது கட்சியும் தலைவரும் வரிந்துகட்டிக்கொண்டு
நிற்கின்றோம். இதற்கு துணைபோதல் மூலம் இந்நாட்டு சிறுபான்மை இனங்களை
இரையாக்கும் படலத்திற்கு ஆரம்பம் செய்கின்ற வரலாற்றுத் துரோகத்தினை ஒரு
நாளும் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் செய்யமாட்டாது.
ஏனெனில் மறைந்த தலைவர் அஷ்ரப் சொன்னது போல்
சி.ல.மு. காங்கிரஸ் என்பது எமது மானத்தையும் உரிமைகளையும் காப்பதற்கான
எம்மிடமுள்ள ஒரேயொரு அங்கவஷ்திரமாகும். அதனைக் கொண்டு எமது மானத்தை
மறைப்பதா? அல்லது தலைப்பாகை கட்டுவதா? என்ற தேர்வில் ஸ்தாபகத் தலைவரின்
வழியொட்டி எமது மானத்தை மறைக்கும் பகுத்தறிவுடனான செயற்பாட்டினையே எமது
கட்சி செய்துவருகின்றது.
ஆனால் 2001ம் ஆண்டில் எம்மை விட்டும்
வெளியேறி சடவாத அபிவிருத்தி அரசியலுக்காக சமுதாயத்தை விற்றுப்பிழைக்கும்
அதாவுல்லா தன்னை முழுநிர்வாண கோலத்தில் ஆக்கி கிடைத்த அங்கவஸ்திரத்தினை
தலைப்பாகையாக மாற்றிக்கொண்டார். அவருக்கு சமூகமோ, அதுபற்றிய கரிசனையோ, அதன்
உரிமைகளோ பெரிய பொருட்டல்ல. இதனால் தான் கல்முனை கரையோர மாவட்டத்திற்கு
எதிரான நிலைப்பாடு, நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை குழப்பியடித்தமை, தீகவாபி
புனித பூமிக்;கொள்கைக்கு மறைமுகமான ஒத்துழைப்பு போன்ற சமுதாய
துரோகத்தனங்களை கடந்த காலங்களில் அவர் இழைத்திருக்கின்றார்.
ஆகவே அவர் தனது மௌத்திற்கு முன்பாவது தனது
தலைப்பாகையை கழற்றி தனது மானத்தை மறைத்துக்கொள்வார் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் சமுதாய மோசடிகளுக்குரிய அசைக்கமுடியாத கூலி
வெந்து தகிக்கும் கொடூர நரகமென்பதை இஸ்லாம் ஆணித்தரமான எடுத்துரைத்துள்ளது.
எனவே தான் சமுக மானத்தையும் உரிமைகளையும் தொடர்ந்தும் பாதுகாக்கும் ஒரு
‘பீஷபீல்’ வாழ்க்கையில் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஊடாக நாம் பயணித்துக்
கொண்டிருக்கின்றோம் என்று ஜனாப் பழீல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment