
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மத்திய அரசை கிழக்கு மாகாண சபை வலியுறுத்த வேண்டும். இல்லையேல் கிழக்கு வாழ் மூவின மக்களுக்கும் முன்னேற்றத்தைத் தரும் இத்திட்டத்தை கிழக்கு மாகாண சபை நேரடியாகக் கையாண்டு செயல்படுத்துவதற்கு அரசின் அனுமதியையாவது பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கிழக்கு மாகாணத்திலுள்ள புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் பிரதேச நலன் விரும்பிகள் என கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
இது குறித்து விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தற்போது நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராகிய தாங்கள் அரசாங்கத்தின் முழு அதிகாரம் பெற்றவராக கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராகப் பதவி வகிக்கின்றீர்கள். இம்மாகாணத்தில் அதிகமான முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவும் தங்களுக்குக் கிடைத்துள்ளது.
தங்களுக்கு கிடைத்துள்ள இந்த வரலாற்றுமிக்க அதிகாரத்தைக் கொண்டு இம்மாகாணத்தை சிறந்த அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான ஒரு பாரிய செயல் திட்டமாக மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டம் உங்கள் காலத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இம்மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின மக்களின் நெஞ்சிலும் சரித்திர நாயகனாக நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள். என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
மட்டக்களப்பு - பொத்துவில் ரயில் பாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்வரும் காரணங்கள் இப்பிரதேச மக்களுக்கு சாதகமாக உள்ளன என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு சுட்டிக் காட்டவும் விரும்புகின்றோம். எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் நாட்டுடன் வைத்திருக்கும் நல்லுறவு. மூலம் ரயில் பாதையை செயல்படுத்துவதற்கு ஈரான் நாட்டு அரசாங்கத்தினால் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணம் இன்று கல்வி, வியாபாரம், மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றில் முன்னேற்றம் கண்டிருப்பதுடன் இந்த முன்னேற்றத்தில் புகையிரத சேவை அவசியமானதாக உள்ளது. இப்பிரதேசத்தில் தென் கிழக்குப் பல்கலைக் கழகம், ஒலுவில் துறைமுகம், அறுகம்பை உல்லை, பாசிக்குடா என்பன போன்ற சுற்றுலா பயணிகளின் இடங்கள் அமைந்துள்ளமையும் அதிக எண்ணிக்கையான வெளிநட்டு உல்லாசப் பயணிகள் இப்பிரதேசங்களுக்கு உல்லாசத்திற்காக வருகை தருவதை இன்னும் அதிகரிக்க வைக்க இந்த மட்டக்களப்பு - பொத்துவில் ரயில் பாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஏற்படும்.
இம்மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்ததினால் கரையோரப் பிரதேசம் அழிந்து அப்பிரதேசத்தில் வாழ்ந்த குடியிருப்புக்கள் கடற்கரையிலிருந்து 65 மீற்றருக்கு அப்பால் தவிர்க்கப்பட்டிருப்பதும் இது கடற்கரையோரமாகவும் சில பிரதேசங்களில் ரயில் பாதை அமைப்பதற்கு வசதியாக அமைந்து காணப்படுகின்றது.
மேலும் சுனாமிக்குப் பின்னர் பொத்துவில், களியோடை, கல்லாறு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அதி நவீன பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளமை. இதற்கு சாதகமாக அமைந்துள்ளன. இவ்விடயங்களை முன்வைத்து தங்களை முதலமைச்சராகக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபை மட்டக்களப்பு - பொத்துவில் ரயில் பாதைத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அல்லது இத்திட்டத்தை கிழக்கு மாகாண சபை செயல் படுத்துவதற்கு ஏற்றவகையில் மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இவ்வாறு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதுக்கு விடுக்கப்பட்டுள்ள அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய இந்த ரயில் பாதைத் திட்டத்தை ஆர்.பிரேமதாச அரசு முன்னெடுக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசும் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. தற்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு தென் பிரதேசத்திலிருந்து வடக்குக்கு ரயில் பாதையைக் கொண்டு செல்வது போன்று மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை அமைக்கும் வேலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். என்பது இப்பிரதேச மூவின மக்களினதும் அவாவாக இருந்து கொண்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவினால் கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டமொன்றில் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
அவர் எமது நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டும் கூட அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி விட்டார். இருந்தும் இந்த ரயில் பாதைத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது காலத்திற்கு காலம் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இப்பிரதேச மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளதாகவும் இப்பிரதேச புத்தி ஜீவிகள் நலன் விரும்பிகள் கவலை கொண்டவர்களாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.
Post a Comment