நான் மரணிக்கும் வரைக்கும்
முஸ்லிம்களுக்கெதிராக இடம் பெறும் அநீதிகளுக்ககெதிரக குரல் கொடுத்துக்
கொண்டே இருப்பேன், எனது குரல் யாருக்கும் பயந்து ஓயப்போவதில்லை என கொழும்பு
மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளருமான
ஆஸாத்சாலி தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
நேர்காணலின் வரிவடிவம் பின்வருமாறு:
கேள்வி: நீங்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் சற்று அடக்கிப் பேசுவதாக தெரிவிக்கப்படுகின்றதே அது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:
ஒரு போதும் நான் அடங்கி விடமாட்டேன், இறைவனைத் தவிர யாருக்கும் நான்
பயப்படவில்லை. நான் மரணிக்கும் வரைக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும்
அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். எனது குரல்
யாருக்கும் பயந்து ஓயப்போவதில்லை
நான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட
பின்னர் கல்முனையில் பொதுபல சேனா அமைப்பு கூட்டம் ஒன்றை நடாத்த
திட்டமிட்டிருந்தது. உடனடியாக அதை எதிர்த்து நான் ஜனாதிபதிக்கு கடிதம்
எழுதினேன். அக் கூட்டத்தை நடாத்த விடாமல் தடுத்தேன். அதற்கான நடவடிக்கைகளை
எடுத்தேன்.
அதே போன்று இன்று ஜெயிலானி பள்ளிவாயலை
உடைப்பதற்கும் நமது ஞாபக சின்னங்களை அழிப்பதற்கும் அங்கு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஜெயிலானியில் நமது அடையாளம் அங்குலம் அங்குலமாக உடைக்கப்பட்டு இப்போது அங்குள்ள பள்ளிவாயலை உடைக்க முற்பட்டுள்ளனர்.
அதற்கு எதிராக நான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியதுடன் பாதுகாப்பு துறை சார்ந்த அனைவருக்கும் அது பற்றி எழுதியுள்ளேன்.
அந்த ஜெயிலானியினை தொல் பொருள் ஆராய்ச்சி
அதிகாரி சந்திராணி என்பவர் தான் உடைத்து வருகின்றார், அவருக்கெதிராக நான்
நடவடிக்கை எடுத்தேன். இதனால் அவர் என்னை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனால் என்னை பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நான் பயந்து அடங்கியிருந்தால் இவைகளை நான் செய்திருக்க மாட்டேன்.
கேள்வி: நீங்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டீர்கள், விடுதலை செய்யப்படுவதற்கு அடிப்படை காரணமென்ன?
பதில்: முதலாவதாக முஸ்லிம்களது துஆ பிராத்தனையும் என்னை நேசிக்கும் இன மத மொழி வேறு பாடற்ற மக்களின் பிராத்தனையுமாகும்.
அடுத்ததாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை
மாவட்ட முஸ்லிம்கள் நடாத்திய கடையடைப்பு ஹர்தால், இவைகளோடு உலமா சபை,
முஸ்லிம் கவுன்சில் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் அமெரிக்கா, கனடா,
முஸ்லிம் அறபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற மனிதநேய அமைப்புக்கள்
விடுத்த வேண்டுகோளும் அறிக்கைகளுமாகும்.
இதில் குறிப்பிடக் கூடிய விடயமென்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எனக்காக காத்தான்குடி மக்கள் போடயிருந்த ஹர்தாலை கடையடைப்பை தடுத்துள்ளார்.
மூடிய கடைகளை, வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் காரணமாக இருந்துள்ளார். அவர் பொதுபல சேனாவின் தம்பியாகும்.
ஏனென்றால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா
தம்புள்ளை பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அது தாக்கப்படவில்லை என்று
கூறியதையும், அந்த பள்ளிவாயலை வேறு இடத்திற்கு மாற்ற அவர் எடுத்த
நடவடிக்கையையும் இந்த நாட்டு முஸ்லிம்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள்.
பொதுபல சேனா
எவ்வாறு முஸ்லிம்களுடைய சொத்துக்களை அழிப்பதற்கும் அபகரிப்பதற்கும் காணமாக
இருக்கின்றார்களோ அதே நடவடிக்கையைத்தான் இன்று பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லாவும் செய்து வருகின்றார். இதனால்தான் நான் இவரை பொது பல சேனாவின்
தம்பி என குறிப்பிடுகின்றேன்.
டாக்டர் சாகீர் நாயிக் மாதிரி உடை அணியலாம், அவர் மாதரி நடந்து கொள்ளளலாம் ஆனால் அவரது கொள்கை வரவேண்டுமே.
கேள்வி: நீங்கள் விடுதலை செய்யப்படுவதற்கு ஏதாவது நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டதா?
பதில்:
எந்த நிபந்தனைகளையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று முறை நிபந்தனைகள்
அடங்கிய அறிக்கைகள் என்னிடம் கொண்டு வரப்பட்டன. அவைகளை நான் ஏற்றுக்
கொள்ளவில்லை.
பின்னர் நான் ஒரு சத்தியக்கடதாசி ஒன்றை
எனது சட்டத்தரணிகள் மூலமாக சம்ர்ப்பித்தேன். அதில் இன ஐக்கியத்தையும்
முஸ்லிம்கள் சம உரிமையடன் வாழ்வதையும் உறதிதிப்படுத்த வேண்டும் எனும்
விடயங்களே உள்ளடக்கப்பட்டிருந்தன.
நான் இந்தியா ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டி
தொடர்பில் திரிபு படுத்தப்பட்டதையும் அது திருத்தி பிரசுரிக்கப்பட்டதையும்
நான் அந்த சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டேன். இது தவிர வேறு எந்த
மறைமுகமான விடயங்களும் அதில் இல்லை.
கேள்வி: நீங்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படும் வரையும் உணவு உட்கொள்ளாமல் இருந்தீர்கள், ஏன் அவ்வாறு நடந்து கொண்டீர்கள்?
பதில்: எனது
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதும் அவர்கள் தரும் உணவில் எனக்கு
சந்தேகம் இருந்ததுமாகும். அத்தோடு நான் ஒரு குற்றமும் செய்யாதவன் என்னை ஏன்
கைது செய்ய வேண்டும். நான் கைது செய்யப்பட்டு இருந்த தினங்களில் நான்
அவர்களினால் தரப்பட்ட ஒரு கிளாஸ் தண்ணீர் கூட அருந்தவில்லை. அது இறைவன்
எனக்கு தந்த மன வலிமையும் தைரியமுமாகும்.
கேள்வி: நீங்கள்
கைது செய்யப்பட்டது முதல் விடுதலையாகும் வரைக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்
அரசியல் வாதிகள் உங்களுக்காக உங்களின் விடுதலைக்காக பேசினார்களா?
பதில்: அமைச்சர் றிசாத்
பதியுதீன் எனது வாழ்வில் மறக்க முடியாத மனிதர், அவர் ஒரு அமைச்சராக
இருந்தும் நான் கைது செய்யப்பட்டேன் என அறிந்து அவர் வெளிநாட்டில் இருந்து
இன்னுமொரு நாட்டுக்கு செல்லும் பயணத்தை நிறுத்தி விட்டு இலங்கை வந்து நேராக
எனது வீட்டுக்கு வந்து எனது மனைவி பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி விட்டு
சென்றிருந்தார். அதே போன்று என்னையும் பார்ப்பதற்கும் முயற்சித்தார் அவரை
நான் மறக்கமுடியாது.
அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் மக்களுடைய
கேள்விகளுக்கு பயப்பட்டு ஒரு அறிக்கையை விட்டார் அவர் போகும் இடமெல்லாம்
என்னைப்பற்றி அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
எனினும் சில முஸ்லிம் அரசியல் வாதிகள்
அறிக்கைகளை விட்டிருந்தனர் அதே போன்று தமிழ் அரசியல் பிரமுகர்கள் மற்றும்
சிங்கள அரசியல் பிரமுகர்களும் எனது விடுதலைக்காக அறிக்கைகளை விட்டதுடன்
முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
கேள்வி: இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீனை நன்றாக கூறுகின்றீர்கள், அதற்காக எதிர்காலத்தில் அவரது கட்சியுடன் இணைந்து அரசியல் செய்வீர்களா?
பதில்: இல்லை,
இல்லை. அவரை ஒரு சிறந்த மனிதனாக பார்க்கின்றேன். நட்பு மற்றும்
மனிதாபிமானம் இதைப்பற்றித்தான் இங்கு குறிப்பிட்டேன். அவருடன் சேர்ந்து
அரசியல் செய்ய மாட்டேன்.
கேள்வி: உங்கள் மகள் அமீனா சாலியை அரசியலில் இறக்கு வீர்களா?
பதில்:
நேரம் வந்தால் சமூகத்துக்காக அரசியலில் இறங்குவார், ஆனால் அவர் தற்போது
கல்வி கற்றுக் கொணடிருக்கின்றார். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார
நாயக்க மற்றும் ஹிரூனிகா அரசியலில் இறங்கப்போவதாக கதை அடிபடுகின்றது.
இவர்களுடன் எனது மகள் அமீனாவையும் பேசிக் கொள்கின்றனர்.
கேள்வி: நீங்கள்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரம் உங்கள் மகள் அமீனா
பௌத்த விகாரைக்கு உங்கள் விடுதலைக்காக மலர் தட்டு கொண்டு போனதாகவும் அது
இஸ்லாத்தில் இணைவைத்தல் என்ற சர்ச்சையும் ஏற்பட்டது இது பற்றி என்ன கூற
விரும்புகின்றீர்கள்?
பதில்:
எனது மகள் மலர் தட்டு கொண்டு வைத்து வணங்க வில்லை. எனது விடுதலைக்காக
சிங்கள பௌத்த சகோதரர்கள் ஏற்பாடு செய்த வைபவத்திற்கு எனது குடும்பத்தினரும்
அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு எனது மகளும் குடும்பத்தினரும்
சென்றிருந்தனர். அங்கு செல்லும் போது எனது மளிடத்தில் ஒரு மலர் தட்டை
கொடுத்தனர். அதை அவர் வாங்கி இன்னு மொரு சிங்கள சகோதரியிடத்தில் கொடுத்து
விட்டார். ஆனால் அதை கொண்டு போய் விகாரைக்குள் வைத்து வணங்கவில்லை.
ஷிர்க்கை செய்வதற்கு அவர் அங்கு செல்லவுவில்லை.
இதை ஒரு சிலர் பெரிதாகி தூக்கிப்
பிடித்துக் கொண்டு என்னில் பிழை காண்பதற்கு பார்த்தனர். அது தொடர்பான
தெளிவான அறிக்கை எனது குடும்பத்தினரால் வெளியிடப்பது.
கேள்வி: 13வது திருத்தத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: 13வது
திருத்தத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய போன்றவர்கள் அந்த மாகாண சபையில்
இருந்து கொண்டு சாப்பிடுகின்றார்களே. அவர்களும் சாப்பிட்டு அவர்களது
மனைவிமாரும் சாப்பிடுகின்றகின்றனரே, இந்த மாகாண சபை முறையை எதிர்க்கும்
இவர்கள் உடனடியாக அவர்களது மாகாண சபை பதவிகளை இராஜினாம செய்ய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தன
மற்றும் இந்திய முன்னாள் பிரதமந்திரி ராஜீவ்காந்தி ஆகியோருக்கிடையில்
ஏற்படுத்தப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்த 13வது திருத்தம்
ஏற்படுத்தப்பட்டது.
ஜெனிவா மனித உரிமை மாநாட்டில்
கூறப்பட்டவாறு கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்
படுத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
இவைகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஜாதிக
ஹெல உறுமய மற்றும் பொதுபல சேனா போன்றவர்களை களத்தில் இறக்கி இன்று அதை
எதிர்க்கின்றனர். சிறுபான்மை சமூகங்களுக்கிருக்கின்ற ஒரே ஒரு மாகாண சபை
அதிகாரத்தையும் இல்லாமல் செய்ய முனைவதே இந்த 13வது திருத்தத்தை அழிக்க
முற்படுவதாகும்.
கேள்வி: வடமாகாண சபை தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிடுமா? நீங்களும் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்:
வடமாகாண சபை தேர்தலில் நிச்சயமாக எமது கட்சி போட்டியிடும். நான் அங்கு
போட்டியிட்டு தெரிவு செய்யப்படால் அதை இன்னுமொருவருக்கு கொடுக்க முடியுமாக
இருந்தால்தான் நான் போட்டியிடுவேன் இல்லாவிட்டால் நான் நான்
போட்டியிடமாட்டேன்.
கேள்வி: ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டுச் சேர்வீர்களா?
பதில்:
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை அவரது கட்சிக்கு
அழைக்கின்றார். ஆனால் நான் எந்தவொரு கட்சியிலும் சென்று சங்கமிக்க
விரும்பவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம்கள்
விடயத்தில் தெளிவான கொள்கை இல்லை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும்
அநியாயத்தை நியாயப்படுத்தும் போக்கும் ஐக்கிய தேசியக் கட்சியிடம்
இல்லாமலில்லை.
இதனால் நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
செல்லமாட்டேன். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் உருவாக்கிய தேசிய ஐக்கிய
முன்னணியினை பலப்படுத்தி வருகின்றோம்.
மறைந்த தலைவர் அஷ்ரப் உயிருடன் இன்றிருந்திருந்தால் அவர் தேசிய ஐக்கிய முன்னணியினை வளரச்செய்திருப்பார்.
ஏதிர்க்கட்சிகள் சேர்ந்த ஒரு முன்னணி ஒன்று உள்ளதை அறிவீர்கள் அதில் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியும் ஒன்று.
கேள்வி: தேசிய ஐக்கிய முன்னணி மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீருடையது என கூறப்படுகின்றதே?
பதில்: தேசிய
ஐக்கிய முன்னணி தற்போது நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். தேசிய ஐக்கிய
முன்னணிக்கும் நசீர் ஹாபிசுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் முஸ்லிம்
காங்கிரசின் பணத்தினையும் சொத்துக்களையும் கொள்ளையடித்தவர். இவர்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தம்பி. இவர் சரத் பொன்சேகாவிடம் பணத்தினை
பெற்றுக் கொண்டு மயோன் முஸ்த்தபாவை இக்கட்டுக்குள் மாட்டியவர்.
இதனால் இன்று மயோன் முஸ்த்தபா நாட்டுக்கு
வரமுடியாமல் லன்டனில் இருக்கின்றார். ஆனால் சரத் பொண்சேகாவிடம் பணம் பெற்ற
ஹாபீஸ் நசீர் அகமட் மாகாண அமைச்சராக இருக்கின்றார்.
கேள்வி: முஸ்லிம்களுக்கு பிரச்சினை, சவால் எற்படும் போது அதை எவ்வாறு முஸ்லிம்கள் அணுக வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
பதில்: முஸ்லிம்களுக்கெதிரான அநியாயம் இடம் பெறும் போது முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியாக அவற்றை எதிர் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் ஒரு போதும் ஆயுதம் ஏந்த
முடியாது, ஆயுதம் ஏந்தவும் கூடாது. நமது அடுத்த சமூகம் ஆயுதம் ஏந்தி கடந்த
30 வருடங்கள் பட்ட துன்பத்தினையும் துயரத்தினையும நாம் பார்க்கின்றோம்.
தலைமைத்துவத்தனையும் இழந்துள்ளது. இவற்றினை நாம் படிப்பினையாக கொண்டு
முஸ்லிம்கள் ஆயுதம் தூக்குவதை நினைத்துக் கூட பார்க்க கூடாது.
கேள்வி: நீங்கள் வெளிநாட்டு சக்திகளிடம் பணத்தினை வாங்கிக் கொண்டு இவ்வாறெல்லாம் பேசுவதாக கூறப்படுகின்றதே அது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:
எனக்கு நீரிழிவு நோய் உண்டு, நான் கைது செய்யப்பட்ட நேரம் உண்ணாமல்
இருந்ததால் தற்போது ஒரு நாளைக்கு 2500 ரூபா பெறுமதியான இன்சுலின் ஊசி
மருந்து ஏற்ற வேண்டியுள்ளது. அதைக் கூட நான் பாவிக்காமல் இருக்கின்றேன்.
எந்தவொரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்காகவும் நான் செயற்படவில்லை என்பதை
மிகவும் தெளிவாக கூறவிரும்புகின்றேன்.
கேள்வி: காத்தான்குடி இன்போவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்
பதில்:
இது ஒரு சிறந்த ஊடகம், சாதி, இன, மத பேத மின்றி அனைவராலும்
பார்க்கப்படுகின்றது. அரசியல் பாகுபாடின்றி நடு நிலையாக இந்த ஊடகம்
செயற்படுகின்றது எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் மேலும்
வளர்ச்சியடைய பிராத்திக்கின்றேன்.
கேள்வி: இறுதியாக என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
பதில்: முஸ்லிம்
சமூகத்தை காட்டிக்கொடுத்துக் கொண்டு முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் உடைப்பதை
பார்த்துக் கொண்டு, முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தடையாக
இருக்கின்ற இந்த பொதுபல சேனாவை ஊக்குவிக்கின்ற அரசில் ஒட்டிக்கொண்டுள்ள
முஸ்லிம அரசியல்வாதிகளுக்கு முஸ்லிம்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அமைச்சர் ஹக்கீம், அதாவுல்லா போன்றோர் ரோசம், மானம், மரியாதை இருந்தால்
முஸ்லிம்களின் நன்மையை கருத்திற் கொண்டு இந்த அரசிலிருந்து வெளியேற
வேண்டும் என்றார்.

Post a Comment