சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான
இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி
தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது
அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.
கடந்த 2011 உலக கோப்பை பைனலுக்கு பின், இரு அணிகளும் முக்கிய தொடரில்
மோதுகின்றன. இந்திய அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, கோஹ்லி தவிர மற்றவர்கள்
புதுமுகங்களாக உள்ளனர்.
இருப்பினும், சூதாட்ட சர்ச்சை, பி.சி.சி.ஐ., ஏற்பட்ட குழப்பம் என
அனைத்தையும் மீறி, இந்திய அணி அசத்துகிறது. இரண்டு பயிற்சி மற்றும் லீக்
சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத
வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிநடை இன்றும் தொடரும் என நம்பப்படுகிறது. துவக்கத்தில்
ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தலாம். இத்தொடரில் அதிக ரன்கள் (264)
குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான், 2 சதம் அடித்துள்ளார்.
ரோகித் சர்மா, 2 அரைசதம் உட்பட 135 ரன்கள் எடுத்துள்ளார்.
தவிர, தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா என,
"பேட்டிங்' படை வலுவாக உள்ளது. பயிற்சியில் ஏற்கனவே இலங்கை அணியை
வீழ்த்தியுள்ள இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
ஜடேஜா நம்பிக்கை:
பவுலிங்கில் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருடன், இஷாந்த்
சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் இலங்கைக்கு சிக்கல் தரலாம். சுழற்பந்து வீச்சை
பொறுத்தவரையில் இதுவரை 9 விக்கெட் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜா, அஷ்வின்
ஆகியோர் ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கை தர வேண்டும்
"சீனியர்' பலம்:
இலங்கை அணியின் பேட்டிங்கில் "சீனியர்' வீரர்கள் சங்ககரா (205 ரன்கள், ஒரு
சதம்), ஜெயவர்தனா (130) இருவரும்முதுகெலும்பாக உள்ளனர். இந்தியாவுக்கு
எதிரான பயிற்சி போட்டியில் 333 ரன்கள் சேர்க்க உதவிய துவக்க வீரர்கள்
பெரேரா, தில்ஷன் நல்ல "பார்மில்' உள்ளனர். பின்வரிசையில் கைகொடுக்க கேப்டன்
மாத்யூஸ், சண்டிமால், திரிமான்னே உள்ளனர்.
மலிங்கா மிரட்டல்:
வேகப்பந்து வீச்சில் "யார்க்கர்' மலிங்கா (7 விக்.,) உள்ளது பெரும் பலம்.
தவிர, குலசேகரா, எரங்காவும் கைகொடுப்பர் எனத் தெரிகிறது. சுழலில் அனுபவ
வீரர்கள் ஹெராத், தில்ஷன் தொல்லை தரலாம். கடந்த 2011ல் மும்பையில் நடந்த
உலக கோப்பை பைனலில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. இதே போல இன்றும்
அசத்தி, மினி உலக கோப்பை பைனலுக்கு செல்லக் காத்திருக்கிறது. அதேநேரம், உலக
கோப்பை தோல்விக்கு பழி தீர்க்க இலங்கை காத்திருப்பதால், கடும் போட்டியை
எதிர்பார்க்கலாம்.
---
54
இலங்கைக்கு எதிரான சார்ஜா போட்டியில் (2000) இந்திய அணி, குறைந்தபட்சமாக 54
ரன்னுக்கு சுருண்டது. 1984ல் இலங்கை அணி 96 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி,
இந்திய அணிக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
---
75
இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில்
இந்திய அணி 75 ல் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இலங்கை அணி 52ல்
வென்றது. 11 போட்டிகளுக்கு முடிவில்லை. ஒரு போட்டி "டை' ஆனது.
* கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும், இந்திய அணி வெற்றி பெற்றது.
--
414
இரு அணிகள் மோதிய போட்டிகளில், இந்திய அணி அதிகபட்சமாக 414/7 ரன்கள்
(ராஜ்கோட், 2009) எடுத்தது. இதே போட்டியில இலங்கை அணி அதிகமாக 411/8 ரன்கள்
எடுத்தது.
--
மழை வந்தால் பைனலில் இந்தியா//?
இன்று போட்டி நடக்கும் கார்டிப்பில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை
வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால்,
"பி' பிரிவில் முதலிடம் பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி(6 புள்ளி)
பைனலுக்கு தகுதி பெறும். "ஏ' இரண்டாவது இடம் பெற்றதால் இலங்கை அணி(4
புள்ளி) வெளியேறும்.
---
ஆடுகளம் எப்படி
கார்டிப்பில் உள்ள கிளாமர்கன் மைதானத்தில், இன்றைய அரையிறுதி போட்டிக்காக
புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. தலைமை ஆடுகள
பராமரிப்பாளர் கெய்த் எக்ஸ்டன் கூறுகையில்,"" இங்கு 280 ரன்கள் வரை
சாதாரணமாக ஸ்கோர் செய்யலாம். இருப்பினும், 300 ரன்கள் எடுத்தால் தான்
பாதுகாப்பானது,'' என்றார்.
---
முதன் முறையாக..
.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் 2002-03 ல் நடந்த
பைனலில் முதன் முறையாக (செப்., 29) சந்தித்தன. மழையால் போட்டி ரத்தாக,
மறுநாள் மீண்டும் பைனல் நடத்தப்பட்டது. மறுபடியும் மழை வர, இரு அணிகளும்
கோப்பையை பகிர்ந்து கொண்டன.
* இதன் பின் இப்போது அரையிறுதியில் மோதுகின்றன.
--
மறக்க முடியுமா
கடந்த 2011ல் மும்பையில் உலக கோப்பை பைனல் நடந்தது. முதலில் விளையாடிய
இலங்கை அணிக்கு ஜெயவர்தனா சதம் அடித்து உதவ, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு
274 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர் (97)
கைகொடுத்தார். அடுத்து மிரட்டிய கேப்டன் தோனி (91*), குலசேகரா பந்தில் ஒரு
"சூப்பர்' சிக்சர் அடித்து கோப்பை வென்று தந்தார்.
---
"மிரட்டும்' மலிங்கா
இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,""பிரிமியர் கிரிக்கெட் போட்டிகளில்
அதிகம் பங்கேற்றுள்ளதால், மலிங்காவின் பந்துவீச்சு பற்றி நன்கு தெரியும்.
பந்தை "ரிவர்ஸ் ஸ்விங்' செய்வதில் வல்லவர். இவரை சமாளித்து விடலாம்.
ஆனாலும், எப்போதும் மிரட்டலான பவுலர் தான். ஜெயவர்தனா, சங்ககரா ஆகிய இருவர்
மட்டும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்கள் அல்ல. ஒட்டுமொத்த
இலங்கை அணியும் ஆபத்தானது. இதற்கேற்ப திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்,''
என்றார்.
---
மாத்யூஸ் நம்பிக்கை
இலங்கை கேப்டன் மாத்யூஸ் கூறுகையில், ""பலம் வாய்ந்த இந்திய அணியை
வீழ்த்துவது எளிதான காரியமல்ல. இன்றைய போட்டிக்கு உடல் மற்றும் மனதளவில்
தயாராக உள்ளோம். இன்று இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில், மிகப் பெரிய
சாதனையாக அமையும். எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் தகுதி எங்களுக்கு உள்ளது.
விளையாட்டில், "பதிலடி' என்று ஒன்றும் கிடையாது,'' என்றார்.

Post a Comment