Homeஅஸாத் சாலி விடுதலையில் நிபந்தனை இல்லை
அஸாத் சாலி விடுதலையில் நிபந்தனை இல்லை
குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்
கைதுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி
இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டார்.ஜனாதிபதி தனது அனுமதியுடன்
விதிக்கப்பட்ட 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்ததை அடுத்தே, அவர்
நிபந்தனைகளின்றி விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து தேசி
வைத்தியசாலையிலிருந்து உடனடியாக நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட
அஸாத் சாலி தற்போது அங்கு அறை எண் 7727இல் சிகிச்சைகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சானது
அஸாத் சாலியின் விடுதலை குறித்து தீர்மானித்திருந்ததுடன் நேற்றைய தினம்
காலை அவரது மகள் அமீனா அஸாத் சாலி உள்ளிட்டோரை பாதுகாப்பு அமைச்சுக்கு
அழைத்திருந்தது. இதனையடுத்து நேற்று காலை 10.30 மணியளவில் பாதுகாப்பு
அமைச்சுக்கு சென்ற அமீனா அஸாத் சாலி உள்ளிட்டவர்களிடம் அஸாத் சாலியின்
விடுதலையை உறுதி செய்த அதிகாரிகள், விடுதலை பத்திரத்தை கையளித்தனர்.
அத்துடன், தேசிய வைத்தியசாலைக்கு அஸாத் சாலியின் குடும்பத்தினருடன்
வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த
அஸாத் சாலியை தமது தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து விடுவித்தனர். இதனை
தொடர்ந்து தேசிய வைத்தியசாலையிலிருந்து பி.பகல் 1.30 மணியளவில் அஸாத் சாலி
உடனடியாக நவலோக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் நவலோக
வைத்தியசாலையில் சேர்க்கும் வரையில் பாதுகாப்பு தரப்பினர் உடனிருந்தனர்.
எவ்வாறாயினும் கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து உணவெதனையும் அஸாத் சாலி
உள்கொள்ளாதிருந்ததன் விளைவாக அவரது உடல்நிலை பலவீனமான நிலையிலேயே
காணப்பட்டது. கதைப்பதற்கு சற்று சிரமப்பட்ட அவருக்கு மருத்துவமனையில்
சேலைன் ஏற்றப்பட்டுள்ளதுடன் விசேட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுவருகின்றன.
கடந்த 2ஆம் திகதி கொலன்னாவை, சாலமுல்லையில் உள்ள அஸாத் சாலியின் மகளின்
இல்லத்தில் தங்கியிருந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்
கைதுசெய்யப்பட்ட அஸாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 120ஆவது
சரத் மற்றும் குற்றவியல் தண்டனை கோவைச் சட்டத்தின் 2 (ஊ) பிரிவின் கீழும்
18 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்தது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டது முதல் அஸாத் சாலி உண்ணாவிரதம் இருந்து
வந்ததுடன் சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் பலவும்
அவரது கைதை கண்டித்திருந்தன. இந்நிலையிலேயே அஸாத் சாலி கைதுசெய்யப்பட்டு
எட்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த
குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவு 90
நாள் தடுப்புக்காவலை நீக்கி அவரை விடுதலை செய்தது. அஸாத் சாலி நேற்றைய
தினம் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நவலோக தனியார் வைத்தியசாலைக்கு
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி
கருணாநாயக்க, மனோ கணேசன், ஸ்ரீதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்
சுகம் விசாரிக்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment