இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் நவலோக்கா வைத்தியசாலையிலிருந்து ஆஸாத் வழங்கிய நேர்காணலை இங்கு அப்படியே தருகிறோம்.
உங்கள் உடல் நலம் எப்படியுள்ளது?
எனது உடல் நலம் தற்போது சீரடைந்து வருகிறது. சில நாட்கள் உண்ணாமலும்,
குடிக்காமலும் இருந்தமையால் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக
விடுபடவில்லை. இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் விடு திரும்புவேன்.
வீடு சென்ற பின்னர் ஊடகவியலாளர்களை அழைத்து பேசவுள்ளேன்.
உங்களின் கைதுக்கு உண்மையிலேயே என்ன காரணம்..?
இந்தியாவின் பேப்பர் ஒன்றுக்கு நான் கூறிய கருத்துக்களே காரணமென்றுத்தான்
கைது செய்தார்கள். அவர்களுக்கு வேறு காரணங்களும் இருந்திருக்கலாம்..!
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையங்கள் நீங்கள் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியிட்டிருந்ததே?
உண்மையில் விரவன்ச ஒரு சொறியன். (நான் சொல்வதை நீங்கள் அப்படியே
எழுதுங்கள்) இவனிடம் முன்னர் ஒரு சோடி செருப்பு கூட இருந்ததில்லை. சுஜீவ
சேனாதீர எம்.பி.கூட ஒருமுறை இதனை பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். தற்போது
விமல் வீரவன்ச பணக்காரனாகி விட்டார். ஆகவே இவருக்கு ஆதரவான இணையங்களின்
கருத்துக்குறித்து நான் கவலைப்படவில்லை. நான் ஜனாதிபதியிடம் மன்னிப்பு
கேட்கவேயில்லை. அதுபற்றி எழுதிய சத்திய கடதாசி உள்ளது. அந்த சத்திய
சத்தியக் கடதாசி பிரதியை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்க வழிசெய்வேன்.
உங்கள் மகளும், உங்கள் மனைவியும் பௌத்த
விகாரைக்கு மலர் தட்டு ஏந்திச் சென்றமை, அதுகுறித்து ஆமினா சார்பில் ஜப்னா
முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிய கட்டுரை, மற்றும் தற்போது ஒருவர் அந்த கடிதத்தின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்களே..?
ஆமீனாவின் சார்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு (பௌத்த விகாரைக்கு
சென்றமை) தொடர்பில் எழுதப்பட்ட கட்டுரை உண்மையே. அதனை நான் உறுதி
செய்கிறேன்.
மேலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஒருவர் கண்டி - தலதா மாளிகைக்கு
சென்றார். அப்போது அவரிடமும் மலர் தட்டு கொடுக்கப்பட்டது. அதை அவர்
அருகிலிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டார்.
நானும் பல பௌத்த நிகழ்வுகளுக்கு செல்கிறேன். ஆனால் வழிபாட்டிலோ அல்லது
இறைவனுக்கு இணைவைப்பு செயற்பாட்டிலோ ஈடுபடுவதில்லை. எனது கைது தொடர்பில்
பௌத்த விகாரையில் சிங்களவர்கள் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தார்கள். அதில்
எனது மனைவி, மகள் கலந்துகொண்டார்கள். அவர்களின் கைகளிலும் ஒரு மலர்தட்டு
கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் அருகிலிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்.
இதன்மூலம் அவர்களிடம் ஈமான் இல்லை என்பது அர்த்தமாகிவிடாது. அல்லாஹ் எமது
எண்ணங்களையே நோக்குகிறான்.
அந்த விவகாரத்தை சிலர் தமது இராபங்களுக்காக பயன்படுத்தினார்கள். இப்போது
ஒருவர், ஆமினா ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிய கடிதத்தை
சந்தேகப்படுகிறார். அந்தக் கடிதம் உண்மையானது என்பதை நான் எல்லா
தரப்பினருக்கும் தெரியப்படுத்துகிறேன்.
உங்கள் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?
நான் கைது செய்யப்பட்ட பினனர் எனக்காக யாரும் வாய் திறக்க மாட்டார்கள்
என்றுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமும், மற்றும்
சிலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும்
எனக்கு ஆதரவாக செயற்பட்டது. அவர்கள் எனக்காக துஆ செய்தார்கள், நோன்பு
பிடித்தார்கள், ஹர்த்தால் செய்தார்கள். மட்டக்களப்பு உள்ளிட்ட சில
பிரதேசங்களில் முஸ்லிம் ஹர்த்தால் கடைபிடிக்க ஆயத்தமாக இருந்தபோதும்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அதற்கு தடை ஏற்படுத்தினார்.
அத்துடன் வெளிநாட்டு தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டனவும் எனது
கைதுக்கு எதிராக குரல் எழுப்பின. வேறு வழயின்றி அரசாங்கம் என்னை விடுதலை
செய்தது.
உங்களின் கைது மற்றும் விடுதலை தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடு எவ்வாறாக அமைந்தது?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எனது கைது தொடர்பில் பேசினார்.
அதற்காக அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். றிசாத் பதியுதீன் பேசினார். பிரதேச
முஸ்லிம் கட்சிப் பிரதிநிதிகள் அறிக்கைகளை விட்டனர். சிங்கள, தமிழ்
அரசியல்வாதிகளும் பேசினார்கள். பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கப்பட்டது.
இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் எனது கைதுக்காக குரல்
கொடுக்காவிட்டால் அல்லது நான் விடுதலை செய்யப்பட்டிருக்காவிடின் முஸ்லிம்
அரசியல்வாதிகள் முஸ்லிம் பிரதேசங்களில் அரசியல் செய்வது
கஷ்டமாயிருந்திருக்கும்.
முஸ்லிம் சமூகத்திற்கான உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்குமா?
ஆம் நிச்சயம் ஒலிக்கும். நான் ஒருபோதும் ஓயமாட்டேன். என்னை கட்டுப்படுத்த முடியாது. மிகவரைவில் எனது குரல் ஒலிக்கும். அனைத்து
சமூகங்களுக்காகவும் எனது குரல் ஓங்கி வெளிப்படும். இதனால்தான் தேசிய
ஐக்கியத்தை தோற்றுவிக்க முடியும். குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளின்
நலனுக்காக செயற்படுவேன்.
உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது?
எனது வழமையான செயற்பாடுகள், உத்வேகத்துடன் தொடரும். முஸ்லிம்களுக்கு எதிரான
அநியாயங்களை அம்பலப்படுத்துவேன். அரசாங்கத்தின் தவறுகளை
சுட்டிக்காட்டுவேன். இனவாதத்திற்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பேன்.
முஸ்லிம்களும் இந்நாட்டில் வாழப் பிறந்தவர்கள்தான். அவர்களின் உரிமை
விவகாரங்களின் கவனம் செலுத்துவேன்.
Post a Comment