பள்ளிப்படிப்பை பலவிதமான கஷ்டங்களையும்,
இன்னல்களையும் தாங்கிபடித்து முடித்து விட்டு தனது எதிர்கால கணவுகளை
நனவாக்க எண்ணி ஒவ்வொரு மாணவனும் காலடி எடுத்து வைக்கும் இடம் தான் பல்கலைக்
கழகங்கள். எதிர்கால வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை அடைய வேண்டும்,கவுரவமான
வாழ்வு வாழ வேண்டும், நாட்டின் சிறந்த குடிமகனாகத் திகழவேண்டும் என்பதற்காக
பல கோடிகளை செலவு செய்து ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் தங்கள் நாட்டு
மாணவர்களின் மேற்படிப்பிற்காக பல்கலைக் கழகங்களை நிறுவுகின்றன.
பள்ளிப் படிப்பில் காலடி தடம் பதிக்கும்
மாணவர்களில் 10 வீதத்திற்கும் குறைவானர்கள் தாம் பல்கலைக்கழக பட்டப்
படிப்பிற்கு தகுதி பெருகிறார்கள். அந்த தகுதியை அடைந்து கொள்வதற்கு தனது
பாடசாலைக் காலத்தை பல வழிகளிலும் சிறப்பானதாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இப்படி தனது வாழ்நாளின் மிக முக்கிய
இளமைப் பருவத்தை கல்விக்காக செலவு செய்துவிட்டு அதன் பிரதிபலனாக பல்கலைக்
கழக நுழைவினைப்பெற்று வரும் மாணவர்கள், அங்கு பல தரப்பட்ட மொழி, இன, குண,
நிறவேற்றுமைகளையுடைய மாணவர்களை சந்திக்கிறார்கள். பல்கலைக்கழக படிப்பிற்காக
உள்நுழையக் கூடிய மாணவர்கள் பலர் பல்கலைக் கழகத்தின் மூத்த மாணவர்களின்
பகிடிவதை (Ragging) என்ற மூர்க்க குணத்தினை சந்திக்க நேரிடுகிறது.
கல்லூரிப் படிப்பில் சிறந்து விளங்கி
நாட்டின் எதிர்கால நலன்களை சிறப்பாக முன்னெடுக்க வேண்டிய பொருப்பு
சாட்டப்படும் மாணவ சமுதாயத்திற்குள் தோன்றியுள்ள இந்த பகிடிவதை (Ragging)
கலாசாரத்தை ஒரு நவ நாகரீக புற்று நோய் என்று வர்ணிப்பது சாலச்சிறந்தது.
ஏன் என்றால் கல்வியில் முன்னேற்றம்
கண்டு சிறந்த கல்விமானாக வெளிவர வேண்டிய எத்தனையோ மாணவர்கள் இந்த ரேகிங்க்
கொடுமையினால் கல்விப் படிப்பையே இடை நிறுத்தி விட்டு கூலித் தொழிலாளியாக
அன்றாக வாழ்வுக்கு அல்லல்படும் நிலையை இன்று பார்க்கக் கிடைக்கிறது.
புதிதாக கழகம் நுழையும் மாணவர்கள் மூத்த மாணவர்களுடன் சிறப்பானமுறையில் பழக
வேண்டும், புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்றநோக்கத்தில் தாம் இந்த
பகிடிவதையில் (Ragging) ஈடுபடுவதாக இதனை ஆதரிக்கும் அறிவாளிகள் (?)
வியாக்கியானம் தருகிறார்கள்.
உண்மையில் இதுதான் அவர்களின் எண்ணம்
என்றால் புதிய மாணவர்களை நல்ல முறையில் உபசரித்து, கவுரவப்படுத்தி,
அன்பாகவும், பண்பாகவும், பாசமாகவும் பழக வேண்டும். அப்படி யாரும் நடந்து
கொள்வதில்லை. உடலியல் மற்றும் உளவியல் ரீதியில் அவர்களைக்
கொடுமைப்படுத்தி,சித்திரவதை செய்து, பாலியல் துன்புறுத்தல்களுக்கும்
உட்படுத்துகிறார்கள் இதற்குப் பேர்தான் புரிந்துணர்வா? ஆரம்பத்தில்
பல்கலைக் கழகங்களில் மாத்திரம் தொற்றிக் கொண்டிருந்த இந்தநோய் தற்போது
பாடசாலைகள், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்,அரச அலுவலகங்கள்,
அரபிக் கல்லூரிகள், பெண்கள் கல்லூரிகள் என்றுஎல்லாத் துறைகளிலும் வேர்
விட்டு வளர்ந்துவிட்டது.
ரேகிங்க் (Ragging) தோன்றுவதற்காக காரணங்கள்
ரேகிங்க் என்ற இந்த மாணவர் புற்று நோய்
தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் மிக முக்கியமான சில
காரணங்களை மட்டும் நாம் அலசுவோம்.
1.பழிக்குப்பழி.
புதிதாக பல்கலைக் கழகம் நுழையும்
மாணவர்களை ரேகிங் என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதில் முன்னுரிமை
பெற்றவர்கள் இரண்டாம் வருட மாணவர்கள் தாம். இது தவிர 3ம் 4ம் வருட
மாணவர்களின் ஒத்துழைப்பும் இவர்களுக்கு தவறாமல் கிடைக்கிறது.
தான் பல்கலைக் கழகம் நுழையும் போது
தன்னை கொடுமைப் படுத்தினார்கள் ரேகிங் என்ற பெயரால் வதை செய்தார்கள்
என்பதற்காக தனக்குப் பின் அடுத்த வருடம் படிக்க வருபவர்களிடம் தங்கள்
கைவரிசையை இவர்கள் காட்டுகிறார்கள்.
தான் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக பழி
வாங்குவதாக இருந்தால் யார் பாதிப்பை உண்டாக்கினானோ அவனைத் தான் பழிவாங்க
வேண்டும் ஆனால் பகிடிவதை என்ற பெயரில் யாரென்ரே தெரியாத, எந்தவொரு தப்பும்
செய்யாத அப்போதுதான் கழகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவனை இவர்கள்
துன்புறுத்துகிறார்கள்.
அடுத்த வருடம் இவன் அடுத்து புதிதாக
நுழைபவனை துன்புறுத்துவான் இது இப்படியே காலா காலத்திற்கு தொடர்ந்து கொண்டே
போகும், போய்க் கொண்டு தான் இருக்கிறது.
ஆக எவனோ செய்யும் குற்றத்திற்கு எவனோ ஒருவன் பாதிக்கப் படுகிறான் என்பது முறையா?
இது எந்த விதத்தில் நியாயம்?
கல்லூரி நிர்வாகத்தின் (Administrative Bodies) கண்காணிப்பின்மை.
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், அரபிக்
கல்லூரிகள், பெண்கள் பாடசாலைகள், என எல்லாத் துறைகளிலும் இந்த பகிடிவதை
பாய் விரித்துப் படுத்திருப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உள்ளது.
அதுதான் கல்லூரிகளின் நிர்வாகத்தில் கண்காணிப்பில் உள்ள குறைபாடுகள்.
கல்லூரியை நடத்த ஆசை படுபவர்கள்,
அதிபர்கள், முதல்வர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள ஆசைப்படுபவர்கள் இது
போன்ற மாணவ, மன நோயாளிகளின் ரேகிங் நோயை நீக்குவதற்கு எந்த விதத்திலும்
முயலாமல் இருப்பது கவலைக்குறியதே!
கல்லூரி தொடர்பான சரியான சட்ட திட்டங்களை தொகுக்காமை
அப்படித் தொகுத்தாலும் ஏட்டுச் சுறக்காய் போல் எழுத்தில் மாத்திரம் வைத்துக் கொண்டு அதனை நடை முறைப்படுத்தாமை.
தங்களுக்கு வேண்டியவர்களுக்காக
கல்லூரியின் சட்ட திட்டங்களை திசை திருப்பிக் கொள்வது போன்ற
செயல்பாடுகளினால் தான் இந்த ரேகிங் என்ற கல்லூரிப் புற்று நோய்க்கு இன்னும்
சரியாக முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.
2.சட்டத்தின் நெகிழ்வுத் தன்மை.
பகிடிவதை என்ற இந்த உடல், உள வதை
ஏற்படுவதற்கான இன்னுமொரு முக்கியமான காரணம் என்னவென்றால் நமது நாடுகளின்
சட்டங்களின் நெகிழ்வுத் தன்மை அல்லது கையாலாகாத் தனம் என்று கூட சொல்லலாம்.
சாதாரணமாக ஒரு பொது மகன் இன்னொருவனைத்
தாக்கினாலே அதற்கு பெரிய பெரிய சட்டங்களை உருவாக்கியுள்ள இன்றைய சட்டத்
துறை எந்தப் பிரச்சினைக்கு முக்கியமான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமோ
அந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.
ரேகிங் (Ragging) என்ற பெயரில் செய்யப்படும் இந்த கொடூரங்களுக்கு எந்த நாட்டிலும் சரியான அல்லது தகுந்த தண்டனைகள் சட்டத்தில் இல்லை.
சட்டம் ஒரு இருட்டறை என்ற வாசகத்திற்கு ஒப்பாகத்தான் பல நாட்டின் சட்டங்கள் ஓட்டை உடைசல்களுடன் காணப்படுகின்றன.
ரேகிங் தொடர்பான குற்றங்களை சரியாக
கண்காணிப்பதற்கும் அதற்கு சரியான தண்டனைகளை கொண்டு வருவதற்கும், காவல்
துறையினருக்கோ அல்லது சட்ட அமலாக்கள் பிரிவு அதிகார சபைகளுக்கோ போதுமான
அளவு இடமளிக்கப்படாமல் இருப்பதும் சட்டத்தின் ஓட்டைகளில் ஒன்றுதான்.
வரையறுக்கப்பட்ட சரியான சட்டதிட்டங்கள்
உருவாக்கம் செய்யப்படாமையினால் தான் இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்
இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் அல்லது கண்டுபிடிக்கப் பட்டாலும் தண்டனை
அனுபவிக்காமல் இருக்கிறார்கள்.
3.விரிவுரையாளர்களின் கையாளாகத் தனம்
பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில்
பாடம் நடத்தும் விரிவுரையாளர்களும் இந்த பகிடிவதை என்ற மாபாதக
குற்றத்திற்கு காரணமாக அமைகிறார்கள் என்றால் அது மிகையில்லை.
தன் கண் முன்னால் தனது கல்லூரியின்
மாணவன் அல்லது மாணவி பாதிக்கப்படும் போதும் கூட அதனைக் கண்டு கொள்ளாத பல
விரிவுரையாளர்களை நாம் அறியமுடிகிறது. (ஒரு சிலரைத் தவிர)
பல்கலைக் கழக வளாகத்தில் எந்தத் தவறு
நடந்தாலும் கண்டும் காணாதது போல் எத்தனையோ விரிவுரையாளர்கள் சென்று
விடுகிறார்கள். காரணம் அது தனக்கு தேவையற்ற வேலையாம். இதுதான் உயரிய
நற்பண்பா? இப்படிப்பட்டவர்கள் எல்லாம பேராசிரியர்களாக இருந்தால் கல்லூரிகள்
பல்கலைக் கழகங்கள் நல்ல பெயரை பெற்றுக் கொள்ள முடியுமா?
சில கல்லூரிகளில் விரிவுரையாளர்களே இந்த
கொடுமைக்கு உத்வேகம் கொடுக்கிறார்கள், இது தொடர்பான தூண்டுதல்களை
மேற்கொள்கிறார்கள் இனி எப்படி மாணவ சமுதாயம் வெற்றி பெற முடியும்?
எவன் எப்படிக் கெட்டுப் போனாலும் பிரச்சினை இல்லை தனது வேலையும், வேலைக்கேற்ற சம்பளமும் சரியாக முறையான நேரத்தில் கிடைக்க வேண்டும்.
விரிவுரையாளர்களே ! பேராசிரியர்களே ! சுயநலம் எக்காலத்திலும் பொது நலத்திற்கு வழிவகுக்காது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர் அமைப்புக்களின் (Students Councils) விட்டுக் கொடுப்பு
ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் மாணவர்
அமைப்பு அல்லது மாணவர் பேரவை என்ற ஒன்று இருக்கும். மாணவர்கள் தொடர்பான
அனைத்துப் பிரச்சினைகளை மேல் மட்டத்திற்கு கொண்டு செல்பவர்கள்
இவர்களாகத்தான் இருப்பார்கள் சாப்பாடு சரியில்லை என்றால் போராட்டம்
நடத்துவார்கள்.வகுப்பில் போதிய வசதியில்லை என்றால் தர்னா அறிவிப்பார்கள்.
இப்படி எதற்கெல்லாமோ போராட்டங்கள்,
ஆர்ப்பாட்டங்கள், தர்னாக்கள் என்று அறிவிப்பவர்கள் தமது சகோதரன் ரேகிங்
என்ற பெயரால் கொடுமைப்படுத்தப் படும் போது கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுகிறார்கள். (ஒரு சில கல்லூரி மாணவர் அமைப்புகள் மாத்திரம்
ஒரளவுக்கு சரியாக இருக்கிறார்கள்)
தனது கல்லூரியைச் சேர்ந்தவன் சக
மாணவர்களினால் தாக்கப்படுகிறான், துன்புறுத்தப்படுகிறான், உயிர் இழப்பைக்
கூட சில சந்தர்பங்களில் சந்திக்கிறான் இப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் இந்த
அமைப்புகள் எப்போதாவது கண்டுகொள்கிறதா என்றால் இல்லை.
தேவைக்கு இல்லாத் மாணவர் அமைப்புகள் எதற்காக? இவர்களினால் என்ன நன்மை கல்லூரிக்கு ஏற்பட்டுவிடப் போகிறது?
பகிடிவதையின் வகைகளும், பாதிப்புக்களும்.
உயிர் பாதிப்புக்களை உண்டாக்கி, படிப்பை
இடை நிறுத்தம் செய்து, உடல் ஊனம் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகி உயிர்
பிழைத்தால் போதும் என்று நினைத்து ஓடும் அளவுக்கு அதிக பாதிப்புக்களை இந்த
பகிடிவதைப் கொடுமை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
எவ்வளவு துன்பங்கள், உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும் இந்த ரேகிங் கொடுமை நின்றபாடில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள்,
ஆசிரியர் பயிற்சிப் பாசரை, போலிஸ், இராணுவ பயிற்சி மையம் என்று எல்லாத்
துறைகளிலும் பெரும்பாலும் மூன்று வகையிலான பகிடிவதை (Ragging) கொடுமைகள்
நிகழ்த்தப்படுகின்றன.
உடலியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)
உளவியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)
பாலியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)
1992ல் டாக்டர் பண்டார (இலங்கை) என்பவர் பகிடிவதை தொடர்பாக செய்த ஆராய்ச்சியில் மேற்கண்ட பாதிப்புகள் நிகழ்வதாக கண்டறிந்துள்ளார்.
அவருடைய ஆராய்ச்சியில் மேலும் தெரியவருவதாவது,
தான் ஆய்வுக்குட்படுத்திய மாணவர்களில் 60 சதவீதமானவர்கள் உளவியில் ரீதியிலான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
30 சதவீதமானவர்கள் உடல் ரீதியிலான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். கல்வியல் 13 சதவீதமானவர்கள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இது டாக்டர் பண்டார (இலங்கை) அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வரும் உண்மையாகும்.
Post a Comment