தூயநீர் கேட்டுப் போராடிய வெலிவேரியா மக்களின் நிலைதான் எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஏற்படும் என்று திருகோணமலை நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சி.நந்தகுமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, திருகோணமலை மாவட்டத்தில் கும்புறுபிட்டியில் பிரபலமிக்க உப்பு உற்பத்தி நிறுவனத்துக்காக 1803 ஹெக்டேயர் காணி வழங்கப்பட்டமை, மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் விவசாயக் காணிகளும், குளங்களும் உள்ளடக்கப்பட்ட பொருளாதார வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் நிறுவப்படும் பல்தேசியக் கம்பனிகளின் தொழிற்சாலைகளில் இருந்து எதிர்காலத்தில் வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகளால் தூய நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் அரச காணிகளும் கடற்கரையோரப் பிரதேசங்களும் பல்வேறு வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளால் இயற்கை நீர் நிலைகள் அழிவடையும் அபாயமும் கடலரிப்பைத் தடுப்பதற்கான இயற்கையான பாதுகாப்புச் சூழலும் அகற்றப்படும் நிலை குறித்து அரசாங்கமும் சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அலட்டிக் கொள்ளாமல் மௌனம் சாதித்து வருகின்றன.
எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்ட மக்களும் தூயநீர் கேட்டு வெலிவேரிய மக்களைப் போல வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.
Post a Comment