எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டி, மாத்தளை, குருநாகல், புத்தளம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தனது மரச் சின்னத்தில் போட்டியிடுவதோடு,
நுவரெலிய மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் அக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது அங்கு வருகை தந்திருந்தார்.
இன ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கண்டி மாவட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் மூவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
ஸ்ரீரங்கா எம்.பி. தலைமையிலான பிரஜைகள் முன்னணியும் கண்டி, மாத்தளை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸில் தனது வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கண்டி மாவட்டத்தில் கலாநிதி உவைஸ், மாத்தளை மாவட்டத்தில் மேஜர் ஜெனரல் சஹீர், குருநாகல் மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, புத்தளம் மாவட்டத்தில் ஜவ்பர் மரிக்கார், வவுனியா மாவட்டத்தில் வெண்கலச் செட்டிக்குல பிரதேச சபை உறுப்பினர் மாஹிர், மன்னார் மாவட்டத்தில் தொழில் அதிபர் றயீஸ், முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் அதிபர் யூ.ரி.எம்.அன்வர் ஆகியோர் வேட்பாளர் பட்டியல்களில் முதன்மை வகிக்கின்றனர்.
இவற்றை கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.
அத்துடன், புத்தளம் செயலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்ற பின்னர் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தேர்தல் முன்னெடுப்புகள் பற்றி கலந்துரையாடுவதற்காக எச்.எஸ்.இஸ்மாயில் அரங்கில் ஒன்று கூடியதாக வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எச்.எம். நியாஸ் கூறினார்.


Post a Comment