Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

பொது பல சேனாவை கல்முனைக்குள் ஊடுருவ வைக்க தமிழ்க்குழு ஒன்றே முயற்சி செய்கின்றது – கல்முனை மேயர் மனம் திறக்கிறார்

Tuesday, June 110 comments

உங்களின் அரசியல் பிரவேசம் பற்றி சிறிது கூறமுடியுமா?
 
மிகவும் குறுகிய கால எல்லைக்குள் (45 நாட்களுக்குள்) அரசியலில் பிரவேசித்த நான் அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடனேயே நான் அரசியலில் பிரவேசித்தேன்.

அரசியலில் முப்பது முப்பத்தைந்து வருட காலம் பழுத்த அனுபவம் மிக்கவர்கள் மாநகர சபை தேர்தலில் என்னுடன் போட்டியிட்ட போதும் மக்கள் எனது திறமையில் நம்பிக்கை வைத்து எனக்கு அமோக ஆதரவளித்து என்னை .வெற்றி பெற வைத்தனர்.

கல்முனை மாநகர சபை மேயராக 2011.10.18 அன்று ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து இந்த மாநகர சபையை பொறுப்பேற்றேன்.

நான் இந்த பதவியை ஏற்று தற்பொழுது ஒரு வருடமும் ஏழு மாதங்களும் ஆகின்றது.

கல்முனை மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகள் பற்றி சிறிது விளக்க முடியுமா?

கல்முனை மாநகர சபையை நான் பொறுப்பேற்கும் பொழுது அது மிகவும் மந்த நிலையில் காணப்பட்டது. அதன் நிர்வாகத்தில் எல்லோரும் மேயராகவும், எல்லோரும் ஆணையாளராகவும், எல்லோரும் பொறியியலாளராகவும் காணப்பட்டதுடன், அவரவர் நினைத்ததை செய்துவந்துள்ளதுடன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பு காணப்படவில்லை. அத்துடன் மாநகர முதல்வருக்கோ, ஆணையாளருக்கோ ஊழியர்கள் கட்டுப்பட்டு நடக்காத நிலைமை காணப்பட்டது. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய மாநகர சபை மக்களை அலட்சியம் செய்யும் ஒரு சபையாக காணப்பட்டது.

அத்துடன் கடந்த கால நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்களும் காணப்பட்டதாக மக்கள் பேசிக்கொண்டனர்.

எனவே மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு முதல் மாநகர சபை நிர்வாகத்தை சீர் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. நான் பல்வேறு நிறுவனங்களை சீரான முறையில் நிர்வகித்தவன் என்ற வகையில், எனது முதல் இலக்க்காக மாநகர சபை நிர்வாக கட்டமைப்பை சீர் செய்ய எண்ணினேன்.
மாநகர சபை ஆணையாளரும் நான் பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் பதவி ஏற்றிருந்தார்.

அதனடிப்படியில் மாநகர சபை பகுதித் தலைவர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி, நான்கு முதல் ஐந்து மாதங்களில் நிர்வாக கட்டமைப்பை முதலில் சீர் செய்தேன்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை சகல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அவர்களுடைய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய சேவைகள் பற்றி தெளிவுபடுத்தி வருகின்றேன்.

எனது காலப்பகுதியில் சகல நிர்வாக உறுப்பினர்களும் மக்களுக்கு சேவை செய்ய பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இதில் கருத்து முரண்பாடு உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு செல்லலாம் என்றும கூறியுள்ளேன்.

இன்று இந்த மாநகர சபை மக்களால் பேசப்படும் ஒரு சபையாக மாற்றப்பட்டுள்ளது. மக்களுடைய வரிப்பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றது என்ற வெளிப்படைத் தன்மை பேணப்படுகின்றது.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தேங்கிக் கிடந்த 8 கோடி ரூபா சோலை வரிப்பணத்தில் கூடுதலான அளவு பெறக்கொடியதாக இந்த சபை மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்களிடம் பெறப்பட்ட இந்த வரிப்பணம் எவ்வாறு பல்வேறு ஊர்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் மயப்படுத்தியுள்ளோம்.
மாநகர சபையூடாக மக்கள் பெறக்கூடிய சேவைகள் பற்றிய தெளிவு, அதற்கான உத்தியோகத்தவர்கள் விபரம், மற்றும் குறித்த சேவைக்கு செலவாகும் பணம் என்பன பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகர சபையின் சேவைகளை மக்கள் விரைவாகவும், மேலதிக செலவு இன்றியும் பெற முடியும். அத்துடன் ஊழல்களும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபை என்பது குப்பை கூளங்கள் அகற்றுவது மற்றும் மின் குமிழ்கள் பொருத்துவது என்பனவற்றுக்கு மட்டுமே பொறுப்பான அமைப்பு என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் காணப்பட்டது. எனினும் இவற்றுக்கு அப்பாலும் எம்மால் இயங்க முடியும். உதாரணமாக எமது மக்களின் கல்வி வளர்ச்சியல் எம்மால் சிறந்த பங்களிப்பு வழங்க முடியும்.

எமது மாநகர சபையில் ஒரு கல்விக்குழு உருவாக்கப்பட்டு பல வித கல்வி முன்னேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
மாநகர சபை முதல்வரின் அதிகாரங்கள் பற்றிய தெளிவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உங்களின் சேவைகளில் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஒன்றிரண்டு சேவைகள் பற்றி கூற முடியுமா?

நான் மாநகர சபையை பொறுப்பேற்க முன்னர் மக்கள் குப்பை அகற்றுதல் தொடர்பாக பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கினர். அப்போதெல்லாம் மாநகர சபை எல்லைக்குள் வாரத்துக்கு ஒருமுறை குப்பை அகற்றுவதே கடினமான விடயமாக இருந்தது. சாதாரண குப்பை அகற்றும் வேலையை கூட செய்ய முடியாத கையாலாகாத மாநகர சபையாக இருக்கின்றதே என்ற அங்கலாய்ப்பு மக்கள் மத்தியில் காணப்பட்டது.

ஆனால் இன்று இலங்கையில் அதிகூடிய கழிவு முகாமைத்துவம் செய்யும் மாநகர சபையாக கல்முனை மாநகர சபை உள்ளது. இந்த விடயம் UNOPS அமைப்பின் அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 40 தொன்கள் குப்பை எமது மாநகர சபையினால் அகற்றப்படுகிறது.

நான் மாநகர சபையை பொறுப்பேற்ற பொழுது அங்கு எட்டு ட்ராக்டர் வண்டிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. இவைகள் சிறிய சிறிய பளுதுகளின் காரணமாகவே இவ்வாறு வீசப்பட்டு கிடந்தன. நாங்கள் அவற்றை திருத்தியமைத்து இன்று ஒரு வீதிக்கு வாரத்தில் மூன்று தடவை குப்பைகளை சேகரிக்க நாம் ட்ராக்டர் வண்டிகளை அனுப்புகிறோம்.

ஒரு காலத்தில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் மின்விளக்குகள் ஒளிராத நிலை காணப்பட்டது. எனினும் இன்று சகல வீதிகளிலும் இரவில் நாம் மின்குமிழ்களை எரிய விட்டுள்ளோம்.

மக்களின் பிரதான் எதிர்பார்ப்புகள் இரண்டையும் நாம் நிறைவேற்றி வருகிறோம்

உங்களுக்கும் சக மாநகர சபை உறுப்பினர்களுக்கும் குறிப்பாக ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் உறவுகள் எவ்வாறு உள்ளது?

நான் சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்டவன். எனினும் பிரதேச வாதம் என்பது நான் வளர்ந்த சூழலில் காணப்படவில்லை.

நான் மேயராக பொறுப்பேற்ற பொழுது எமது கட்சித்தலைவர் என்னிடம் இந்த மாநகர சபையை எதிர்க்கட்சி ஆளும்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்து ஒரு முன்மாதிரியான வகையில் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு இனங்க இரு தரப்பு உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து சுமுகமான முறையில் ஒன்றரை வருட காலம் மாநகர சபையை கொண்டு செல்ல முடிந்தது.

எனினும் இரண்டு வருடத்தின் பின்பு இந்த மேயரை நாம் பதவியில் இருந்து துரத்த வேண்டும், சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவரை நாம் தொடர்ந்து பதவியில் இருத்த விடக்கூடாது என்ற பிரதேச வாதம் மற்றும் காழ்ப்புணர்வு ஒரு சிலரிடம் காணப்படுகின்றது.

இந்த அடிப்படையில் கடந்த இரு மாத காலமாக எனக்கு பல வழிகளிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. எமது கட்சியின் அரசியல்வாதிகள் சிலர் இந்த நோக்கத்தில் எனக்கு எதிராக திரை மறைவு குழி பரித்தல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

Kalmunai Mayor (2)
இதன் ஒரு அங்கமாகத்தானா அண்மையில் உங்களால் அமைக்கப்பட்ட நூல்நிலையம் திறப்பு விழா சம்பந்தமான சர்ச்சைகள் இடம்பெற்றன?

எமது மீனவர்களின் மேம்பாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவா எனக்கு இருந்தது. அரச நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக எனது சொந்த பணத்தில் இருந்தும் நான் பல நல்ல காரியங்களை செய்துள்ளேன். அவற்றை பட்டியலிட விரும்பவில்லை.

இந்த மீனவர் நூலகத்துக்கு எனது தந்தை மர்ஹூம் மீராசாஹிப் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. எமது மாநகர சபை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் திறப்பு விழாவுக்கு முதல் நாளிரவு நூலகத்துக்கு வருகை தந்து அனைத்தையும் பார்வையிட்டு அடுத்த நாள் திறப்பு விழாவுக்கு நாங்கள் சமூகம்ளிப்போம் என என்னிடம் உறுதி அளித்துவிட்டு சென்றனர்.

அடுத்த நாள் எமது முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை சபை உறுப்பினர் ஜமீல் எமது ஆளும் கட்சி உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த விழாவுக்கு போகக்கூடாது என கூறியுள்ளார்.
இதற்கு இரண்டு நாட்களின் முன்னர் குறித்த மாகாணசபை உறுப்பினர் தனக்கு சொந்தமான கல்வி நிறுவனத்துக்கு எமது ஆளும் தரப்பு உறுப்பினர்களை அழைத்து இந்த விழாவை பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
விழாவுக்கான அழைப்பிதழில் நான் அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களது பெயர்களையும் அச்சிட்டு அவர்களிடம் நேர்முகமாக இது தலைவர் கலந்து கொள்ளும் விழா எனவே நீங்கள் அனைவரும் இதில் பங்கேற்றக வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அவர்களும் என்னிடம் கலந்து கொள்வதாக உறுதி அளித்திருந்தனர்.

இதனிடையில் மாகாணசபை உறுப்பினர் ஜமீல் அவர்கள் மூன்று நாட்களாக கிழக்கு மாகாணசபை முதல்வர் அவர்களுக்கு நெருக்குதல்களை கொடுத்து இந்த விழாவை தடுத்து நிறுத்த முயன்றார். 

இதன் விளைவாக முதலமைச்சர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு இந்த விழாவை தடுத்து நிறுத்துமாறு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் எமது மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் நான் அந்த கடிதத்தை காணவில்லை. இந்த விடயம் சம்பந்தமாக முதல்வர் என்னிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவுமில்லை.

இவ்வாறு இந்த விழாவை தடுத்து நிறுத்த சகோதரர் ஜமீல் அவர்கள் பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டார்.

இங்கு ஜமீலா மேயரா என்ற சவால் ஏற்பபாட்டது. 

இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட நான் மேயராக பதவி வகித்தாலும் இல்லாவிட்டாலும் இந்த விழாவை நடத்தியே தீருவது என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.

திறப்பு விழாவுக்கு குறித்த தினத்தன்று தலவைர் அவர்கள் முக்கியமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவேண்டி இருந்ததால் விழாவை ஒரு நாள் பிறபடுத்தி தலைவர் வருகையுடன் சிறப்பாக நடத்திக்காட்டினேன்.

எமது ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு அவர்கள் கோரும் வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டு மிகவும் நட்புடன் என்னுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஒன்றரை வருட காலம் மாநகர சபை நிருவாகத்தை திறம்பட நடத்தினோம். எனினும் தற்போது அவர்கள் எமது உள்ளூர் அரசியல் வாதியால் எனக்கு எதிராக தூண்டிவிடப்பட்டு எனக்கெதிராக முதல்வரிடம் முறையிடும் அளவுக்கு கொண்டு வரப்பட்டார்கள். இந்த வகையில் ஆறு உறுப்பினர்கள் எனக்கு எதிராக செயற்படுவதாக உணர்கிறேன். 
எனினும் அவர்கள் எவரும் எனது முகத்துக்கு நேராக என்னை இதுவரை குற்றம் சாட்டவில்லை.

இவ்வாறு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயற்படும் பொழுது மாநகர சபை நிர்வாகத்தை முன் கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்படும் அல்லவா?

இவ்வாறு சிக்கல்களை எதிர்நோக்க இடமுண்டு. இவர்கள் ஒருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே வேலை செய்கிறார்கள். நான் ஒரு நாகரிகமான அரசியலை முன்னெடுத்து வருகின்றேன். நான் எந்த பிழையும் செய்யவில்லை. எனவே எனக்கு எவரையும் கெஞ்சி அரசியல் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. அவர்கள் என்னுடன் இணைந்து மக்கள் சேவை செய்ய முன்வரும் பட்சத்தில் அவர்களை அரவணைத்து செல்ல நான் தயாராகவே இருக்கிறேன்.

அண்மையில் தலைவர் கூட அவர்களை அழைத்து அனைவருடனும் கலந்துரையாடி அவர்களை ஒற்றுமைப்படுத்தினார். மேயர் ஏதும் தவறிழைக்கும் பட்சத்தில் அதை தனக்கு அறிவிக்குமாறு தலைவர் கூறினார். அங்கு அனைவரும் முஸாபஹா செய்து விட்டு பின்பு முனாபிக் தனமாக நடக்கின்றனர்.

இந்த நிலையில் என்னால் எவ்வளவு தூரம் இந்த சபையை கொண்டுசெல்ல முடியுமோ அவ்வளவு தூரம் நான் இந்த சபையை கொண்டு செல்வேன்.

(பகுதி இரண்டில் தொடரும்……….)

பகுதி இரண்டில்:
  • ஜமீல் முனாபிக் தனமான அரசியல் செய்கிறார்
  • முபாரக் மௌலவி தலைகால் புரியாமல் பேசுகிறார்
  • பொது பல சேனாவை கல்முனைக்குள் புகுத்த தமிழ்க்குழு ஒன்று முயல்கிறது
  • இன்னும் பல பரபரப்பான விடயங்கள் - விரைவில் எதிர்பாருங்கள்


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by