சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோர் தங்கள் பணி அந்தஸ்தை
சீர்படுத்த அல்லது தங்கள் தாயகத்திற்கு திரும்பிப் போகவென வழங்கப்பட்டுள்ள
பொதுமன்னிப்பு குறித்து ஜித்தாவில் உள்ள இலங்கையின் புதிய தூதுவர் வடிவேல்-
கிருஷ்ணமூர்த்தி இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர்
அப்துல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக ‘‘அரபு நியூஸ்’’ பத்திரிகை
செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சவூதி அரேபியாவில்
தங்கியிருப்பதற்கான தகுந்த ஆவணங்கள் எதுவுமின்றி செலவுக்கு பணமின்றி
நாதியற்றிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் இந்தப் பொது
மன்னிப்பின் மூலம் நன்மையடைந்துள்ளனர். இதன் மூலம் கணிசமான அளவிலான
இலங்கையர்கள் தங்கள் வேலை கொள்வோரை மாற்றியும் புதியதோர் இகாமாவைப்
பெற்றும் தங்கள் அந்தஸ்தை சட்டபூர்வமாக்கிக் கொள்ளவும் அல்லது தாய்
நாட்டிற்கு திரும்புவதற்கான தற்காலிக பிரயாண அனுமதிப் பத்திரங்களைப்
பெற்றுக்கொள்ளவும் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னரால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் கீழ் றியாத் மற்றும்
ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 17,000 பேரை ஆவணப்படுத்தியுள்ளதாகவும்
சட்டவிரோத பணியாளர்கள் தாய் நாட்டிற்கு திரும்பிப் போவதற்கோ அல்லது இங்கு
கண்ணியத்துடன் பணியாற்றுவதற்கோ இந்தத் திட்டமானது வழிசமைத்துள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் சவூதி அரேபியாவும் பல சகாப்த காலமாக நெருங்கிய முறையில் இரு
தரப்பு உறவுகளை பேணி வருவதாகவும் இத்தகைய வரலாற்று ரீதியான உறவுகள்,
தூதுவர் என்ற வகையிலான தனது பதவிக் காலத்தில் மென்மேலும்
பலப்படுத்தப்படுமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தனது தூதரகத்தை கடந்த 1983ஆம் ஆண்டு ஜித்தாவில் அமைத்திருந்ததுடன்
அதன் முதலாவது தூதுவராக டிக்மன் டி அல்விஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து கடந்த 1993ஆம் ஆண்டு சவூதி அரசாங்கம் பதிலுக்கு கொழும்பில்
தூதரகமொன்றை நிறுவி அதற்கு பொறுப்பாக அப்துல்லாஹ் அல் - ஸஹ்சானியை
நியமித்திருந்தது. பின்னர் இலங்கைத் தூதரகம் கடந்த 1985ஆம் ஆண்டில் தலைநகர்
றியாத்திற்கு நகர்த்தப்பட்டது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கை மக்கள் வளமிக்க சமுதாயம்
ஒன்றை கட்டியெழுப்பவென சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட நன்கொடைகள்
மற்றும் முதலீடுகள் குறித்தும் நன்றி நவின்ற புதிய தூதுவர் தங்களின்
உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கென சவூதி அரேபிய நிதியத்தின் மூலம்
வழங்கப்பட்ட கடன் பற்றியும் அத்தகைய நிதியைக் கொண்டு கிண்ணியாவில் உள்ள
மிகவும் நீளமான பாலத்தின் நிர்மாணப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றமை
குறித்தும் பிரஸ்தாபித்தார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக கிருஷ்ணமூர்த்தி பதவியேற்பதற்கு
முன்னர் அவர் வெளிவிவகார அமைச்சில் தென்கிழக்காசிய மற்றும் சார்க்
நாடுகளுக்கான பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment