ஆஸாத் சாலியின் கைதுக்கு பின்னால்
இருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கான செய்தியை புரிந்து கொள்ளாமல், அதன்
அரசியல் நோக்கங்களை தவறாக அர்த்தம் கற்பிக்கின்ற பல பதிவுகள்
முகப்புதகங்களிலும்,சமூக வலை தளங்களிலும் வலம் வந்து
கொண்டிருக்கின்றன.அவற்றின் மீதான ஒரு கண்ணோட்டமே இந்தப் பதிவாகும்.
ஆசாத் சாலியின் கைது ஒரு வெறும் நாடகம்
என்று சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. எதனை அடிப்படையாக
வைத்து இப்படி எழுதுகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. சிலர் கற்பனை
செய்து கொண்டு அரசாங்கம் தன் மீது முஸ்லிம் மக்கள் மத்தியில் இழந்து
வரும் ஆதரவுத் தளத்தினை, ஆசாத் சாலியை ஹீரோவாக்கி அவர் பக்கம் திருப்பி
அதனை தேவையானபோது தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே ஒரு
நாடகம் அரங்கேற்றப்படுவதாக எழுதுகின்றனர். இது மிகவும் சிறு பிள்ளைத்தனமான
ஒரு வாதமாகும்.
அப்படி ஒரு நாடகத்தினை அரங்கேற்றி
முஸ்லிம்களின் வாக்குகளை தக்கவைக்க வேண்டிய எந்தவொரு தேவையும்
அரசாங்கத்துக்கு தற்போதைய நிலையில் இல்லை. தனிச் சிங்களவர்களின்
வாக்குகளின் மூலம் தம்மை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற
நிலையில் அதனை நோக்கியே அரசாங்கம் விடயங்களை நகர்த்திக் கொண்டு செல்கிறது.
தவிரவும் அப்படியொரு நாடகத்தினை
செய்வதற்கான நோக்கம் ஆசாத் சாலிக்கும் அரசாங்கத்துக்கும்
இருந்திருக்குமானால்,அதற்கான தருணமாக இந்த நாட்களை அவர்கள் தேர்வு
செய்திருக்க மாட்டார்கள்.ஏனெனில் இது தேர்தல் ஒன்றை அண்மித்த நாட்களும்
அல்ல.
இலங்கையில் மிகப்பெரும் மனித உரிமை
மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன.அங்கு கருத்துச் சுதந்திரம் இல்லை.எழுத்துச்
சுதந்திரம் இல்லை என்பவற்றை காரணம் காட்டி இலங்கையில் நடைபெறவிருக்கும்
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற
அழுத்தக் குரல்கள் சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்
நேரத்தில் அவற்றை உண்மைப்படுத்தும் விதத்தில் சீன் போடுவதற்கு தற்போது
ஆட்சியில் இருப்பது முட்டாள்தனமான அரசாங்கமும் அல்ல. ஒரு நபரை இந்த
அரசாங்கம் முஸ்லிம்களுக்குள் ஹீரோவாகக் காட்டுவதற்கு எவ்வளவோ வழிகள்
இருக்கையில் தமக்கு அசௌகரியத்தை தேடித் தரும் ஒரு வழிமுறையை அது தேர்வு
செய்யமாட்டாது என்பதை உறுதியாக நம்பலாம்.
மேலும், ஆஸாத் சாலியின் கைது பயங்கரவாத
தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருப்பது முக்கியமான விடயமாகும்.
நாட்டில் யுத்தமே இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் மீதான
விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சட்டத்தின்
மூலம் அரசாங்கம் ஒரு நபரை ஹீரோவாக்குகின்ற விசப்பரீட்சையை
எந்தளவுக்கு செய்ய நினைக்கும் என்பதை ஒரு கனம் மனக்கண் முன்னே நிறுத்திப்
பார்க்க வேண்டும்.
நேற்றைய நாள் வரை ஆசாத் சாலியின் வெறும்
உணர்ச்சியூட்டும் பேச்சுக்களால் உந்தப்பட்டு அவரை தலைவராகக் கொண்டாடிய
நபர்களால்தான் இன்று அதற்கு நேர்மாறான முறையில் பரப்புரைகள்
செய்யப்படுகின்றன.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்பதற்கான விடை
முஸ்லிம்களுக்குள் மிக ஆழமாகப் பதிந்திருக்கும் மத நம்பிக்கைகளில் இருந்தே
பிறக்கின்றது. ஆசாத் சாலியும்,அவர் மகளும் பௌத்த விகாரை ஒன்றுக்கு மலர்த்
தட்டு கொண்டு சென்றார்கள் என்ற செய்தியை அறிந்த அவரது
அபிமானிகளும்,ஆதரவாளர்களும் அவரை வஞ்சிக்கத் துணிந்ததன் விளைவுகளே இவை.
அவர் மீது அரசியல் காழ்ப்புணர்வு
கொண்டவர்களும், அரசியல் லாபம் தேட தருணம் பார்த்துக் கொண்டிருந்தவர்களும்
மிக வசதியாக தம் அரசியல் தலைவர்களின் இலட்சனங்களை மறந்து மத
கோட்பாடுகளுக்குள் தமது அரசியல் தலைவர்களின் அசிங்கங்களை மறைத்துக்
கொண்டு ஆசாத் சாலியின் மீது சேறடிக்க துவங்கினர். நன்றாக கொம்பு சீவிக்
கொண்டும் இருக்கின்றனர்.
மதக் கோட்பாட்டு ரீதியான வரை
முறைகளுக்குள் எமது அரசியல் வாதிகளையோ,தலைவர்களையோ தேடத் துவங்கினால்
ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். சோபாவில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு முன்னே
கை கூப்பி,நான்காய் மடிந்த தலைவர்கள் எத்தனை பேர்? அர்த்த ராத்திரிகளில்
அரங்கங்களில் கூத்தடித்த தலைவர்கள் எதனை பேர்? வெளி நாட்டுப் பயணங்களில்
குடியும் கும்மாளமுமாய்,குடித் தனமும் நடாத்தி விட்டு வந்த தலைவர்கள்
எத்தனை பேர்? வெளிநாட்டு ஏஜண்டுகளின் பணத்தில் உல்லாச ஹோட்டல்களில்
விருந்து வைத்து சதித் திட்டங்கள் தீட்டியவர்கள் எத்தனை பேர்? கணக்குப்
போட்டுப் பார்த்தால் முஸ்லிம்களுக்கு தலைவர்களே இருக்க மாட்டார்கள்.
இன்று அதுவல்ல பிரச்சினை. இவற்றை
விடவும் முதன்மையான பிரச்சினை இன்றைய அரசின் அடக்கு முறையை
சிறுபான்மையினராகிய நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதேயாகும்.
ஆஸாத் சாலி என்ற ஒரு நபருக்கெதிராக
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தினை பிரயோகித்துள்ளமையானது
எதிர்காலத்தில் நாட்டில் உள்ள எந்தவொரு சிறுபான்மையினருக்கு
எதிராகவும்,அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்போருக்கு எதிராகவும் இந்த
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தினை எவ்வாறு பிரயோகிக்கப்போகிறது
என்பதற்கான முன்மாதிரியாகும்.
எந்த நபருக்கெதிராக இந்த சட்டம்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதல்ல.என்ன காரணத்துக்காக இச்சட்டம்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.
எதிர் காலத்தில் எந்தவொரு நபரோ அல்லது
குழுவோ நீதி,சுதந்திரம்,உரிமை தொடர்பில் குரல் எழுப்பாமல் அவர்களை அடக்கி
விடச் செய்யும் நோக்கத்திலேயே இச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்சொன்ன காரணங்களுக்காக இச் சட்டம் யார்
மீதும்,எந்த இனத்தின் மீதும்,எந்த மதத்தின் மீதும் பாயும் . அதற்கு தூய
மார்க்கத்தை பின்பற்றுவோர்,கலப்படமான மார்க்கத்தைப் பின்பற்றுவோர் என்ற
பாகுபாடு கிடையாது.
எனவே, நாளை எமது குரல்வளையை நசுக்கப்
போகின்ற இந்த சட்டத்தினை எமது பொதுவான எதிரியாகக் கொண்டு நாம் அனைவரும்
ஒருமித்த குரலில் செயற்படுவது அவசியமாகும்.
அத்தோடு அரசாங்கம் தனது விசப்பரீட்சைக்கு
தேர்வு செய்திருக்கின்ற ஆசாத் சாலியை மீட்டெடுக்க ஜனநாயக
வரைமுரைகளுக்குட்பட்ட அத்தனை முயற்சிகளையும் செய்வதற்கு முஸ்லிம் சமூகம்
ஒன்றுபட்டு முயல வேண்டும்.
Post a Comment