என்னுடைய பார்வையில் இந்நாட்டின் அரசியல் ஒரு நெருக்கடியான
கட்டத்திற்கு வந்திருக்கிறது என்பதைத்தான் நான் பார்க்கின்றேன். எனவேதான்
வன்முறை அரசியலில் இருந்து விடுபட்டு சாத்வீக அரசியலின் சாத்தியப்பாடுகளை
மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் இருந்து
கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவுறுத்துவதற்காகத்தான் என்னுடைய இந்த தந்தை
செல்வாவின் ஞாபகர்த்த உரையின் சாத்வீக போராட்டமும் பிரயோக வலுவுள்ள
அரசியலும் என்னும் தலைப்பாகும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி
அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் 2013.08.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலையகமான தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில்
நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரைகளின் தொகுப்பு அடங்கிய
புத்தகத்தை வெளியிட்டு வைத்து அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையில்
கூறினார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
தந்தை செல்வாவை தெற்கில் இருப்பவர்கள் பிரிவினைவாதியாகத்தான்
பார்த்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஏன் இந்த புத்தகத்தை
வெளியிடுகிறீர்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் எனது செயலாளர்
நாயகத்திடம் வினவியுள்ளார். ஏன் எதற்காக இச்சந்தர்ப்பத்தில் பேச வேண்டும்
இது அதற்கு உகந்த காலம் அல்ல. இதனை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும்
அவர் கூறியுள்ளார். அவரையும் இக்கூட்டத்திற்கு வருமாறு அழைப்பிதழ்
அனுப்பியிருந்தேன் அவர் இங்கு வரவில்லை. இன்றிருக்கும் கட்டத்தையும் விட
இதனைப் பேசக்கூடிய கட்டம் வேறு இருக்க முடியாது. தந்தை செல்வாவின்
சாத்வீகப் போராட்டம் ஒரு சாமான்யமான போராட்டம். இதற்கு அரசியலுக்கு அவர்
கொடுத்த விலை சாமான்யமானது. தெற்கிலே 1967-1970 காலத்தில் .சிங்கள
இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு துணிந்த ஒரு நிலைதான் வடக்கிலும் ஒரு
ஆயுதப் போராடாத்திற்கு வித்தை ஒரு வழியை ஏற்படுத்திய நிலைமை புதிய
அரசியலமைப்பின் மூலம் உருவானது. என்று சொன்னால் அது மிகையாகாது.
அதேமாதிரி அடுத்த அமைப்பில் அரசாங்கம் 5/6ல் பெரும்பான்மையோடு
மிகக்கொடுரமாக அந்த தெற்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஏறத்தாள 10 ஆயிரம்
இளைஞர்களைப் பலி கொண்டு அடக்கப்பட்ட நிலையிலும் அடுத்த அரசாங்கம் மீண்டும்
அந்த தெற்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் மீள எழுர்ச்சி பெறக்கூடிய நிலை
ஏற்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வன்முறை அரசியல் ஒரு
சமூகத்திற்கு மாத்திரம் சொந்தமாக இருக்கவில்லை என்பதைத்தான் நாம்
பார்க்கின்றோம். மீண்டும் சக்கரம் சுழன்று அதே இடத்தில் வந்து.நிற்கின்றது.
ஒரு வன்முறை அரசியல் ஒடுக்கப்பட்டு விட்டது என்பதற்காக மீண்டும் அது தலை
தூக்காது என்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்று யாரும் முடிவுக்கு வந்து
விடமுடியாது.
எனவேதான் மீண்டும் மீண்டும் இந்த வன்முறை அரசியலை முழுமையாக வெறுத்து
ஒதுக்கி சாத்வீகமான தனது அரசியலைச் செய்த ஒரு நேர்மையான அரசியல்வாதி தந்தை
செல்வா பற்றி இந்தக் கட்டத்தில் பேசாமல் வேறு எந்தக் கட்டத்தில் பேசுவது.
ஆனால் எம்மவர்கள் பிரிந்த மனப்பான்மையோடுதான் அரசியல் செய்கின்றார்கள்.
உண்மையைப் பேசுவதற்கு தயங்குகிறார்கள். இந்தக் கட்டத்தில் மிகத் தெளிவாக
நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மையான சில அம்சங்கள் இருக்கின்றன.
பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்த தேசிய இனப் போராட்டம் ஒன்றில் அவை
ஒவ்வொன்றினதும் தனித்துவங்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பதில் தமிழ்
இயக்கங்களிடமிருந்து அரசியல் போதாமையின் வேளிப்பாடுதான் இந்த வன்முறை
செயற்பாடுகள் என்பதை நாங்கள் மனம் கொள்ள வேண்டும்.
தந்தை செல்வா மிகுந்த கரிசனையோடு கட்டியமைத்த முஸ்லிம்களையும்
அரவணைத்துச் செல்லும் சுய நிர்ணயக் கோட்பாடு கைவிடப்பட்டு பாஸிஸ
அடக்குமுறையிலான தமிழ் ஈழப் போராட்டமாக அது முஸ்லிம்களை அச்சுறுத்திய போது
முஸ்லிம்கள் அவர்களிடமிருந்து தூர விலகிச் செல்ல முயன்ற போது அவர்களின்
முயற்சியின் போக்கை அரசியல் ரீதியாக அனுகமுடியாத அல்லது அனுகத் தெரியாத
விடுதலைப் புலிகள் தமது இராணுவக் கண்ணோட்டத்தில் தீர்வு காணப்பட்டதின்
விபரிதம் தமிழ் முஸ்லிம் பிரிவினைவாதத்தை உருவாக்கியது என்பதை நாம் உணரல்
வேண்டும். அந்தப் பின்னணியில்தான் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில்
இருக்கின்ற புதிய அச்ச உணர்வு. இந்த அச்ச உணர்வை அரசுக்கு எதிரான வெறுப்பு
உணர்வாக மாற்றுவதற்கு இடம் கொடுக்காமல் அதை எதிர் கொள்வதற்கான சாத்தியமான
வழி முறைகளைப் பற்றி மிகத் தீவரமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில்
இருந்து கொண்டிருக்கின்றோம். நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போது
மஹியங்கனையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்
எனக் கேள்விப்படுகின்றோம்.
வெறும் 50 முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்கின்ற கடைத்தெருவில்
அவர்களுக்கு தொழுகைக்காக இருக்கின்ற ஒரு பள்ளிவாசலை இல்லாமலாக்க வேண்டும்
என்ற இந்தப் போராட்டம் ரமழான் மாதத்தில் பள்ளிவாசலுக்குள் பன்றி இறைச்சி
இரத்தங்களை வீசுகின்ற மிகக்கேவலமான ஒரு செயல்பாடு ஆரம்பிக்கப்படுமாக
இருந்தால் அதக் கண்டிப்பதற்கு அரசின் மேலிடம் தயங்குகின்றது என்றால்
அதைப்பற்றிய பொறுப்புணர்வு குறைந்த பட்சம் இச் செயல்பாடுகளை வண்மையாகக்
கண்டிக்கின்றோம் என்ற அறிக்கையாவது விடவில்லையே என்கின்ற ஆதங்கம்தான் இன்று
முஸ்லிம் மக்களை ஆத்திரம் அடைய வைத்திருக்கின்றது. இந்த தீவிரவாத
செயல்பாடுகளை கட்டுப்படுத்த தம்மால் முடியவில்லை என்றாலும் கண்டிக்கவாவது
முடியவில்லையா? என்றுதான் கேட்கின்றோம். இந்த நிலையில்தான் நாங்கள்
மீண்டும் தந்தை செல்வாவின் புத்தளம் பள்ளிவாசல் தொடர்பாக கண்டித்து பேசியதை
முஸ்லிம் சமூகம் இன்றும் நினைவு கூறுகின்றது.

Post a Comment